’காளி’ - திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 18 May, 2018 05:58 pm


நட்சத்திரங்கள் : விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா,யோகி பாபு, நாசர், ஆர்.கே.சுரேஷ், வேல.ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ், மதுசூதன், சித்ரா லட்சுமணன், இசை : விஜய் ஆண்டனி, இயக்கம் : கிருத்திகா உதயநிதி, தயாரிப்பு :விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்ஸ்.   

தந்தையைத் தேடி அலையும் மகனின் கதை!

அமெரிக்காவில் மிகப்பெரிய மருத்துவமனையை நிர்வகித்து வரும் டாக்டரான விஜய் ஆண்டனி, தானொரு வளர்ப்பு மகன் எனவும், தமிழ்நாட்டின் தென்கோடிக் கிராமத்தில் ஒரு ஏழைத் தாய்க்கு பிறந்த குழந்தையெனவும், அந்த தாய் உயிரோடு இல்லையெனவும் தெரிய வர, தனது தந்தையைத் தேடி கிராமத்துக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. அந்த ஊரிலேயே தங்கி ஏழை எளியோருக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கும் விஜய் ஆண்டனிக்கு உதவுகிறார் யோகி பாபு. தந்தையைத் தேடும் முயற்சியில் விஜய் ஆண்டனி எப்படி வெற்றி பெறுகிறார்? என்பது மீதிக் கதை!


மரணத்தின் தருவாயில் தாய், பிள்ளையைப் பிரசவிப்பது, அனாதயாக விடப்பட்ட அந்தப் பிள்ளையை வசதியான தம்பதி எடுத்து வளர்ப்பது, வளர்ப்பு மகனுக்கு உண்மை தெரிந்ததும் அவன், தந்தையைத் தேடி அலைவது... ’ஃபேமிலி ஷாங்’ மட்டும் தான் இல்லை! மற்றபடி பல படங்களில் பார்த்து சலித்துப் போன பழங்கதை! காதல், ஆக்‌ஷன்,அம்மா சென்டிமென்ட் ஷாங்... என வழக்கமான கமர்ஷியல் பேக்கேஜ் ஃபார் முலாவில் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கீர்த்திகா உதயநிதி. இந்தக் கமர்ஷியல் கதைக்குள் கந்து வட்டிக் கொடுமை, சாதிக் கலவரம் போன்ற சில முக்கியமான பிரச்னைகளையும் தொட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.  

பொதுவாக, ஃபிளாஷ் பேக் எபிஷோடில், சம்பந்தப்பட்ட நடிகருக்கு ’விக்’ வைத்து, மீசைக்கு மை தடவி, இளமைத் தோற்றத்துக்கு மாற்றி வெறுப்பேற்றுவார்கள்! ஆனால், இதில் வரும் ஃபிளாஷ் பேக் எபிஷோடில் விஜய் ஆண்டனியையே நடிக்க வைத்திருப்பது கொஞ்சம் புதுசாக இருக்கிறது. அதற்காக, கல்லூரி மாணவனாகக் காட்டியது கொஞ்சம் ஓவர்தான்!       


காலேஜ் ஸ்டூடண்ட், டாக்டர், மத போதகர், திருடன் என நான்கு மாறுபட்ட ’கெட் அப்’ களில் தோன்றுகிறார் நாயகன் விஜய் ஆண்டனி. ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தும் விஜய் ஆண்டனி, காதல் காட்சிகளில் நடிகைகளை தொடாமலே ‘ரொமான்ஸ்’ செய்வார்! ஆனால், இதில் நான்கு ஹீரோயின்கள் இருப்பதால், காட்சிகளில் நெருக்கம் காட்டி ’ரொமான்ஸ்’ முத்திரை பதித்திருக்கிறார். சித்த மருத்துவராக வரும் அஞ்சலி, ‘ஃபிளாஷ் பேக்’கில் வரும் கல்லூரி மாணவி அம்ருதா, கந்து வட்டிக் கொடுமையால் வயதானருக்கு வாழ்க்கைப் பட்டு, பிறகு வீட்டுக்கு வந்த திருடன் மீது ஆசை வைக்கும் ஷில்பா, சாதி கலவரத்தில் உயிர் துறக்கும் சுனைனா என நான்கு நாயகிகளையும் மிக சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 

கந்து வட்டிக்கார ’கறார்’ பார்ட்டி வேல.ராமமூர்த்தி, அவரின் அல்லக்கை ஆர்.கே.சுரேஷ், ஊர் தலைவர் மதுசூதனன், திருடனாக  வரும் நாசர் ஆகியோர் தன்களின் அனுபவ முத்திரையைப் பதிக்கின்றனர். யோகி பாபு அவ்வப்போது அடிக்கும் ’கமெண்ட்டுகள்’ கலகலக்க வைக்கிறது. ’அரும்பே’ பாடல்  ரசிகர்கள் மனதில் அரும்புகிறது. ’காளி’க்கு ரேட்டிங் 2.5/5  

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.