என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா - திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 05 May, 2018 04:52 pm


நட்சத்திரங்கள் : அல்லு அர்ஜுன், அனு இமானுவேல், சரத்குமார், ‘ஆக்‌ஷன் கிங்’அர்ஜுன், நதியா, சாய் குமார், சாருஹாசன், ஹரிஷ் உத்தமன், பொம்மன் ஹிராணி, ஒளிப்பதிவு : ராஜூவ் ரவி, இசை : விஷல் - சேகர், இயக்கம் : வி.வம்சி, தயாரிப்பு : ராம லட்சுமி சினி கிரியேஷன்ஸ்.      

அநீதிக்கு எதிராக பொங்கும் ஒரு ராணுவ வீரனுக்கு, அவனின் இந்தக் குணமே எதிராகத் திரும்புவதையும், அதனால் அவனுக்கு வரும் சோதனைகளயும் சொல்லும் படம்.

தாய் நாட்டு மீது மிகுந்த பற்று வைத்திருக்கும் ராணுவ வீரர் அல்லு அர்ஜுன், அநீதிக்கு எதிராக பொங்கும் பெரும் கோபக்காரர். இந்தக் குணமே அவருக்கு எதிராகத் திரும்பி நண்பர்கள், காதலியை இழப்பதோடு, தான் நேசிக்கும் ராணுவ பணியையும் இழக்க நேரிடுகிறது. இதையொரு மன நோயாக கருதும் ராணுவ உயர் அதிகாரி, மனநல மருத்துவரான அர்ஜுனிடம் சான்றிதழ் பெற்று வரும்படி உத்தரவிடுகிறார்.

மனநல மருத்துவரான அர்ஜுனை சந்தித்த அல்லு அர்ஜுன், அவரிடமும் தனது ஆவேசத்தைக் காட்டுகிறார். ’21 நாட்கள் கோபத்தை கட்டுப்படுத்தி, அமைதியான வாழ்க்கை வாழ்ந்து காட்டினால், சான்றிதழ் தருவதாக’ சொல்கிறார் அர்ஜுன். அதன்படி, தனது கோபத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, அமைதியான வாழ்க்கை வாழ முயற்சிக்கும் போது, தாதா சரத்குமார் ரூபத்தில் வருகிறது தொல்லை. கண் முன்னே பல அநியாயங்கள் நடக்க, ராணுவ வீரனாக எல்லையைக் காப்பதையே லட்சியமாக கொண்ட அல்லு அர்ஜுன், அநீதி கண்டு மீண்டும் பொங்கினாரா? அல்லது அதைக் கண்டும் காணாமல் இருந்து சான்றிதழ் பெற்றாரா? என்பது மீதிக்கதை. 


அதிரடியான நடிப்பினாலும், அசத்தலான நடன திறமையாலும் தனக்கென ஒரு ரசிகர் படையை வைத்திருக்கும் தெலுங்கு திரையுலகின் ஸ்டைலிஸ் ஹீரோ அல்லு அர்ஜுன், இந்தப் படத்தின் மூலமாக தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அநீதிக்கு எதிராக பொங்கும் ஆவேசக்கார ராணுவ வீரனை கண்முன் கொண்டு வருகிறார். நடனத்தில் ’ஸ்டைலிஷ் ஸ்டார்’ ஆக இருக்கும் அல்லு அர்ஜுன், அதிரடியான சண்டைக் காட்சிகளில் தன்னையொரு ’ஆக்‌ஷன் ஸ்டார்’ ஆகவும் நிரூபிக்கிறார். அல்லு அர்ஜுனின் காதலி அனு இமானுவேல் கிளாமரில் கிறங்க வைக்கிறார். 

தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் சரத்குமார், ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன், நதியா, சாருஹாசன், ஹரிஷ் உத்தமன், சாய் குமார் என தமிழ் ரசிகர்களுக்கு பழக்கமான பல முகங்கள் இருக்கின்றனர். மன நல மருத்துவராக வரும் ’ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன், அமைதியான நடிப்பிலும், அவரின் மனைவியாக வரும் நதியா குண்ச்சித்திர நடிப்பிலும், ராணுவத்தில் கால்களை இழந்த சாய் குமார் உருக்கமான நடிப்பிலும், தாதாவாகவரும் சரத்குமார் வில்லத்தனமான நடிப்பிலும் கவனிக்க வைக்கின்றனர்.  

தேசத்தை துண்டாட நினைக்கும் தீவிரவாதிகளோடு ஹீரோ மோதி ஜெயிக்கும் வழக்கமான தேசப்பற்றுக் கதைகளைப் போல இல்லாமல், அதிலிருந்து கொஞ்சம் மாத்தி யோசித்து, மாறுபட்ட கோணத்தில் தேசப்பாற்றுக் கதையைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வி.வம்சி. அதே சமயம், திரைக்கதையை ஜவ்வாக இழுக்காமல் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். 

இசை  இரட்டையர்கள் விஷால் - சேகர் இசையில் பாடல்கள் பரவசப் படுத்துகிறது. ராஜீவ் ரவியின் கேமரா திரைக்கதையோடு பயணித்து, கதைக்குள் இழுத்து வந்துவிடுகிறது.  ’என் பெயர்  சூர்யா என் வீடு இந்தியா’வுக்கு நம்ம ரேட்டிங் 2.5/5

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.