யாழ் – திரைவிமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 05 Mar, 2018 11:03 am

இலங்கையில் போர் நடக்கும் அந்த இக்கட்டான சூழ்நிலையில், ஆறு முக்கிய கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்னைகளை, மூன்று கதைகள் வழியாக, மூன்று கோணங்களில் சொல்லப்படுகிறது. 

போர் பின்னனனியில் நடக்கும் மூன்று கதைகள் வழியே, ஆறு முக்கிய கதாபாத்திரங்களுக்குள் இருக்கும் அன்பு, காதல், தாய்மை, போராட்டம் போன்ற உணர்வுகளை மிக இயல்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த்.               

இலங்கையில் போர் நடக்கும் போது, தங்களின் தாய் மண்ணை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள் தமிழ் மக்கள். அந்த இக்கட்டான சூழ்நிலையில், சிங்கள ராணுவ அதிகாரி டேனியல் பாலாஜியின் பிடியில் சிக்கிக் கொள்ளும் பெண் போராளி தமிழ் செல்வியாக வரும் நீலிமாராணி யின் உருக்கமான நடிப்பு தாய்மையின் உச்சம்.  

அதேவேளையில், ஊரை விட்டுக் கிளம்பிய தன் காதலி நிலாவுடன் செல்ல நினைத்த ஒரு இளைஞன் வினோத், தாயைப் பிரிந்து தவிக்கும் குழந்தை அமுதினிக்காக மனம் இறங்குவது அன்பின் மிச்சம்.  

இதற்கிடையே, லண்டனில் இருந்து வரும் இளம் பெண் மிஷா, தன் காதலன் சசியை லண்டனுக்கு கூட்டிப் போக முற்சிப்பதும், அதற்கு சசி சொல்லும் காரணமும் காதலின் சொச்சம்! 


போர்க்களத்துக்கு நடுவே சதை பிண்டமாக கிடக்கும் மனிதர்கள், எந்த சலனமும் இல்லாமல் அதை கடந்து போகும் சக மனிதர்கள், கண்ணி வெடிகள், பட்டாசுபோல வெடிக்கும் குண்டுகள், அந்த ஆறு கதாபாத்திரங்கள்  சந்திக்கும் பிரச்னைகள், அவர்கள் வாழ்க்கையில் பின்னி பிணைந்த ‘யாழ்’ இசைக்கருவி..என ஒவ்வொரு காட்சியையும் உணர்ச்சிகரமாக சொல்ல நினைந்த இயக்குநர், அதை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்ல தவறியது பெரும் குறை!  

வறண்ட தேசத்தை படம் பிடித்த ஒளிப்பதிவாளர், கதை சூழலுக்கேற்ற இசையை கொடுத்த இசையமைப்பாளர் இருவரும் படத்துக்கு பக்க பலமாக இருக்கிறார்கள்.    

நட்சத்திரங்கள்: வினோத் கிஷன், டேனியல் பாலாஜி, சசிகுமார் சுப்ரமணி, மிஷா கோஷல், நீலிமாராணி, லீமா பாபு, பேபி ரக்சனா, ஒளிப்பதிவு: கருப்பையா நஷீர், இசை: எஸ்.என்.அருணகிரி, இயக்கம்: எம்.எஸ்.ஆனந்த், தயாரிப்பு: மிஸ்டிக் பிலிம்ஸ்.

நம்ம ரேட்டிங் 2/5 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.