'நாச்சியார்' - திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 16 Feb, 2018 03:35 pm


கல்யாணத்தில் பந்தி பரிமாறும் வேலை செய்யும் ஜி.வி.பிரகாஷ், வீட்டு வேலை செய்யும் இவானா,  இருவரும் ஒரு கல்யாணத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். பிறகு, தொடரும் அந்த சந்திப்பு காதலாக மாறுகிறது. காதல் மயக்கத்தில் இருவரும் இணைகின்றனர்! அதன்பிறகு, மைனர் பெண்ணான இவானா கர்ப்பமாகிறார். இந்தக் கேஸ் போலீஸ் அதிகாரியான ஜோதிகா வசம் வருகிறது. மைனர் பெண்ணை மயக்கி, அவளை கர்ப்பமாக்கிய குற்றத்துக்காக மைனர் ஜெயிலில் அடைக்கப்படுகிறார் ஜி.வி.பிரகாஷ். இவானவை தன் வசம் வைத்துக் கொண்டு அவளிடத்தில் விசாரணை நடத்துகிறார் ஜோதிகா.  

இதற்கிடையே, மருத்துவ பரிசோதனையில் 'இவானாவின் கர்ப்பத்துக்கு காரணம் ஜி.வி.பிரகாஷ் இல்லை!' என தெரிய வருகிறது! அப்பாவி மைனர் பெண்ணின் கர்பத்துக்கு காரணமான அந்தக் குற்றவாளி யார்? ஜோதிகா, அவனுக்கு கொடுத்த தண்டனை என்ன? ஜி.வி.பிரகாஷ் -இவானா மறுபடியும் சேர்ந்தார்களா? என்பது மீதிக் கதை. 


ஒரு படம் இயக்க பல வருடங்களை எடுத்துக்கொள்ளும் இயக்குநர் பாலா, மிக குறுகிய காலத்தில் எடுத்துள்ள படம். பாலாவின் படம் என்பதாலும், டீசர் வெளியானபோதே பல சர்ச்சைகள் கிளம்பியதாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இந்த 'நாச்சியார்'. அந்த எதிர்பார்ப்புக்கு ஓரளவுக்கு ஈடு கொடுத்திருக்கிறார் பாலா. இயக்குநர் பாலாவிடமிருந்து இப்படியொரு பாஸிட்டிவ் படமா? என்கிற ஆச்சர்யம் அடங்க வெகு நேரமாகிறது.

பொதுவாக, கிராமத்து அடித்தட்டு மக்கள் சந்திக்கும் அவலங்களை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டும் இயக்குநர் பாலா, இந்த முறை சென்னை சேரிப்பகுதியில் வாழும் பதின் பருவத்து பையனுக்கும், பெண்ணுக்கும் நேரும் அவலத்தை அம்பலமாக்கியிருக்கிறார். ஒரு அப்பாவிப் பெண், அவளின் காதலன், இவர்களின் வாழ்க்கையில் வரும் ஒரு நேர்மையான பெண் போலீஸ் அதிகாரி... இந்த முக்கியமான மூன்று கதாப்பாத்திரங்களை வைத்தே படத்துக்கு பரபரப்பும், விறு விறுப்பும் கூட்டுகிறார். கடைசியில், புதிய இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட விளக்கம் செம்ம! பாலா புதிய ஸ்டைலில் கலக்கியிருக்கிறார்.  


எந்த அதிகார வளையத்துக்கும் கட்டுப்பாடாத, மிடுக்கான போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் கம்பீரம் காட்டுகிறார் ஜோதிகா. பாதிக்கப்பட்ட பெண்ணை தன் மகளாகவே கருதும் மனிதாபிமானத்திலும், கோவிலுக்குள் குடியிருப்பதாக சொல்லும் அந்தக் குற்றவாளியிடம்,    'கோவிலாக இருந்தாலும் குப்பைமேடாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்னு தான்' சவுக்கடி தரும்போதும் காக்கி சட்டை மேல் மரியாதையை ஏற்படுத்துகிறார். அப்பாவிப் பெண்ணை வேட்டையாடிய அந்த காமுகனுக்கு ஜோதிகா கொடுக்கும் தண்டனை சூப்பர் .

அழுக்கு ஆடை, பரட்டைத் தலை, கறைபடிந்த பற்கள், எண்ணை வழியும் முகத்தில் வரும் ஜி.வி.பிரகாஷ் சேரிப் பகுதி விடலைப் பையனாகவே மாறியிருக்கிறார். காதலியிடம் செய்யும் கலாட்டாவும், காதல் குறும்பும் ரசிக்க வைக்கிறது. போலீஸ் அடியும்,ஜெயிலில் படும் சித்ரவதைகளும் பரிதாபத்தை தருகிறது.வீட்டு வேலை செய்யும் பெண்ணாக வரும் இவானா,  புதுமுகம் மாதிரி இல்லாமல் வெகு இயல்பாக நடித்திருக்கிறார். காதலனை சீண்டும் இடங்களில் பதின் பருவப் பெண்களின் குறும்புத்தனத்தை தனது நடிப்பில் அழகாக கொண்டுவருகிறார். அந்த அப்பாவி மைனர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை கலங்க வைக்கிறது.  

எந்தக் காட்சியுமே துருத்திக் கொண்டு இல்லாமல், கதைக்கு அவசியமானதை மட்டுமே வைத்து, தேவையான இடத்தில் ஒரே ஒரு சிறு பாடலை மட்டும் ஒலிக்க விட்டு, குறைந்த நேரமே ஓடக் கூடிய இந்தப் படத்துக்கு இளைய ராஜாவின் பின்னணி இசை பெரும் பலமாக இருக்கிறது. 'நாச்சியார்' ரேட்டிங் 3/5 

நாச்சியார் படத்தின் ஸ்டில்ஸ் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்...


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.