'மெர்லின் ' - திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 23 Feb, 2018 11:52 am


நட்சத்திரங்கள்: விஷ்ணுப்ரியன், 'அட்டகத்தி' தினேஷ், பவர் ஸ்டார், அஸ்வினி, ரிச்சா, 'லொள்ளுசபா' ஜீவா, 'ஆடுகளம்' முருகதாஸ், மனோபாலா, இசை: கணேஷ் ராகவேந்திரா, ஒளிப்பதிவு: முத்துக்குமரன், இயக்கம்: வ.கீரா. தயாரிப்பு: ஜே.எஸ்.பி.பிலிம் ஸ்டுடியோ.      

சினிமா உதவி இயக்குநரான விஷ்ணு ப்ரியனுக்கு, தீவிர முயற்சிக்குப் பிறகு இயக்குநராகும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு வாரத்துக்குள் முழு ஸ்கிரிப்டும் தயார் செய்து ஹீரோவிடம் சொல்லவேண்டிய அவசரத்தில் இருக்கிறார். ஆனால், விஷ்ணு ப்ரியனுடன் ஒரே அறையில் தங்கியிருக்கும் நண்பர்கள் அவனை கதை எழுத விடாமல் தொந்தரவு செய்கிறார்கள். பொறுமையிழந்த விஷ்ணு,அவர்களை அங்கிருந்து கிளப்ப, ஒரு பேய் கதையை சொல்கிறார்.நண்பர்களும் அதை நம்பிவிடுகின்றனர். ஆனால், அடுத்த நாளே விஷ்ணு சொன்ன அமானுஷ்ய விஷயங்கள் அப்படியே நடக்கின்றன. அதற்கான காரணம் என்ன? விஷ்ணு சொன்ன கதை உண்மையில் நடந்ததா? என்பது மீதிக் கதை.  


'பச்சை என்கிற காத்து' படத்தை தந்த இயக்குநர் கீராவின் அடுத்த படம் இது. சினிமாவில் வாய்ப்பு தேடும் ஒரு இளைஞனை பற்றிய இந்தக் கதைக்குள் அமானுஷ்ய பின்னணியில், சைக்கோ த்ரில்லர் பாணியில், கிளாமர், காமெடி கலந்து சொல்லியிருக்கிறார். ஆனால், இரண்டாம்  பாதியில் இருந்த விறு விறுப்பு முதல் பாதியில் இல்லை! தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் பேயை விரட்டியடிக்க எந்த மாந்திரீகரை கூட்டிவருவது? என்கிற சலிப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு, இதுவும் ஒரு பேய் படம் என்கிற ரீதியில் இல்லாமல் சைக்கோ த்ரில்லர் பாணியில் படத்தை கொண்டு சென்றது சிறப்பு.  

ஹீரோ விஷ்ணுப்ரியன் உடம்புக்குள் ஆவி புகுந்து கொண்ட பிறகு, பேயாட்டம் போடுகிறார். அவருக்கும், ஹீரோயின் அஸ்வினிக்குமான காதல் எபிசோடுகள் இதம்! கிளமருக்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறார் ரிச்சா! காமெடி என்கிற பெயரில் 'ஆடுகளம்' முருகதாஸ், 'லொள்ளுசபா' ஜீவா இருவரும் செய்யும் அதகளம் சகிக்கவில்லை! சினிமா ஹீரோவாக வரும் 'அட்டக்கத்தி' தினேஷ், தயாரிப்பாளராக வரும் பவர் ஸ்டார் இருவரும் சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர்.        

கணேஷ் ரகாவேந்திராவின் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை பரவாயில்லை! முத்துக்குமரனின் கேமரா காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறது. ரேட்டிங் 2.5/5 


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.