காலா - ஏன் கொண்டாடப்பட வேண்டும்?

  பால கணேசன்   | Last Modified : 08 Jun, 2018 02:21 pm
why-should-we-praise-kaala

ரஜினியின் திரைப்படங்களின் நிறம் நமக்கெல்லாம் ஏற்கனவே பழக்கமான ஒன்றுதான். அண்ணாமலை படத்திற்கு பிறகான ரஜினியின் படங்களில் கதை என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஒரு அனாதை அல்லது ஏழை இளைஞன். அவனை துரத்தி துரத்தி காதலிக்கும் ஒரு பெண். அவனுக்கு வில்லனால் ஏற்படும் ஒரு பிரச்னை. அதை அவன் ஜெயித்து அந்த பெண்ணை கரம்பிடிப்பது ஒரு கதை. இன்னொன்றில் ரஜினி பெரிய பணக்காரர். அவரை ஏமாற்றும் ஒருவன். இல்லையெனில் மக்களுக்காக தனது சொத்தையெல்லாம் இழக்கும் ரஜினி. இதனால் ஏற்படும் கெட்டபெயர். இதையெல்லாம் சரி செய்து இறுதியில் வெற்றிவாகை சூடுவது. இப்படி இரண்டே தளங்களில்தான் ரஜினியின் மாஸ் வெற்றி படங்கள் இயங்கி வந்தன. இடையில் தளபதி, எந்திரன் போன்ற சில வித்தியாசமான படங்கள். நன்கு கவனித்தால் இந்த தளபதி மற்றும் எந்திரன் இரண்டு படங்களுமே இயக்குநரின் படமாகத்தான் இன்றும் அறியப்படுகிறது. 

இந்த நிலையில் ரஜினியின் கோச்சடையான், லிங்கா இரண்டுமே வசூல் ரீதியில் தோல்விப்படமாக மாற ரஜினி என்கிற சூப்பர் ஸ்டாரின், மந்திரக்காரரின் மீதான பார்வை மாற தொடங்கியது. எப்போதும் மக்கள் தீர்ப்பை தெளிவாக புரிந்துகொள்ளும் திறனுடைய ரஜினி தனக்குத்தானே செய்த சுயபரிசோதனைதான் கபாலி. தன் வயதிற்கேற்ற ஒரு கதாபாத்திரம் செய்து பார்க்க நினைத்த அவர் அதற்கு இயக்குநராக அட்டக்கத்தி, மெட்ராஸ் என்கிற இரண்டு வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்த பா.ரஞ்சித்தை தேர்ந்தெடுத்தார். கபாலி உருவானது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித்தை பற்றிய பார்வையையும் நாம் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். அவரது படங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, வலியை பதிவு செய்பவை. தனது படங்களில் நேரடியாக தலித் அரசியலை பேசுபவர்.

ரஜினியோ இதற்கு நேரெதிரான அரசியல் நிலைப்பாடு கொண்டவர் என்று அறியப்படுபவர். இப்படி இருக்கையில் இந்த கூட்டணியில் வெளிவரும் படத்திற்கு ஏற்படும் ஒரு இயல்பான பரபரப்பு கபாலிக்கும் நிகழ்ந்தது. படமும் வெளியாகி மிகவும் கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் மெதுவாக நகர்ந்ததும், பலமான வில்லன் இல்லாததாலும் பல ரஜினி ரசிகர்களாலேயே எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டது. ஆயினும் பா.ரஞ்சித் தனது அரசியல் பார்வையை இந்தப்படத்திலும் மிகத் தெளிவாக ரஜினியை வைத்து பேசியிருந்தார். "நான் கால் மேல கால் போட்டு உக்காருறதுதான் உன் பிரச்னைன்னா, நான் அப்படித்தான் உக்காருவேன்டா... ஸ்டைலா... கெத்தா..." போன்ற வசனங்கள் ஒடுக்கப்படும் மக்களின் எழுச்சியை பதிவு செய்தது.

பின்னர் மீண்டும் ரஜினி பா.ரஞ்சித் இயக்கத்தில் காலாவில் நடிக்கப்போவதாக செய்தி வந்தது. கடந்த முறையைவிட இந்த முறை பரபரப்பு இன்னும் அதிகமாக தொற்றிக்கொண்டது. இடையில் ரஜினியும் தன்னுடைய அரசியல் பிரவேசத்தைப் பற்றி மிகவும் வெளிப்படையாக அறிவித்துவிட, இந்தப்படம் பேசப்போகும் அரசியல் பற்றியும் சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. இதோ இப்போது படமும் வெளியாகிவிட்டது. இனி காலா...

