‘ஒரு குப்பைக் கதை’ – திரைவிமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 26 May, 2018 12:19 pm


நட்சத்திரங்கள்: தினேஷ், மனிஷா யாதவ், சுஜோ மேத்யூஸ், ஜார்ஜ், யோகிபாபு,  ஆதிரா, கோவை பானு,  லலிதா, கிரன் ஆர்யன், இசை: ஜோஷ்வா ஸ்ரீதர்,  ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசுவாமி, இயக்கம்: காளி ரெங்கசாமி, தயாரிப்பு:    வெளியீடு : உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ்.  

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கணவனை கைவிட்டு, வேறொருவனோடு போன ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது? என்பதை யதார்த்தமாக சொல்லும் படம்!

சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் தொழிலாளியான குமாருக்கும் (தினேஷ்), வால்பாறையை சேர்ந்த பூங்கொடிக்கும் (மனிஷா) திருமணமாகிறது. இயற்கை அழகு நிறைந்த மலைப் பிரதேசத்தில் பிறந்த பூங்கொடி, கூவத்துக்கும் - குடிசைக்கும் நடுவே மனம் ஒட்டாமலே வாழ்க்கையைத் துவங்குகிறார். இதற்கிடையே, கணவன் ஒரு குப்பை அள்ளும் தொழிலாளி என தெரிந்து மனம் குமுறுகிறார். 

பிரசவத்துக்கு தாய் வீடு சென்ற மனைவி, குடும்பம் நடத்த வர மறுக்கவே, கூவத்துக்கும் - குடிசைக்கும் நடுவே வாழப் பிடிக்காத மனைவிக்காக அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு பிடிக்கிறான் கணவன். அங்குதான் சிக்கலே ஆரம்பிக்கிறது! எதிர்வீட்டில் இருக்கும் ஸ்டைலிஸ் ஃபேச்சுலர் அர்ஜூனின் ஆடம்பர வாழ்க்கை, பூங்கொடியின் மனதை மெல்ல மெல்ல மாற்றுகிறது. வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கணவனை கைவிட்டு, கை குழந்தையோடு அர்ஜுனுடன் ஓடிப்போகிறாள்! பிறகு, குமாரின் கதி என்னவாகிறது? பூங்கொடியின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது? எனபது மீதிக் கதை!  


சுகத்துக்கும், சுக போக வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு கணவனை கைவிட்டு, வேறொருவனோடு ஓடிப் போகும் இளம் பெண்கள் பற்றி செய்திதாள்களில் வரும் தகவல்களையே கதியின் கருவாக எடுத்துக் கொண்டு, அந்த மாதிரிப் பெண்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் சீரழிகிறது எனபதை இந்தப் படத்தின் வழியாக நல்ல பாடம் கற்பித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் காளி ரெங்கசாமி. 

பெரிய ஹீரோக்கள் பலரை ஆட்டிவைத்த நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர், இதில் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். சாதாரண நடிகர்களே நடிக்கத் தயங்கும் கேரக்டரை மிக துணிச்சலாக ஏற்று, குப்பை அள்ளும் தொழிலாளியாகவே மாறியிருக்கிறார் தினேஷ் மாஸ்டர். நடந்த்தில் முத்திரை பதித்திருக்கும் அவர், நடிப்பிலும் முத்திரையைப் பதித்திருக்கிறார். மனைவியை நேசிப்பது, நேசித்த வேலையை மனைவிக்காக விடுவது, மனைவியின் துரோக்கத்தை தாங்கமுடியாமல் குடிகாரனாவது, அந்து துரோகத்தையும் மன்னிப்பது.. என கதையின் போக்குக்கு ஏற்ப இயல்பான நடிப்பைக் காட்டி மனதில் இடம் பிடிக்கிறார். 

இயற்கை அழகு நிறைந்த வால்பாறை போன்ற மலைப் பிரதேசத்தில் பிறந்த ஒரு பெண், கூவ நாத்தத்துக்கும், கொசுக்கடிக்கும், குடிசைக்கும் நடுவே வாழ்க்கைப்பட்டால் அவள் எப்படி மன ஒவ்வாமையோடு இருப்பாளோ அந்த உணர்வுகளை முகபாவங்கள் வழியாகவே காட்டி பிரமிக்க வைக்கிறார் கதையின் நாயகி மனிஷா. காதலனின் சுயரூபம் தெரிந்து கதறும் போதும், கணவனுக்கு செய்த துரோகத்தை நினைத்து கலங்கும் போதும், கதாப்பாத்திரத்தின் கனத்தை உணர்ந்து  நடித்திருக்கிறார்.


ஹீரோ நண்பன் யோகிபாபு வரும்போதெல்லாம் சிரிப்பு வெடியை கொழுத்திப் போடுகிறார், நாயகனின் தாய் ஆதிரா, நாயகியின் தந்தை ஜார்ஜ், தாய் கோவை பானு, மனிஷாவின் மனதை மயக்கும் சுஜோ மாத்யூஸ், அவரின் நண்பன் கிரன் ஆர்யன் என அனைவருமே தங்களின் கதாபாத்திரத்துக்கு  ஏற்ற நடிப்பை வழன்கியுள்ளனர். 

பாடல்களை விட பின்னணி இசையில் பிரமாதம். சென்னை நகரத்தின் கூவம், குடிசைகளையும், வால்ப்பாறையின் இயற்கை அழகையும் சிறப்பாகப் படம் பிடித்திருக்கிறது மகேஷ் முத்துசுவாமியின் கேமரா. நம்ம ரேட்டிங்  2.5/5

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close