திரை விமர்சனம்: பாஸ்கர் ஒரு ராஸ்கல் - தாங்க முடியலடா சாமி!

  SRK   | Last Modified : 17 May, 2018 05:44 pm


2015ம் ஆண்டு மலையாளத்தில், மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகிய பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்.

படிக்காத பணக்காரராக வரும் 'அடிதடி' தொழிலதிபர் அரவிந்த்சாமிக்கு ஒரே மகன், மனைவி கிடையாது. படித்த பணக்கார பெண்ணாக அமலா பால். அவருக்கு ஒரே மகள், கணவர் கிடையாது. நெருங்கிய நண்பர்களான இரு குழந்தைகளும், தங்களுக்கு இல்லாமல் போன தாயையும், தந்தையையும், மற்றவர் வீட்டில் பார்த்து லயிக்கிறார்கள். அரவிந்த் சாமிக்கு அமலா பால் குழந்தை மீதும், அமலா பாலுக்கு அரவிந்த்சாமி மகன் மீதும் பாசம் கொஞ்சம் அதிகம்.

இரண்டு குழந்தைகளும், தங்களது பெற்றோர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார்கள். அது வெற்றியடைந்ததா என்பது தான் கதை.

மலையாளத்தில் ஆஹா ஓஹோ என பேசப்பட்ட படம். சித்திக் வழக்கம் போல, தான் எடுத்த மலையாள படத்தை தமிழிலும் ரீமேக் செய்துள்ளார். அதனால நம்பி பாப்போம் என்று நாமும் தலையை கொடுத்தோம், பாஸ்கர் ஒரு ராஸ்கலிடம். இயக்குனருக்கும் அரவிந்த்சாமிக்கும் ஏதாவது தகறாரா அல்லது, மலையாள ரசிகர்களுக்கு மூளை மழுங்கிவிட்டதா, என்று தெரியவில்லை. படம் அவ்வளவு மோசம். 

அரவிந்த்சாமியின் மகனாக 'சேதுபதி' புகழ் மாஸ்டர் ராகவன். அமலா பால் மகளாக 'தெறி' புகழ் நைனிகா. சேதுபதியை போலவே இந்த படத்திலும் ராகவன் சிறப்பாக நடித்துள்ளார். ஆனால், நைனிகாவுக்கு இது ஏற்ற ரோலே கிடையாது. ஸ்டார் மகள் என்ற ஒரே காரணத்திற்காக நடிக்க வைத்தார்களா என தெரியவில்லை. க்யூட் எக்ஸ்ப்ரெஷன்ஸ் ஒர்க் அவுட்டானாலும், வசன உச்சரிப்பில் அந்த குழந்தை படாத பாடு படுவது நமக்கே வேதனையாக உள்ளது. இன்னும் ஒரு வயது பெரிய சிறுமியை நடிக்க வைத்திருக்கலாம். 

கடும் கோபக்காரராம் 'ராஸ்கல்' அரவிந்த்சாமி. அதனால், பார்ப்பார்களை எல்லாம் அடிக்கிறார். அவருடன் வரும் அடிபொடிகளாக ரோபோ ஷங்கர், சூரி, ரமேஷ் கண்ணா என 3 காமெடியன்கள். படம் முழுக்க தலைகீழாக அவர்கள் நின்றும் நமக்கு சிரிப்பு வரவில்லை. இது போதாதென்று, பல திடீர் திடீர் திருப்பங்கள். பேமிலி படமாக போய்க்கொண்டு இருக்கும் போது, திடீரென, மாஃபியா, கடத்தல், டெரரிஸ்ட் என புதிய வில்லன்களை அறிமுகப்படுத்தி காமெடி செய்கிறார்கள். சுத்தமாக எடுபடவில்லை. அவர்களின் வில்லத்தனமும், 'பூச்சாண்டி' ரேஞ்சுக்கே உள்ளது.


எடிட்டிங் ரொம்பவே மோசம். திடீர் திடீரென கட் செய்து, வேறு எங்கோ ஒட் செய்கிறார்கள். முக்கியமான காட்சிகளில் கோர்வையில்லை. சிம்பிளாக முடிக்க வேண்டிய படத்தை தேவையில்லாத ட்விஸ்ட்களை வைத்து ஜவ்வாக இழுத்து நம் பொறுமையை சோதித்திருக்கிறார் சித்திக். தமிழில்தான் இப்படியோ, என நினைத்து விசாரித்த போது தான் தெரிகிறது, மலையாளத்திலும் படம் இதேபோல தான் என்று.

அங்கு மம்மூட்டி ரசிகர்கள் படத்துக்கு நல்ல பில்ட்அப் கொடுத்து தேத்தி விட்டார்கள். ஆனால், இங்கு அதற்கு சான்ஸே இல்லை. 

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - 1.5 / 5

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.