மன்னர் வகையறா – திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 28 Jan, 2018 09:55 pm


நட்சத்திரங்கள்: விமல், ஆனந்தி, சாந்தினி, கார்த்திக், பிரபு, ஜெயப் பிரகாஷ், வம்சி கிருஷ்ணா, ஸ்ரீனிவாஸ், ரோபோ சங்கர், சிங்கம் புலி, சரண்யா, மீரா கிருஷ்ணன், நீலிமா ராணி, ஜூலி, இசை: ஜேக்ஸ் பிஜோஸ், ஒளிப்பதிவு: சுராஜ் நல்லுசாமி, இயக்கம்: பூபதி பாண்டியன், தயாரிப்பு: விமல்       

கிராமத்தில் பெரிய தலக்கட்டாக இருக்கும் பிரபுவின் மகன்கள் கார்த்திக்-விமல். அதேபோல, பக்கத்து ஊரில் முக்கிய பிரமுகராக இருக்கும் ஜெயப்பிரகாஷ் மகன் வம்சி கிருஷ்ணா, இவரது தங்கைகள் சாந்தினி-கயல் ஆனந்தி. 

ஜெயப்பிரகாஷ் குடும்பத்திற்கும், அவரது மனைவி சரண்யாவின் அண்ணன் குடும்பத்திற்கும் நீண்டநாள் பகை. பழைய பகையை மறந்து இரு குடும்பத்தையும் இணைப்பதற்காக மூத்தவள் சாந்தினியை, சரண்யா அண்ணன் மகனுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்கின்றனர். திருமண ஏற்பாடுகள் நடக்கும்போது, தனது அண்ணன் கார்த்திக்கின் காதலியான சாந்தினியை கடத்தி வந்து இருவரையும்  சேர்த்து வைக்கிறார் விமல். 

இதனால், வம்சி கிருஷ்ணவின் பகை, விமல் குடும்பத்தின் மீது திரும்புகிறது. மூத்தவளால் ஏற்பட்ட களங்கத்தை போக்க, இளையவள்      ஆனந்தியை திருமணம் செய்துவைக்க முடிவு செய்கின்றனர். அந்த திருமணத்தை தானே முன்நின்று நடத்திவைப்பதாக பிரபு வாக்கு கொடுக்கிறார். அப்போது, விமல்–ஆனந்தி காதல் தெரிய வருகிறது.  

விமல்-ஆனந்தி காதல் என்னவானது? மூன்று குடும்பமும் ஒன்று சேர்ந்ததா? என்பது மீதிக்கதை.


கிராமத்தில் மூன்று குடும்பங்கள், பெண் கொடுப்பதில் ஏற்படும் பகை, அடிதடி, அருவாள் வீச்சு என ரொம்ப ரொம்ப சாதரணமான கதையை கையில் எடுத்துக் கொண்டு, அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்குள் ஆணிவேராக இருக்கும் அன்பு, பாசம், வீரம் போன்ற உணர்வுகளை வைத்து, கொஞ்சம் காமெடி கலந்து கமர்ஷியல் பேக்கேஜ் ஆக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பூபதி பாண்டியன். ஆனால், சலிப்பே மிஞ்சுகிறது!  

வக்கீலுக்கு படித்துவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் விமல், ஆனந்தி யைக் கலாய்ப்பதும், பிறகு காதலிப்பதும், இதற்கு நடுவே எதிரிகளை அருவா எடுத்து வீசுவதும், ஆக்‌ஷன் காட்சிகளில் ஆவேசத்தைக் காட்டுவதுமாக இருக்கிறார். கல்லூரி மாணவியாக வரும் ‘அழகான வாயாடி’ ஆனந்தி, காமெடி செய்வதாக நினைத்து கத்தி கூப்பாடு போடுவதை தாங்க முடியவில்லை! வம்சி கிருஷ்ணா, ஸ்ரீனிவாஸ் இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டுகின்றனர். ரோபோ ஷங்கரும், சிங்கம் புலியும் சிரிக்க வைக்க முயற்சி செய்கின்றனர்.

கிராமத்தில் பெரிய தலக்கட்டாக இருக்கும் பிரபு, அவரின் மனைவி மீரா கிருஷ்ணன், சம்பந்தி ஜெயப்பிரகாஷ்- சரண்யா, கார்த்திக், சாந்தினி,  நீலிமா ராணி ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக் கிறார்கள். ஒரே ஒரு சீனில் வந்தாலும் கலக்குகிறார் யோகி பாபு. கிளைமாக்சில் வந்து தலைகாட்டுகிறார் ஜூலி.

பின்னணி இசையில் காது சவ்வைக் கிழிக்கிறார் ஜேக்ஸ் பிஜோஸ். சுராஜ் நல்லசாமியின் கேமரா, கிராமத்தை ரம்மியமாக காட்டுகிறது.  

`மன்னர் வகையறா' ரேட்டிங்  2.5/5


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.