நாகேஷ் திரையரங்கம் – திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 18 Feb, 2018 11:53 pm

வீட்டுப் புரோக்கரான ஆரிக்கு, அம்மா, தம்பி, வாய்பேச முடியாத தங்கை என இருக்கும் குடும்பத்தை நல்ல வேலையில் இருக்கும், ஆரியின் தம்பி கவனித்துக் கொள்கிறார். 

இதற்கிடையே, ஆரிக்கு கல்யாணம் செய்ய நினைத்து ஆஷ்னா சவேரியை பெண் பார்க்கப் போகின்றனர். ஆனால், போதிய வருமானம் இல்லாத வீட்டுப் புரோக்கரான ஆரியை, திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் ஆஷ்னா. பிறகு, ஆரியின் நல்ல குணம் அறிந்து அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். 

இந்நிலையில், ஆஷ்னாவுக்கு தெரிந்த பையனை அதுல்யா காதலிப்பது தெரிய வந்து, தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறார் ஆரி. நிச்சயதார்த்தின் போது மணமகன் வீட்டாருக்கு வரதட்சனை கொடுப்பதற்காக, சொந்த கிராமத்தில் அதுல்யா பெயரில் இருக்கும் நாகேஷ் திரையரங்கத்தை விற்க ஆரி முடிவு செய்கிறார். 

அதற்காக ஆரியும், காளி வெங்கட்டும் அந்த திரையரங்கிற்கு செல்ல, அங்கு சில அமானுஷ்யங்கள் நடக்கிறது. அந்த திரையரங்கில் பேய் இருப்பதாக அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள். அதேநேரத்தில், ஆரியின் கனவில் வரும் நபர்கள், நிஜத்தில் ஒவ்வொருவராக இறக்கின்றனர். இந்த குழப்பங்களுக்கு இடையே ஆரி, நாகேஷ் திரையரங்கத்தை விற்று தங்கை திருமணத்தை நடத்தினாரா? ஆஷ்னா சவேரியுடன் இணைந்தாரா? அந்த திரையரங்கத்தில் நடந்த அமானுஷ்யங்களுக்கும். ஆரிக்கும் என்ன சம்மந்தம்? அதன் பின்னணியில் என்ன நடக்கிறது? என்பது மீதிக்கதை. 


தியேட்டரில் பேய் என்கிற ஒன் லைன் வழக்கமான பேய் படங்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் கதையைக் கொண்டு போகுகிறார் இயக்குநர் இசாக். குடும்பம், காதல், காமெடி என ஆரம்பத்தில் கொஞ்சம் ‘டல்’ அடித்தாலும், தியேட்டருக்குள் வந்த பிறகு அமானுஷ்யங்கள் நிகழ்ந்து கதையில் விறு விறுப்பைக் கூட்டுகிறது. ஆனால், எல்லாப் பேய் படங்களிலும் வரும் காட்சிகள் தவறாமல் இதிலும் வருவதால் சலிப்பும் ஏற்படுகிறது.     

நேர்மையான வீட்டு புரோக்கராகவும், குடும்ப பாசம் உள்ள மூத்த பிள்ளையாகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் ஆரி, நாகேஷ் திரையரங்கத்தில் அமானுஷ்ய காட்சிகளுக்கு நடுவே ரசிக்க வைத்திருக்கிறார். ஆஷ்னா ஷவேரியையும் அவரின் கிளாமரையும்  அதிகம் பயன்படுத்தவில்லை. வாய்பேச முடியாத தங்கை அதுல்யா ரவி மனதில் நிற்கிறார். மாசூம் சங்கர் கவர்ச்சிகரமான நடிப்பைக் காட்டுகிறார். நண்பன் காளி வெங்கட் கலகலப்பூட்டுகிறார். அம்மா சித்தாரா, டாக்டர் லதா, சித்ரா லட்சுமணன், மனோபாலா போன்றவர்கள் கதையோட்டத்துக்கு உதவுகிறார்கள். 

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும், நௌஷத்தின் ஒளிப்பதிவும்   படத்திற்கு பலம். ரேட்டிங் 2.5/5


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.