இரவுக்கு ஆயிரம் கண்கள் - திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 13 May, 2018 03:05 pm

 

நட்சத்திரங்கள் : அருள்நிதி, மஹிமா நம்பியார் , அஜ்மல், ஆனந்தராஜ், ’ஆடுகளம்’ நரேன், ஜான் விஜய், லட்சுமி ராமகிருஷ்ணன், சாயாசிங், வித்யா பிரதீப், சுஜா வாருணி, இசை : சாம்.சி.எஸ், ஒளிப்பதிவு : அரவிந்த் சிங், இயக்கம் : மு.மாறன், தயாரிப்பு : ’அக்செஸ் பிலிம் பேக்டரி’ ஜி. டில்லி பாபு   

ஒரு கொலை நடக்க, கொலையாளி யார்? என்பதை ஏகப்பட்ட திருப்பங்களுடன் சொல்லும் கிரைம் திரில்லர் திரைப் படம். 

கால் டாக்சி டிரைவரான அருள்நிதியும், நர்ஸ் மஹிமாவும் காதலர்கள். வேலை முடிந்து இரவில் வீடு திரும்பும் மஹிமாவிடம் ஒருவன் வம்பிழுக்க, அஜ்மல் வந்து  காப்பாற்றுகிறார். இதை சாதகமாக்கிக் கொள்ளும் அஜ்மல், மஹிமாவை, அடையத் துடிக்க, அவரின் கன்னத்தில் அறைந்துவிடுகிறார் மஹிமா.தொடர்ந்து அஜ்மல் தொந்தரவு தர, தனது காதலரான அருள்நிதியிடம் விஷயத்தை சொல்கிறார் மஹிமா. 

அதேசமயம், தன்னிடம் அஜ்மல் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், வீடியோ ஒன்றை வைத்து மிரட்டுவதாகவும் சாயா சிங் கூற, அவருக்கு முடிவுகட்ட நினைக்கிறார் அருள் நிதி. 

ஆவேசத்தோடு அஜ்மல் வீட்டிற்கு அருள்நிதி செல்ல, அங்கு சுஜா வருணி கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சயடைகிறார். இதயடுத்து போலீஸ் அவரை கைது செய்கின்றனர். 

சுஜாவை கொலையை செய்தது யார்? சுஜா வருணிக்கும், அஜ்மலுக்கும் என்ன சம்பந்தம்? அந்த கொலையில் இருக்கும் மர்மம் என்ன? போலீசிடம் சிக்கிய அருள்நிதி கதி என்ன? என்பது மீதிக் கதை! 

இரவு வேளையில், சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்த கால் டாக்சி டிரைவர் அருள் நிதியிடம், போலீஸ் விசாரணை செய்வதிலிருந்து துவங்குகிறது கதை!

இரவில் நடக்கும் ஒரு கொலை, அந்த கொலையில் சம்பந்தப்படாத ஒரு கால் டாக்சி டிரைவர் சிக்கிக்கொள்ள, அதிலிருந்து வெளியே வர, போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்கும் அவன், அதில் மர்மங்களை முடிச்சுக்களை மெல்ல அவிழ்த்து, உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கிறான் என்பதை த்ரில்லிங்கான திரைக்கதையுடன் கொடுக்க முயற்சி செய்திருக்கும் இயக்குநர் மு.மாறன், அதை ஏகப்பட்ட’ட்விஸ்ட்’வைத்து சொன்னது, காதை சுத்தி மூக்கை தொடுவதைப் போல உள்ளது. கதைக்குள் நிறைய கிளைக்கதைகள் இருப்பதால் பெரும் குழப்பம். ஆனாலும், விறுவிறுப்பாக செல்கிறது படம். பெரும்பாலான காட்சிகள் இரவிலும், மழையிலும் எடுக்கப்பட்டிருப்பது கிரைம் திரில்லர் கதைக்கு கை கொடுக்கிறது.     


ரொமான்ஸ் மற்றும் ஆக்‌ஷன் ஏரியாவில் அசத்துகிறார் அருள்நிதி. காதலிக்காக பிரச்னையை எதிர்கொள்ளும் போது ஆக்ரோஷத்தை அருமையாக வெளிப்படுத்துகிறார். காட்டன் சேலையில், புன்னகை பொங்க அழகு தேவதையாக வலம் வருகிறார். வந்து கவர்கிறார் நாயகி மஹிமா நம்பியார். நர்ஸாக வந்து மனதை தைக்கிறார்.

 நடுத்தர வயதில் இருக்கும் பணக்கார சபலிஸ்ட்டுகளிடம் தனது காதலியைக் காட்டி மயக்கி பணம் பறிக்கும் வில்லத்தனமான வேலையை வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார் அஜ்மல். அவரின் காதலி வித்யா பிரதீப், கூட்டாளி சுஜா வருணி, சபலப்புத்தியால் சிக்கலில் மாட்டும் ஆனந்தராஜ் ஆடுகளம் நரேன் மற்றும் ஜான் விஜய், கணவனால் டார்ச்சர் அனுபவிக்கும் சாயா சிங், எழுத்தாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றவர்கள் தங்களின்  கதாப்பாத்திரங்களுக்கு வலு சேர்த்திருக்கின்றனர்.


சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் மனதில் ஒட்டாமல் போனாலும், பின்னணி இசையில் பின்னுகிறார். அரவிந்த் சிங்கின் கேமரா இரவுக் காட்சிகளை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.’இரவுக்கு ஆயிரம் கண்கள்’படத்துக்கு நம்ம ரேட்டிங் 2/5  

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.