'கேணி'- திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 23 Feb, 2018 06:02 pm


நட்சத்திரங்கள்: பார்த்திபன், நாசர்,‘தலைவாசல்’விஜய், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், பிளாக் பாண்டி, ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா, பார்வதி, இசை: சாம் சி.எஸ், ஒளிப்பதிவு: நௌஷாத் ஷெரிப், இயக்கம்: எம்.ஏ.நிஷாத், தயாரிப்பு: ஃபிராகிரண்ட் நேச்சர் ஃபிலிம்ஸ். 

கேரளாவில் உயர் பதவியில் உள்ள ஜெயப்ரதாவின் கணவர் மீது தீவிரவாதி முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, அந்த வேதனையிலேயே உயிரை விடுகிறார். எனவே, கணவரின்  கடைசி ஆசையின் படி தமிழக எல்லையில் உள்ள கிராமத்தில் குடியேறுகிறார் ஜெயப்ரதா. அந்த கிராமத்து மக்கள் தண்ணீருக்காக தவிப்பதை பார்த்து தன் கிணற்றுத் தண்ணீரைக் கொடுத்து உதவ நினைக்கிறார்.

ஆனால், அந்த இடத்தை அபகரிக்க நினைக்கும் சில அதிகாரிகள் இதற்கு தடையாக இருக்கின்றனர். அத்துடன் எல்லைப் பிரச்னையை எழுப்பி, தண்ணீர் எடுக்க தடையும் வாங்கிவிடுகின்றனர்.  அப்போது, ஊர் தலைவர் பார்த்திபன், அனுஹாசன், ரேவதி, நாசர் ஆகியோரின் உதவியுடன் கிணற்றை மீட்கும் போராட்டத்தில் இறக்குகிறார் ஜெயப்ரதா. அவரின் போராட்டம் வென்றதா?கிராமத்து மக்களுக்கு தண்ணீர் கிடைத்ததா? என்பது மீதிக்கதை.


நாட்டின் தலையாய பிரச்னையாக இருக்கும் தண்ணீர் பிரச்னையைப் பற்றி பேசுகிறது படம்.நல்ல ஒன் லைன் பிடித்துள்ள இயக்குநர் எம்.ஏ.நிஷாத், அதை நேர்த்தியான திரைக்கதையாக்கத் தெரியாமல் திணறுகிறார். மீடியா ஆட்கள் மூன்று பேர், மூன்று கோணங்களில் கதை சொல்வதாக இருக்கும் திரைக்கதை குழப்பமாக இருக்கிறது. சுவாரஸ்யமாக போகும் கதைக்கு நடுவே அவர்கள் அழையாத  விருந்தாளிகளாகவே இருக்கிறார்கள். அவர்களைத் தவிர்த்து, ஸ்ட்ரெயிட் நரேஷனில் ஸ்க்ரீன் பிளேவை அமைத்திருக்கலாம்! தமிழ், மலையாளம் என இருமொழிகளில் தயாரான படமாம். ஆனால், படத்தின் பெரும்பகுதியை மலையாளமே ஆக்கிரமித்துக்கொள்கிறது.              

பார்த்திபன், நாசர்,‘தலைவாசல்’விஜய், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், பிளாக் பாண்டி,ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா, பார்வதி என மிகப்பெரிய பட்டாளமே இருந்தாலும், சென்டர் பாயிண்ட்டாக இருப்பதென்னவோ  பழம்பெரும் நடிகை ஜெயப்ரதா தான்! நீண்ட நெடுக்காலத்துக்குப் பிறகு திரைக்கு முகம் காட்டியிருக்கும் அவரிடத்தில் பக்குவமான நடிப்பை பார்க்கமுடிகிறது.தனக்கே உரிய நக்கல் நையாண்டி கலந்த பேச்சில் ரசிக்க வைக்கிறார்  ஊர்த்தலைவர் பார்த்திபன். நியாத்தின் பக்கம் நிற்கும் வக்கீல் நாசர், கலெக்டர் ரேவதி, நீதிபதி ரேகா ஆகியோர் கவனம் ஈர்க்கின்றனர். அனுஹாசனின் தோற்றமும்,பேச்சு வழக்கும் கிராமத்துப் பெண் கதாப்பாத்திரத்துக்கு கொஞ்சமும் ஒட்டவில்லை.சேனல் நிர்வாகி எம்.எஸ்.பாஸ்கர், கிணறு உள்ள இடத்தை அபகரிக்க நினைக்கும் அமைச்சர் 'தலைவாசல்' விஜய், டீகடை பெஞ்சில் அரட்டை கச்சேரி செய்யும் சாம்ஸ், டீ மாஸ்டர் பிளாக் பாண்டி ஆகியோரும் படத்தில் இருக்கின்றனர். 

ஜேசுதாஸ், எஸ்.பி.பி. இருவரும் சேர்ந்து பாடும் 'அய்யாச்சாமி..' பாடல் மற்றும் பின்னணி இசையால் பரவசப்படுத்துகிறார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். தமிழகம்,கேரளா எல்லையில் இருக்கும் கிராமத்தின் அழகை அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நௌஷாத் ஷெரிப்.

ரேட்டிங் 2.5/5

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close