• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' விமர்சனம் - யாருக்கு விருந்து?

  ஹரிஹரசுதன் தங்கவேலு   | Last Modified : 30 Apr, 2018 03:48 pm

இந்தியாவில் மார்வெல் ரசிகர்களுக்கு கோடை கொண்டாட்டமாக வெளிவந்திருக்கும் 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்திருக்கிறதா?

பார்ப்போம்.

டைம்லி காமிக்ஸ் (Timely Comics) என்ற பெயரில் 1939-ல் அமெரிக்காவில் நிறுவப்பட்டு, 1961 முதல் 57 வருடங்களாக 'மார்வெல் காமிக்ஸ்' என சூப்பர் ஹீரோ கதைகளை சிறார் புத்தகங்களாக வெளியிடும் நிறுவனம் 'மார்வெல்'.

கொலம்பியா பிக்சர்ஸ் (Colombia pictures), நியூலைன் சினிமா (Newline cinema) போன்ற ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இக்கதைகளை திரைப்படமாக தயாரித்து வந்த மார்வெல், தனக்கு கிடைக்கும் லாபத்தின் பகுதி மிக குறைவென கருதியதால் தனக்கென ஒரு பிரத்யேக தனி தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்க முற்பட்டது. 

மார்வெல் சூப்பர் ஹீரோ கதைகளை ஒரு தொடராகத் தயாரிக்க நினைத்த இந்நிறுவனம் 2008-ல் உருவாக்கிய துணை நிறுவனம்தான் 'எம்.சி.யு' (MCU - Marvel Cinematic Universe). இந்நிறுவனத்தின் தயாரிப்பில் முதலில் வெளிவந்த திரைப்படம் அயன் மேன் (IRON MAN). டோனி ஸ்டார்க் (Tony Stark) கதாபாத்திரத்தில் 'அயன் மேன்' ஆக ராபர்ட் டவுனி ஜூனியர் (Robert Downey Jr) அசரடிக்க, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் உலகெங்கும் வசூலை வாரிக் குவித்தது. 

குஷியாகிப் போன மார்வெல், 'ஸ்பைடர் மேன்', 'ஹல்க்', 'கேப்டன் அமெரிக்கா', 'தோர்' என தன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களை ஒவ்வொன்றாக சாகசங்கள் புரியவைத்து, 10 வருடங்களில் 18 படங்கள் தயாரித்து, வசூலில் உச்சம் தொடத் தொடங்கினர். அந்த வரிசையில் 19-வது படைப்பாக வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' (Avengers: Infinity War).

சூப்பர் ஹீரோ கதைகளில் உலகைக் காக்கிறேன் என அமெரிக்காவை காப்பது, அதுவும் நியூயார்க் நகரத்து மக்களைக் காப்பது மட்டுமே பெரும்பான்மை கதை எனினும், அதன் திரைக்கதையும், வி.எஃப்.எக்ஸ். (VFX) தொழில் நுட்ப பிரமாண்டமும்தான் தனிச்சிறப்பே! 

அந்த வகையில், இந்தத் ஒரு ரசிகனை குதூகலப்படுத்தினாலும், ஒரு பார்வையாளனை காட்சிகளில் ஒன்றவைக்க தவறியிருக்கிறது திரைக்கதை.

ஓர் உலகம், உலகத்தை அழிக்க அல்லது தன்வசப்படுத்த நினைக்கும் ஒரு வேற்று கிரக மனிதன், அவனிடம் போராடி மனித குலத்தை காக்கும் சூப்பர் ஹீரோக்கள் என அரத பழைய கதை. அதை படமாக்கியிருக்கும் விதத்திலும் எதிர்பார்க்கப்பட்ட காட்சிகள், வசனங்கள், காட்சி தவறாமல் தலை காட்டும் கேமியோ (CAMEO) சிறப்பு என்ட்ரிகள் என மிக எளிதாக அடுத்த காட்சியை, சில சமயம் வசனத்தை கூட யூகித்து விட முடிந்த பலவீனமான திரைக்கதை கொண்டது 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்'. ஒரு மாறுதலுக்காக தந்தை - மகள் பாசம், சூப்பர் ஹீரோ நட்பு, காதல் ஆகியவற்றுக்கும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தாலும், அனைத்துமே பார்வையாளனிடம் சரிவர கடத்தப்படாமல் பொறுமையை சோதிக்கின்றன.


அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் சிலிர்ப்பூட்டினாலும், படத்தின் வி.எஃப்.எக்ஸ் ஒரு குறையே. இருள் சூழ்ந்த நட்சத்திர கிரகங்கள், தானோஸின் 3டி வடிவம், குறிப்பாக தானோஸின் முகம் என அனைத்துமே 'பழைய அனிமேஷன் படங்களே தேவலாம்' என்பது போல இருந்தது. இந்தப் படத்தின் இன்னொரு குறை, அதன் நீளம். தமிழ்ப் படங்கள் போல சுமார் 150 நிமிடங்கள். திருப்பங்களே இல்லாத திரைக்கதையில் வெறும் ஐந்து ஆக்‌ஷன் காட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு, நாடகத்தனமான காதல், பாசம், நட்பு எல்லாம் காட்சிப்படுத்தி பேசிப் பேசி சோதிக்கிறார்கள். 3டி கண்ணாடியை எடுப்பதும், திருப்பி அணிவதுமாக பார்வையாளர்கள் நேரத்தை கடத்துகிறார்கள்.

சரி, படத்தில் நிறைகள் இல்லையா?

நிச்சயம் இருக்கிறது. படத்தின் மிகப் பெரிய பலம், அதன் இசையும், சூப்பர் ஹீரோக்களும்தான். மொத்தம் 22 சூப்பர் ஹீரோக்கள், படத்தின் முதல் பாதி வரை இவர்கள் அறிமுகம் மட்டுமே. அதிலும், பாட்ஷா பட பாணியில் ரயில் பின்னணியில் கேப்டன் அமெரிக்கா அறிமுகம் ஆகும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. 

22 சூப்பர் ஹீரோக்களும் இரு பிரிவாக பிரிந்து இதுவரை பூமியில் சாகசம் நிகழ்த்தியவர்களான ஸ்பைடர் மேன், அயன் மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் எல்லாம் விண்வெளியிலும், இதுவரை விண்வெளியினை காத்தவர்களான 'கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி' குழு, தோர் எல்லாம் பூமியிலும் சண்டையிட்டு மனித குலத்தை காக்க முனைகின்றனர். அவர்கள் வெற்றி பெற்றார்களா அல்லது மனித குலத்தின் பாதியைத் தான் திட்டமிட்டபடி தானோஸ் அழித்தானா என்பதுவே இறுதிக் காட்சி. இரு பாகங்களாக திட்டமிடப்பட்ட கதையின் முதல் பகுதியே இத்திரைப்படம். இதன் இரண்டாம் பாகத்தை 2019-ல் வெளியிட தீர்மானித்துள்ளது மார்வெல்.


நீங்கள் ஒரு மார்வெல் ரசிகராக இருப்பின் இத்திரைப்படம் நிச்சயம் உங்களுக்கு ஒரு கொண்டாட்டமே! வி.எஃப்.எக்ஸ் குறைகள் தவிர்த்து, இதன் அதிரடி சண்டைக் காட்சிகள், சூப்பர் ஹீரோ அறிமுகங்கள் மெய்சிலிர்க்க வைக்கும். 

நீங்கள் ஒரு சாதாரண பார்வையாளர் எனில், இது மற்றுமொரு அதிரடி சண்டைப் படம் மட்டுமே. பொறுமை இருந்தால் ஒருமுறை பார்க்கலாம்.

- ஹரிஹரசுதன் தங்கவேலு, சினிமா ஆர்வலர், தொடர்புக்கு hariinto@gmail.com

Advertisement:
[X] Close