’காலா’ - திரை விமர்சனம் #KaalaReview

  பால பாரதி   | Last Modified : 08 Jun, 2018 12:03 pm

kaala-movie-review

நில உரிமையைப் பற்றியும், அதன் பின்னால் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது ’காலா’ திரைப்படம். 

நெல்லை சீமையிலிருந்து, மும்பைக்கு புலம் பெயர்ந்து சென்று, தாராவி குடிசைப் பகுதியில் குடியேறுகிறார் காலா என்ற கரிகாலனின் தந்தை வேங்கையன். அங்குள்ள குடிசைகளை அப்புறப்படுத்தி, அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யத் துடிக்கும் ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடி, அதில் உயிரை விடுகிறார் தந்தை வேங்கையன். அப்போது இளைஞனாக இருக்கும் காலா, அந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்று நிலத்தை மீட்டெடுக்க, குடிசைப் பகுதி மக்களின் குலதெய்வமாகவே மாறுகிறார் காலா.   

பல ஆண்டுகளுக்குப் பிறகு, காலாவுக்கு வயதாகி, பேரன் - பேத்திகளோடு இருக்கும் காலகட்டத்தில் மீண்டும் அந்த நிலப்பிரச்னை தலை தூக்குகிறது. கார்ப்பரேட் கம்பெனிக்காக, அரசியல்வாதி நானா படேகர் அந்த நிலத்தை கையகப்படுத்த முயற்சிக்க, அதற்கு குறுக்கே நிற்கிறார் காலா. இந்த நில உரிமைப் போராட்டத்தில் வெல்வது யார்? வீழ்வது யார்? என்பது மீதிக் கதை!  

    

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு வெளிவந்திருக்கும் படம் என்பதால் ’காலா’ திரைப்படம், அவரின் அரசியல் பயணத்துக்கு மிக முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது! ஆனால் படம், நேரடியாக அரசியல் பேசாமல் போனாலும், படத்துக்குள்ளே அரசியல் சாணக்கியத் தனங்களுக்கும், அரசியல் சாடல் வசனங்களுக்கும் கொஞ்சமும் பஞ்சம் இல்லை! ’சட்டத்த எங்களுக்கு மதிக்கவும் தெரியும், அதுவே எங்களுக்கு எதிரா திரும்பினா அதை எரிக்கவும் தெரியும்!’,’நெலம் ஒங்களுக்கு கவுரவம், எங்களுக்கு உரிமை! எங்களோட உரிமையில கை வைச்சா சும்மா இருக்க மாட்டோம்! என்பது போன்ற நெருப்பு வசனங்களோடு, ரஜினியின் இமேஜை உயர்த்திப்பிடிக்கும் காட்சிகளோடு, மன்னராட்சி காலம் தொட்டு, மக்களாட்சி காலம் வரை, காலா காலமாக இருக்கும் நில உரிமைப் பிரச்னையை, கார்டூன் உருவக் காட்சிகளாகக் காட்டி, தற்போதைய நிலப் பிரச்னையில் கொண்டு வந்து முடிச்சுப் போட்டிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். குடியிருக்கும் நிலத்துக்கு பிரச்னை வரும்போது அங்குள்ள மக்களின் காட்ஃபாதராக மாறும் இந்த ஹீரோவின் கதை, ’நாயகன்’ வேலு நாயக்கரை, நினைவு படுத்துகிறதே டைரக்டர் சார்! 

குடிசைப் பகுதி மக்களின் காவல் தெய்வமாக, மனைவி - மக்கள், பேரன் - பேத்திகள் மீது பாசம் காட்டும் குடும்பத் தலைவனாக, ஊரே மதிக்கும் மனிதனாக, மனைவியின் பாசத்துக்கு கட்டுப்படும் அன்பான கணவனாக, பழைய காதலியைக் கண்டதும் மலரும் நினைவுகளில் மிதக்கும் காதலனாக... இப்படி ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப தனது நடிப்பின் பரிமாணங்களைப் பக்குவமாய் பதிவு செய்கிறார் ரஜினி. தாதா கதாப்பாத்திர மாகவே இருந்தாலும், பலரையும் அடித்து பறக்க விடுவது, கத்தி - அறிவாள் அல்லது துப்பாக்கி போன்ற ஆயுதங்களோடு திரிவது மாதிரியான எந்த சித்தரிப்பும் இல்லாமல், அனல் பார்வையிலிலேயே அந்த தீவிரத்தைக் கொண்டு வரும் எமோசனல் ஏரியாவிலும், காதலியைக் கண்டதும் பழைய நினைவுகளில் மிதக்கும் ரொமான்ஸ் ஏரியாவிலும் முத்திரை பதிக்கிறார் ரஜினி!      

 

     

தலைய தலைய கட்டிய புடவை, வட்டமான நெற்றிப் பொட்டு, கழுத்தில் ரெட்டை வடம் சங்கிலி, மணக்கும் நெல்லைத் தமிழ்.. என மனதை ஆக்கிரமித்துக் கொள்கிறார் ரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரிராவ். அழகாலும், அமைதியான நடிப்பாலும் கவனம் ஈர்க்கிறார் காதலியாக வரும் ஹுமா குரேஷி. வில்லத்தனத்தை சைலண்டாக காட்டி மிரள வைக்கிறார் அரசியல்வாதி நானா படேகர். ரஜினியின் வலது கரம் போல இருக்கும் மச்சான் சமுத்திரக்கனி, மகன்கள் திலீபன் - நித்தீஷ், மருமகள்கள் அருந்ததி - அஞ்சலி பட்டேல், நண்பன் அருள்தாஸ், அரசியல்வாதியின் கையாள் சம்பத் ராஜ் ஆகியோர் தங்களின் கதாப்பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர். 

காட்சிகளின் வேகத்துக்கு ஏற்ப பரபரக்க வைக்கும் பின்னணி இசையை தரும் சந்தோஷ் நாராயணன், ’கண்ணம்மா..’ பாடலில் மென்மையான இசையால் மனதை பிசைகிறார். மும்மை தாராவிப் பகுதியை தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் முரளிஜி! ’காலா’வுக்கு நம்ம ரேட்டிங் 3/5

 

Poll loading...

 

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.