கலகலப்பு 2 - திரை விமர்சனம்

  SRK   | Last Modified : 09 Feb, 2018 05:39 pm


சுந்தர்.சி இயக்கத்தில், விமல், சிவா நடித்து சூப்பர் ஹிட்டான கலகலப்பு படத்தோட இரண்டாம் பாகம். எல்லாத்தையும் கலைச்சிட்டு ப்ரெஷ்ஷா புது பட்டாளத்தை வச்சு ஒரு படத்தை எடுத்திருக்கிறார் சுந்தர்.சி.

ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி, சதீஷ், ராதாரவி என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்; ஒளிப்பதிவு - செந்தில் குமார். அவ்னி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பாக குஷ்பூ சுந்தர் இந்த படத்தை தயாரித்துள்ளார். 


பேமிலியோட வந்து பார்க்கும்படியான படம் என சொல்லித்தான் சுந்தர்.சி ஒவ்வொரு முறையும் நம்மை அழைக்கிறார். ஆனால், சமீப காலமாக அவர் படத்தில் காமெடி குறைந்து, கிளாமர் அதிகமாகி வருவது அப்பட்டமாக தெரிகிறது. இந்த முறையும் அதே பார்முலாவை தொடர்ந்து பின்பற்றி, கிளாமர், டபுள் மீனிங் டயலாக் காமெடியை நம்பி ஒரு படம் எடுத்துள்ளார். 

கலகலப்பு முதல் பாகத்தின் கதையை மறுபடியும், கொஞ்சம் மாற்றி எழுதியுள்ளார்கள். ஒரு பக்கம் முன்னாள் அமைச்சரோட ரகசியங்கள் அடங்கிய லேப்டாப், மறுபக்கம், வைர கற்கள், இன்னொரு பக்கம் ஓட்டை ஓடைசலான ஒரு லாட்ஜ். இவற்றுக்கு நடுவே நம்ம ஹீரோக்கள் படும் பாட்டை கலகலப்பாக சொல்ல முயற்சித்துள்ளார் சுந்தர் சி. 


முதல் பாதி முழுக்க ஜீவா - கேத்ரீன், ஜெய் - நிக்கி ஜோடிகளுக்கு இடையே வரும் காதல் கதை தான். வேகவேகமாக என்னென்னமோ நடக்கிறது. கதையும் எடுபடவில்லை, சிரிப்பும் வரவில்லை. வெகு சில இடங்கள் மட்டுமே கொஞ்சம் கலகலப்பாக இருக்கின்றன. மற்றபடி ஹீரோயின்களின் கிளாமர் மற்றும் தூக்கலாக உள்ளது.


இரண்டாவது பாதியில், சிவா அறிமுகமாகிறார். சிவா, மனோபாலாவின் காமெடி ட்ராக் வந்த பிறகு படம் கொஞ்சம் சூடு பிடிக்கிறது. யோகி பாபு மற்றும் சிங்கமுத்து சேரும் இடங்களும், இரண்டாவது பாதியில் நடக்கும் ஒரு சேசிங் சீனும் தான் படத்தின் ஹைலைட். அதன் பின், முதல் பாகத்தை போலவே காமெடி கலந்த ஆக்ஷன் க்ளைமேக்ஸ்.

தமிழ் சினிமாவின் அத்தனை துணை நடிகர்களையும் படத்தில் பார்த்தது போல ஒரு பீலிங். நிக்கி கல்ராணியின் தந்தையாக வரும் விடிவி கணேஷ், யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர், தோன்றும் காட்சிகளில் எல்லாம் யாரிடமாவது அடி வாங்குகிறார்கள்.


ஹீரோ, ஹீரோயின் பெர்பார்மனஸ் எல்லாம் சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை. கிளாமருக்காகவே பாடல்கள். உப்பு சப்பில்லாத பாடல் வரிகள், சில நேரம் முகம் சுளிக்க வைக்கின்றன. நம்மவர்கள் ஏன் படத்தில் 5 பாடல்கள் வைக்கிறார்கள் என்ற மர்மம் இதுவரை புரியவில்லை. ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை ஓகே.

பல நடிகர்கள் இருந்தாலும், ஒருசில அடி உதை காட்சிகளில் மட்டும் தான் காமெடி ஒர்க் அவுட் ஆகிறது. மற்றபடி படத்தின் வசனங்கள் பெரும்பாலும் ஏமாற்றமே. ஆங்காங்கே சில இடங்களிலும், இரண்டாவது பாதியில் ஒரு 15 நிமிடமும் தான் படம் கலகலப்பு. மற்றபடி வெறும் கிளுகிளுப்புதான். முதல் பாகத்தை போன்ற காமெடி எதிர்பார்த்து செல்பவர்களுக்கு நிச்சயம் படம் ஏமாற்றமளிக்கும்.

தொய்வான முதல் பாதியை பொறுத்துக் கொண்டால், படம் ஒரு ஒன் டைம் வாட்ச் ரகம்...

நம்மளோட ரேட்டிங் : 2.5 / 5 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close