நடிகையர் திலகம் - திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 11 May, 2018 05:50 pm


நட்சத்திரங்கள் : துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், ஷாலினி பாண்டே, சமந்தா, பானுப்ரியா, மாளவிகா நாயர், விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திர பிரசாத்,மோகன்பாபு. இசை : மிக்கி ஜே மேயர், ஒளிப்பதிவு : டேனி ஷா லோ, இயக்கம் : நாக் அஸ்வின், தயாரிப்பு : வைஜெயந்தி மூவீஸ்   

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படம். 

கருப்பு - வெள்ளை காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகத்தில் கொடிகட்டிப் பறந்த, அன்றைய சினிமா ரசிகர்களால் ’நடிகையர் திலகம்’ என கொண்டாடப்பட்ட, பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்கிற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் வெளியாகியிருக்கும் திரைப்படம்.

சாவித்திரியின் நினைவு தப்பி, கோமா நிலையில் படுக்கையில் விழுந்ததிலிருந்து துவங்குகிறது படம். பெண் பத்திரிகையாளர், அவரைப் பற்றிய கட்டுரையாக எழுதுவதற்கான ஆய்வில் இறங்கும் போது, ’ஃப்ளாஷ் பேக்’காக விரிகிறது சாவித்திரியின் கதை.

பதின் பருவத்தில் சாவித்திரி செய்யும் குறும்புத்தனங்கள், நாடக மேடை ஏறியது, பிறகு சினிமாவுக்கு முயற்சி செய்து, அதில் பின்னடைவு ஆவது, தொடர் முயற்சிக்குப் பிறகு துணை நடிகையாவது, தெலுங்கு படம் வாயிலாக கதாநாயகியாக மாறுவது, அதையடுத்து, தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைப்பது, சம்பாதித்தை தராளமாக பிறருக்கு தருவது, ஜெமினி கணேசனுடன் காதல் மலர்வது, ஏற்கனவே கல்யாணமான விவரம் அறிந்து அவரை விட்டு விலக முயல்வது, விடாப்படியாக நிற்கும் ஜெமினியின் காதலை ஏற்றுக் கொண்டு அவரை ரகசியக் கல்யாணம் செய்வது, அது அமபலமாகும் போது குடும்பத்தினரை எதிர்த்து ஜெமினியுடன் வாழ்க்கையைத் துவங்குவது, திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் உச்சத்தை அடைவது, சொந்தப் படம் எடுக்கும் முயற்சியில் கணவருடன் மனக்கசப்பு ஏற்படுவது,  ஒரு கட்டத்தில் கணவரின் காதல் லீலை அவரை விட்டு விலகுவது,மன அழுத்தம் தாங்காமல் மதுவுக்கு அடைமையாவது,சொந்தப் படம் எடுத்து நொந்து போவது, எல்லாத்தையும்  இழந்து நோயில் விழுவது... இப்படியாக சாவித்திரியின் சொந்த வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களையும் கூட இருந்தே படம் பிடித்ததைப் போல, ஒவ்வொரு காட்சியையும் அச்சரம் பிசகாமல் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின். 

இதுபோன்ற பிரபலங்களின் வாழ்க்கை சரித்திரக கதையை படமாக்கும் போது கொஞ்சம் கவனம் பிசகினாலும் அது டாக்குமெண்ட்ரி போல மாறும் அபாயம் இருக்கிறது! ஆனால் அந்த குறை இல்லாமல் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கியெடுத்திருக்கிறார் இயக்குநர். சொந்த வாழ்க்கையில் சந்தோசம் - துக்கம், சினிமா வாழ்க்கையில் ஏற்றம் - இறக்கம் என பல திருப்பங்கள் நிறைந்த சாவித்திரியின் வாழ்க்கையை மக்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் அழகான திரைக்கதையாக்கியுள்ளார். ஆனால், தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சாவித்திரியை, தெலுங்குப் பட உலகத்தின் பார்வையிலேயே கதையை நகர்த்திக் கொண்டு போவதும், தெலுங்கு நட்சத்திரங்களோடு அவருக்கு இருந்த நட்பை மட்டுமே கொண்டாடுவதும் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. சாவித்திரியின் சொந்த அன்ணணோ என நினைக்கும் அளவுக்கு பல படங்களில் நடித்த சிவாஜிகணேசன் மற்றும் மூன்றே படங்கள் தான் என்றாலும் சாவித்திரியோடு காதல் காட்சிகளில் ரொமான்ஸ் முத்திரை பதித்த எம்.ஜி.ஆர். போன்ற ஜாம்பவன்களுடன் இருந்த நட்பை பதிவு செய்யமல் போனது பெரும் குறை தான்!       

