பாகமதி – திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 27 Jan, 2018 01:09 pm


நட்சத்திரங்கள் : அனுஷ்கா, உண்ணி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத், பிரபாஸ் சீனு, தன்ராஜ், முரளி சர்மா, தேவதர்ஷிணி, ஒளிப்பதிவு : மதி, இசை : எஸ்.தமன்,  இயக்கம் : ஜி.அசோக், தயாரிப்பு : ஸ்டுடியோ கிரீன்-யுவிசி கிரியேஷன்ஸ். 

மாநில அரசின் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் சாமி சிலைகள் கடத்தப்படுகின்றன. இதில் அலட்சியமாக இருக்கும் மாநில அரசைக் கண்டித்து,பதவி விலகுவேன் என்று அறிவிக்கிறார் மத்திய அமைச்சர் ஜெயராம். இதனால் ஆட்சிக்கு ஆபத்து வருமோ என்கிற அச்சத்தில் மத்திய அமைச்சர் ஜெயராமை, அரசியலை விட்டே விரட்டியடிக்க ஓடவிடவேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார் மாநில முதலமைச்சர். அதற்காக, ஜெயராம் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதற்காக, ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆஷா சரத்தை  பயன்படுத்துகிறார். 

மக்கள் மத்தியில் தூய்மையான சுத்தமான அரசியல்வாதியாக வலம் வரும் ஜெயராம் மீது ஊழல் குற்றம் சுமத்த போதிய சாட்சியங்கள் இல்லாததால், அவரிடம் பர்ஷனல் செகரட்ரியாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனுஷ்காவை, ஜெயராமுக்கு எதிராக திருப்பிவிட திட்டம் தீட்டுகின்றனர். 

இந்நிலையில், காதலன் உன்னி முகுந்தன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அனுஷ்காவை விசாரணைக் கைதியாக வெளியே கொண்டுவரும் ஆஷா, அனுஷ்காவை ஆள்நடமாட்டம் இல்லாத பாகமதி பங்களாவில் வைத்து விசாரிக்கிறார்.

விசாரணையில், ‘மத்திய அமைச்சர் ஜெயராம் கறை படியாத அப்பழுக்கில்லாத அரசியல்வாதி’ என அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் அனுஷ்கா. ஆனால், அதை நம்பாத ஆஷா, மேலும் டார்ச்சர் செய்கிறார்.     

இதற்கிடையே, அந்த பேய் பங்களாவில் தனியாக இருக்கும் அனுஷ்காவுக்குள் பாகமதியின் ஆவி புகுந்துகொள்ள, போலீஸ் திணறுகிறது. மத்திய அமைச்சர் ஜெயராம் நிஜமாகவே தூய்மையானவர் தானா? அனுஷ்காவின் காதலர் உன்னி முகுந்தனை கொன்றது யார்? அந்த பங்களாவில் பாகமதி என்கிற அமானுஷ்ய சக்தி  இருந்ததா?  என்பது மீதிக்கதை. 


தென்னிந்திய சினிமாவிலேயே வரலாற்று பின்னணி உள்ள அமானுஷ்ய கதைகளில் அதிகமாக நடித்த பெருமையுள்ள  அனுஷ்காவின், மற்றுமொரு வரலாற்றுப் பின்னணியைக்கொண்ட அமானுஷ்ய கதை! இதில், ஐ.ஏ.எஸ்.அதிகாரி சஞ்சலா, அமானுஷ்ய சக்தி கொண்ட பாகமதி என இரண்டு மாறுபட்ட கெட்டப்பில் அசத்துகிறார் அனுஷ்கா. அனுஷ்காவின் காதலராக வரும் உன்னி முகுந்தன் ஒரு சமூகப் போராளியாக கொஞ்ச நேரமே வந்தாலும், நெஞ்சம் நிறைகிறார். அத்தனை தகிடு தத்தங்களையும் அமைதியாக செய்து முடிக்கும் அசலான அரசியல்வாதியாகவே மாறியிருக்கிறார்   ஜெயராம். போலீஸ் அதிகாரி ஆஷா சரத், முரளி கிருஷ்ணா, தன்ராஜ் சுக்ராம், பிரபாஸ் ஸ்ரீனு, தலைவாசல் விஜய் ஆகியோர் தங்களது கதபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர். 

அரசியல் பிரச்னையை அமானுஷ்ய சக்தி பின்னணியில் கொஞ்சம் காதல், கொஞ்சம் ஆக்‌ஷன், கொஞ்சம்  திகில் என அனைத்தும் கலந்து பிசைந்த பஞ்சாமிர்தமாய் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜி.அசோக். ஆனால், பார்த்து சலித்த திகில் காட்சிகள், திருப்பம் இல்லாத திரைக்கதை போன்ற பலவீனங்களால் படத்தில் சுவாரஸ்யம் குறைந்து போகிறது.

எஸ்.தமனின் மிரட்டலான பின்னணி இசையும், ஆர்.மதியின்  ஒளிப்பதிவும் படத்துக்கு பலம். ‘பாகமதி’ ரேட்டிங் 2.5/5

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.