’காத்திருப்போர் பட்டியல்’ - திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 04 May, 2018 12:28 pm


நட்சத்திரங்கள் : சச்சின் மணி, நந்திதா, அருள்தாஸ், அப்புக்குட்டி, சித்ரா லட்சுமணன், சென்ட்ராயன், மனோபாலா, மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், அருண் ராஜா காமராஜ், சித்ரா லட்சுமணன், முத்துக் காளை, ஒளிப்பதிவு : எம்.சுகுமார், இசை :ஷான் ரோல்டன், இயக்கம் : பாலையா டி. ராஜசேகர், தயாரிப்பு : லேடி ட்ரீம் சினிமாஸ்.      

தினமும் மின்சார ரயிலில் பயணம் செய்பவர்கள் செய்யும் தில்லு முல்லு வேலைகளை காமெடியும், காதலும் கலந்து சொல்லும் படம். 

மின்சார ரயில் பயணத்தின் போது விளம்பர போஸ்டர் ஒட்டும் பாலியல் டாக்டர் மனோபாலா, வித் அவுட் டிக்கெட் சென்றாயன், பயணிகளுக்கு இடைஞ்சல் செய்யும் மயில்சாமி, பிளாட் ஃபாமில் அசிங்கம் செய்யும் அப்புக்குட்டி, சினிமா போஸ்டர் ஒட்டும் அருண்ராஜா ஆகியோரை பிடிக்கும் ரயில்வே போலீஸ் அதிகாரி அருள்தாஸ், விசாரணைக்காக அவர்களை ஒரு அறையில் அடைத்து வைக்கிறார்.அந்த கும்பல் இருக்கும் அறைக்கு நாயகன் சச்சின் மணியும் வந்து சேருகிறார். அவரவர் தாங்கள் மாட்டிக் கொண்ட ஃப்ளாஷ் பேக் சொல்ல, தனது காதல் கதையை சொல்கிறார் சச்சின் மணி. அதைக் கேட்டு உருகும் ரயில் பயண நண்பர்கள், அவரின் காதலி நந்திதாவை கட்டாயக் கல்யாணத்திலிருந்து காப்பாற்றும் அவசரத்தில் இருக்கும் சச்சின் மணியை காப்பாற்ற முடிவு செய்கின்றனர். ரயில்வே போலீஸ் பிடியில் சிக்கி கொண்ட சச்சின் மணி அங்கிருந்து தப்புகிறாரா? காதலியைக் கை பிடித்தாரா? என்பது கிளைமாக்ஸ். 

மோதல், அதற்குப் பிறகு வரும் காதல், பெற்றோர் எதிர்ப்பு, ஓடிப்போய் கல்யாணம் என தமிழ் சினிமா தண்டவாளத்தில் ஓடி ஓடி தேய்ந்துபோன பழைய சரக்கு ரயிலை, கொஞ்சம் பட்டி பார்த்து, டிங்கரிங் செய்து ஓட விட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் பாலய்யா டி.ராஜசேகர்.

வேலைக்குப் போகாமல் வெட்டியாய் சுற்றுவது, பிறகு காதலியை சுற்றுவது என இன்றைய இளைஞர்களின் பிரதிநிதியாக வலம் வரும் சச்சின் மணி, ரொமன்ஸ் ஏரியாவில் காட்டும் ஆரவத்தை, மற்ற ஏரியாவில் காட்டவில்லை! 

திட்டுவது, சண்டை போடுவது, காதலில் விழுவது, பின்னர் காதலனுக்காக வீட்டை விட்டு ஓடுவது என தனக்கு தரப்பட்ட வேலையை மிக சரியாக செய்திருக்கிறார் நாயகி நந்திதா. 


தினமும் மின்சார ரயிலில் பயணம் செய்பவர்கள் செய்யும் தில்லு முல்லு வேலைகள், ரயில்வே போலீசாரின் அடாவடி, அதனால் பயணிகள் சந்திக்கும் பிரச்னைகள் என கலகலப்பாக செல்ல வேண்டிய படம், சென்ராயன், அப்புக்குட்டி, மனோபாலா, மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், அருண்ராஜா காமராஜ் என காமெடிப் பட்டாளமே இருந்தும் காமெடியில் வறட்சி தெரிகிறது. 

ஷான் ரோல்டனின் பின்னணி இசையில் இருக்கும் ஈர்ப்பு, பாடல் இசையில் இல்லை! படத்தில் மூன்று பாடல்கள், ஆனால் எதுவுமே நினைவில் நிற்கவில்லை. படத்தில் ஒரே ஒரு ஆறுதல் கேமரா மட்டுமே, புதுச்சேரி கடற்கரையை, கோவா கடற்கரையைப் போல காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார்.’காத்திருப்போர் பட்டியல்’ரேட்டிங் 2/5

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.