சொல்லிவிடவா – திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 10 Feb, 2018 04:19 pm


நட்சத்திரங்கள்: சந்தன் குமார், ஐஸ்வர்யா, அர்ஜுன், மொட்டை ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபு, மனோபாலா, கே.விஸ்வநாத், இசை :    

ஜெஸ்சிகிப்ட்,ஒளிப்பதிவு: வேணுகோபால், இயக்கம்:அர்ஜுன், தயாரிப்பு : ஸ்ரீராம் ஃபிலிம் இன்டர்நேஷனல்.    

தனியார் டிவி ஒன்றில் நிருபாரக வேலை செய்யும் ஐஸ்வர்யா, தாத்தா விஸ்வநாத்துடன் வாழ்ந்து வருகிறார். உறவினரான சுஹாசினியின் மகனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது.

இந்நிலையில், கார்கிலில் நடக்கும் போரை நேரில் படம் பிடிப்பதற்காக  டெல்லிக்கு செல்கிறார் ஐஸ்வர்யா. அதேபோல நாயகன் சந்தன் குமார்,  அவர் வேலை செய்யும் டிவி சார்பில் கார்கில் போரை படம் பிடிக்க வருகிறார்.

கார்கில் போரை படம் பிடிக்க வந்த இடத்தில் இருவரும் காதலில் விழுகின்றனர். அவர்கள்,கார்கில் போரை சிறப்பாக படம் பிடித்தார்களா? காதலர்கள் சேர்ந்தார்களா? சுஹாசினி மகனுடன் நடந்த நிச்சயதார்த்தம் என்னவானது? என்பது கிளைமாக்ஸ். 


'ஆக்‌ஷன் கிங்' அர்ஜுனின் ஸ்பெஷாலிட்டியே ‘தேசப்பற்று கதை’தான்! அந்த தேசப்பற்றை இந்தமுறை காதல் பின்னணியில் சொல்லியிருக்கிறார் அர்ஜுன். ஒரு பாடலுக்கும், ஒரே ஒரு காட்சிக்கும் மட்டும் வந்து தலையைக் காட்டிவிட்டு, பிறகு இயக்குநர் வேலையைப் பார்க்கப் போய்விடும் அர்ஜுன், கார்கில் போரை படம் பிடிக்கப் போனவர்கள், காதலில் விழுவதை அழகான கவிதையாக ஆக்கியிருக்கிறார். கார்கில் போரை நிஜத்தில் பார்ப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால், நாயகன்-நாயகி இருவரும் காதலை சொல்லமுடியாமல் தவிக்கும் காட்சிகள் அனுமார் வால் போல நீள்வதால், நெளிய வைக்கிறது. 

அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா தான் நாயகியாக நடித்திருக்கிறார். நீளமான வசனம் பேசுவது, காட்சிகளுக்கேற்ற உணர்வுகளை அழகாக முகத்தில் பிரதிபலிப்பது, அசத்தலாக நடனமாடுவது... என ஒவ்வொரு இடத்திலும் அசத்துகிறார் ஐஸ்வர்யா. புதுமுகம் என்கிற நடுக்கமே இல்லாமல் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார் சந்தன் குமார். நாயகியின் தாத்தா கே.விஸ்வநாத், உறவினர் சுஹாசினி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபு, பிளாக் பாண்டி போன்ற காமெடியன்கள் இருந்தும்  காமெடிக்கு வறட்சி! 

ஜெஸ்சி கிப்ட்டின் இசையில் பாடல்கள் ரசிக்க முடிகிறது. கார்கில் போரை தரூபமாக படம் பிடித்திருக்கிறது வேணுகோபாலின் கேமரா. ரேட்டிங் 3/5


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.