குடும்ப பாங்கான முகம் கொண்ட சாவித்திரி கதாபாத்திரத்தில், அவரைப் போன்ற ’ஹோம்லி லுக்’ உள்ள கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பதும், காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல் கச்சிதமாக அமைந்ததும் அந்த கதாப்பாத்திரத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. பதின் பருவத்தில் செய்யும் குறும்புத்தனங்கள், கேமரா முன்னாடி நிற்கும்போது வரும் பயபக்தி, காதல் வாழ்க்கை, கொடை குணம் வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் ஏற்படும்போது கடைபிடிக்கும் நிதானம், வாழ்க்கை கசந்தபிறகு வரும் விரக்தி, மன ஆறுதலுக்கு மருந்தாக மதுவை தேடும் புத்தி... என ஒவ்வொரு காட்சியிலும் சாவித்திரியை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் கீர்த்தி சுரேஷ். இப்போதுள்ள இளம் தலைமுறை நடிகைகளில் இயல்பான நடிப்பை வழங்கும் சிறந்த நடிகை என்பதை இந்தப் படத்தின் மூலமாக நிரூபித்திருக்கும் கீர்த்தி சுரேஷூக்கு விருது வெயிட்டிங்!        

காதல் மனைவியின் புகழை சகித்துக் கொள்ள முடியாதது, மனைவியை மது பழக்கத்தைக் கற்றுத் தருவது, பல பெண்களுடன் காதல் லீலை செய்வது என சினிமாவில் ஹீரோவாகவும், நிஜ வாழ்க்கையில் வில்லனாகவும் வாழ்ந்திருக்கிறார் ஜெமினி என்பதை உணர்த்துகிறது அவரது காதாப்பாத்திரம்! ஜெமினி கணேசனாக வரும் துல்கர் சல்மான், அதை மிகச் சரியாக செய்திருந்தாலும், அவரது மலையாளம் கலந்த தமிழ் அந்த கதாப்பாத்திரதுக்கு கொஞ்சம் அந்நியமாகவே தெரிகிறது.     

பெண் பத்திரிக்கையாளர் மதுரவாணியாக வரும் சமந்தா, கதாப்பாத்திரத்தின் வழியாகத் தான் சாவித்திரியின் கதை விரிகிறது. சாவித்திரியைப் பற்றி தெரியாமல் ஒரு சாதாரண நடிகை என்கிற மனப்போக்கிலேயே அவரைப் பற்றிய ஆய்வில் இறங்கி, பின்னர் தீவிர ரசிகையாகவே மாறிப்போகிறார்.

போட்டோ கிராபர் அந்தோனியாக நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா, ஆய்வில் சமந்தாவுக்கு உதவியாக வந்து பிறகு காதலராக மாறுகிறார்.  இவர்களுக்கிடையில் உள்ள காதல் ஒரு தனி ட்ராக்கில் போகிறது.

காதல் கை கூட உதவும் தெலுங்கு கதாசிரியர் அலூரி சக்ரபாணியாக வரும் பிரகாஷ்ராஜ், சக நட்சத்திரமாம் நாகேஷ்வரராவாக வரும் நாகசைதன்யா, சீனியர் நடிகர் எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் வரும் மோகன்பாபு, பெரியப்பா ராஜேந்திர பிரசாத், பெரியம்மா பானுப்ரியா, தோழியாக வரும் ஷாலினி பாண்டே ஆகியோரும் தங்களது காதாப்பாத்திரங்களில் அனுப முத்திரையை பதித்துவிட்டு போகின்றனர். 

கருப்பு வெள்ளை காலகட்டத்தை கச்சிதமாக படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் டேனி ஷா லோ, மிக சரியான பின்னணி இசையைக் கொடுத்த மிக்கி ஜே மேயர் இருவரும் படத்துக்கு பலம் சேர்க்கின்றனர்.

’நடிகையர் திலகம்’ படத்துக்கு நம்ம ரேட்டிங் - 3/5


இதை படிச்சீங்களா?

இரும்புத்திரை - திரை விமர்சனம்

கோலிவுட் கொண்டாடிய ’அம்மா சென்டிமென்ட்’பாடல்கள்…!

மனோகரா முதல் விஐபி வரை.. அம்மா சென்டிமெண்ட் படங்கள்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close