’செம’ திரைப்பட விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 25 May, 2018 05:54 pm


நட்சத்திரங்கள் : ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா, யோகி பாபு, மன்சூர் அலிகான், கோவை சரளா, சுஜாதா, ஜனா, இசை : ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு : எம்.எஸ்.விவேகானந்தன், இயக்கம் : வள்ளிகாந்த், தயாரிப்பு :  லிங்க பைரவி கிரியேஷன்ஸ் - பசங்க புரொடக்‌ஷன்ஸ். 

திருமணத்துக்குப் பெண்தேடும் ஜி.வி.பிரகாஷ், சந்திக்கும் பிரச்னைகளை காமெடியாக சொல்லும் படம்.

நண்பர்களான ஜி.வி.பிரகாஷ் - யோகி பாபு இருவரும் வேனில் ஊர் ஊராக சென்று காய் கறி வியாபாரம் செய்து வருகின்றனர். ஜோதிடரின் சொன்ன படி மகன் ஜி.வி.பிரகாஷூக்கு, மூன்று மாதத்துக்குள் திருமணத்தை முடிக்க முடிவு செய்கிறார் தாய் சுஜாதா! ஆனால்,தொழிலை காரணம் காட்டி உள்ளூரில் பெண் தர மறுக்கின்றனர். இந்த நிலையில், வெளியூரை சேர்ந்த சமையல் காண்ட்ராக்டர் மன்சூரலிகான், தனது பெண் அர்த்தனாவை தர சம்மதிக்கிறார்.

இதற்கிடையே, உள்ளூர் எம்.எல்.ஏ மகன், தன் மகளை விரும்புவது தெரிந்து மனசு மாறுகிறார் மன்சூரலிகான். ஆனால்,அதில் விருப்பம் இல்லாத அர்த்தனா, தன்னை பெண் பார்த்து சென்ற ஜி.வி.பிரகாஷ் உடன் காதல் வளர்க்கிறார். ஒரு கட்டத்தில், சென்னைக்கு வேலைக்குப் போவதாக சொல்லி விட்டு, தாய் கோவை சரளாவின் சம்மத்துடன் ஜி.வி.பிரகாஷை ரகசிய திருமணம் செய்து கொள்கிறார் அர்த்தனா. இந்த ரகசியம் அம்பலமாகும் போது மன்சூரலிகானின் ரியாக்‌ஷன் என்ன? எனபது மீதிக் கதை!      


டபுள் மீனிங் டயலாக் பேசாமல், ’அந்த’ மாதிரியான வில்லங்க வேலைகள் எதுவும் செய்யாமல், ஜி.வி.பிரகாஷை நல்ல பையனாக காட்டி, தைரியமாக குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும்படி படத்தைக் கொடுத்ததற்காகவே இயக்குநர் வள்ளிகாந்த்துக்கு ஒரு ஸ்பெஷல் கை குலுக்கல்! கதையில் அழுத்தம் இல்லாமல், காமெடியை வைத்தே படத்தை நகர்த்த தெரிந்த இயக்குநர், நிச்சயதார்த்தோடு திருமணம் நிற்பது, அதற்குப் பிறகு காதல் மலர்வது, வீட்டுக்குத் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து குடும்பம் நடத்துவது என ஏற்கனவே வந்த படங்களின் காட்சியமைப்புகளை தவிர்த்திருக்கலாம்!  

விடலைப் பயன் மற்றும் வெர்ஜன் ஃபாய் என பார்த்துப் பழக்கப்பட்ட ஜி.வி.பிரகாஷ், இதில் கிராமத்து இளைஞன் கதாப்பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். காதலிக்காத, திருமணத்துக்கு சம்மதிக்காத உள்ளூர் பெண்களை தேடிப் போய் கலாய்ப்பது, பிறகு கல்யாணம் கை கூடாமல் போனதும் கலங்குவது என மிகை இல்லாத இயல்பான நடிப்பைக்  காட்டுகிறார். 

குடும்பபாங்கான முகத்துடன் இருக்கும் நாயகி புதுமுகம் அர்த்தனா, தனது இயல்பான அழகிலும், அலட்டல் இல்லாத நடிப்பாலும் மனதில் நிறைகிறார். கிடைக்கும் கேப்பில் ’கவுன்டர் டயலாக்’ அடித்து கலகலகக்க வைக்கிறார் யோகி பாபு. நாயகியின் தந்தை காமெடி வில்லன் மன்சூர் அலிகான், கணவனை சமாளிக்கும் கோவை சரளா இருவரும் தங்களின் பங்கிற்கு காட்சியை கலகலப்பாக்குகின்றனர். இவர்களுக்கு நடுவே,குணசித்திர நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார் நாயகனின் தாய் சுஜாதா! எம்.எல்.ஏ. மகனாக வரும் ஜானா, வில்லத்தனம் காட்ட தவறிவிடுகிறார். 

’சண்டாளி...’ பாடல் பரவசப் படுத்துகிறது.  கிராமத்து அழகை அள்ளி வந்திருக்கிறது எம்.எஸ்.விவேகானந்தனின் கேமரா. ரேட்டிங் 2.5/5

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.