படை வீரன் – திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 02 Feb, 2018 05:55 pm

 

வேலைக்குப் போகாமல் நண்பர்களோடு சேர்ந்து ஊருக்குள் வம்பு இழுக்கும் கிராமத்து சண்டியர் விஜய் ஜேசுதாஸ். உள்ளூர் வாயாடியான அம்ரிதாவை கலாய்த்து, அவரை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை தெறித்து ஓடவிட்டு, கடைசியில் அம்ரிதாவின் காதலில் விழுகிறார்.     

பிறகு பொறுப்பு வந்து, எக்ஸ் சர்வீஸ்மேன் பாரதிராஜாவின் உதவியோடு போலீஸ் வேலையில் சேர்கிறார் விஜய் ஜேசுதாஸ். போலீஸ் டிரெயினிங் முடிந்ததும், அவருடைய கிராமத்தில் நடக்கும் ஜாதிக் கலவரத்தைக் கட்டுப்படுத்த போகும் ரிசர்வ் போலீஸ் படையில் விஜய் ஜேசுதாசும் இடம் பெறுகிறார். 

ஜாதிக் கலவரத்தை அடக்க தனது சொந்த பந்தங்களையே அடிக்கவும், கைது செய்யவும் வேண்டிய நிலை வருகிறது. இந்த இக்கட்டான நிலையை சமாளிக்க விஜய் யேசுதாஸ் எடுத்த முடிவு என்ன? என்பது கிளைமாக்ஸ். 


பின்னணிப் பாடகராக வலம் வந்த விஜய் ஜேசுதாஸ், ‘மாரி’ படத்தில் வில்லனாக மாறி, இப்போது, ‘படை வீரன்’ படத்தில் ஹீரோவாக புரமோஷன் ஆகியிருக்கிறார். பரட்டை தலையும் அழுக்கு லுங்கியுமாக திரிவது, வேலைக்குப் போகாமல் நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது, கும்மாளமடிப்பது, ஊருக்குள் ஒரண்டை இழுத்து அடிதடியில் இறங்குவது என கிராமத்து சண்டியர் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் விஜய் ஜேசுதாஸ். ஜாலி மைனராக இருந்த அவர், ஜாதிக் கலவரத்தை அடக்க வந்த இடத்தில் ஏற்பட்ட பரிதாபமான முடிவால் பதற வைக்கிறார்.   

நாயகி அமிர்தாவுக்கு துடுக்கான கிராமத்துப் பெண் வேடம். தன்னை ஒவ்வொரு முறையும் பெண் பார்க்க மாப்பிள்ளை வருவதாக கூறி உறவுக்காரப் பெண்ணிடம் தலை சீவி விடுமாறு கூறுவதும், அராத்தாக திரிவதுமாக கவனம் ஈர்க்கிறார்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கேரக்டரில் வரும் இயக்குநர் பாரதிராஜாவிடம் எதார்த்தமான நடிப்பைக் காண முடிகிறது. அவர் பேசும் ஒவ்வொரு வசனமும், ஜாதித் திமிரில் அலையும் மனிதர்களுக்கு சவுக்கடியாக மாறுகிறது. ஜாதி தலைவராக வரும் கவிதா பாரதி, ஹீரோ தந்தை மனோஜ்குமார், நிதிஷ் உள்ளிட்ட நண்பர்கள், நாயகனின் அக்கா, உயிர் விடும் இளம் விதவை ஆகியோர் கிராமத்து மனிதர்களை கண்முன்னே கொண்டு வருகின்றனர்.     

கார்த்திக் ராஜாவின் இசையில், தனுஷ் குரலில் ஒலிக்கும் 'லோக்கல் சரக்கா ஃபாரின் சரக்கா' என்ற பாடலும், பின்னணி இசையும் மனதில் நிற்கிறது. ராஜவேல் மோகனின் கேமிரா கிராமத்தை அழகை மிக அழகாக படம்பிடித்துள்ளது. கிராமங்களில் இன்னும் வேரோடிக் கிடக்கும் ஜாதி பாகுபாட்டை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் தனா. ஜாதிப் பற்றுள்ள ஹீரோ திடீரென மனம் மாறுவது, கிளைமாக்சில் உயிரோடு எரிக்கப்படுவது போன்ற சில குறைகளை கவனித்து திரைக்கதையை செப்பனிட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். 

இந்த படத்தின் ஸ்டில்ஸ் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்!

ரேட்டிங்:

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.