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ என்னும் விஷயம் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது. அது ரஜினியின் தொடர்ச்சியில் வேறு ஒரு உயரத்திற்கு சென்றது. காலா அந்த ஹீரோயிசத்துக்கே புது வடிவம் கொடுத்திருக்கிறது. அப்படி என்ன புது வடிவம் என்கிற கேள்வி எழலாம். இதுவரை வெளியான மாஸ் ஹீரோ படங்களில் நாயகனுக்கு எந்தவித மத, சாதி அடையாளமும் வெளிப்படையாக சொல்லப்படமாட்டாது. அதை காலாவில் ரஞ்சித் உடைத்திருக்கிறார். காலாவில் ரஜினி போராடுவது ஆசியாவின் மிகப்பெரிய சேரியான தாராவி மக்களுக்காக. அவரும் அதே தாராவியில் வசிக்கும் ஒருவர். பிழைப்பு தேடி தென் தமிழகத்தில் இருந்து மும்பைக்கு குடியேறியவர். தொடர்ந்து ஒடுக்கப்படும் மக்களின் ஒரே நம்பிக்கையாக திகழ்பவர். இதுபோன்ற கதைகள் ரஜினிக்கு புதிதில்லை. ஆயினும் இதை புதுமையாக்குவது கதை நடக்கும் களமும், கரிகாலன் என்கிற கதாபாத்திரத்தின் தனிப்பட்ட வாழ்க்கை காண்பிக்கப்பட்ட விதமும் ஆகும். 

வழக்கமான மசாலா படங்களில் பேசுவதுபோல் பொதுவான தமிழ் பேசாமல் (புகழ்பெற்ற நாயகன் படத்தில் கூட அப்படித்தான் பேசப்பட்டது) அங்கே தாராவியில் என்ன மாதிரியான மொழி கையாளப்படுகிறதோ அதுவே படத்திலும் பேசப்படுவதால் மிக எளிதாக அந்த களத்தோடு நாமும் ஒன்ற முடிகிறது. குறிப்பாக பொருத்தமான இடங்களில் ரஜினி பேசும் இந்தியும், மராட்டியும் திரையரங்கில் கைத்தட்டலையும் விசிலையும் ஒருசேர பெறுகிறது. இடைவேளைக் காட்சியில் நானா படேகரை பார்த்து ரஜினி சொல்லும் "நிக்கல்.." என்கிற ஒற்றை வார்த்தையும், அதைத்தொடர்ந்து ஒலிக்கும் "நிக்கல் நிக்கல் ச்செல் தேரே..." பாடலும் மயிர்க்கூச்செறிய வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அடுத்து ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கை. அன்பான மனைவியாக ஈஸ்வரி ராவ் நடித்து அதகளம் செய்திருக்கிறார். பல ஆண்டுகள் கழித்து காலா தனது முன்னால் காதலியை சந்திக்கும் காட்சியும் அதைத்தொடர்ந்து ஈஸ்வரி ராவ் அவர்கள் கலவை அணுகும் முறையும் மிகவும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காலா, தன் காதலியின் அருகில் இருக்கையில் அவளின் ஒவ்வொரு செய்கையையும் ரசிக்கும் காட்சி புன்முறுவலை வரவைக்கக்கூடியது.

அதேபோல் ரஜினியின் மகன்களாக நடித்திருக்க கூடிய வத்திக்குச்சி திலீபன் மற்றும் லெனினாக நடித்திருக்கும் மணிகண்டன் ஆகிய இருவரும் மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். அவர்கள் இருவரையும் காலா கையாளும் விதமும் அருமை. குறிப்பாக போராளி என்கிற போர்வையில் அடிப்படையே புரியாமல் வெறும் மேம்போக்கான மனநிலை கொண்டு திரியும் இன்றைய புதுயுக போராளிகளின் ஒட்டுமொத்த சாட்சியாக லெனின் கதாபாத்திரம் இருக்க, அதை மிகச்சரியான நேரத்தில் இடித்துரைத்து சரியான போராட்ட வழியை காலா காண்பிக்கும் காட்சிகளுக்கு உண்மையிலேயே தலைவணங்குவோம்.ஏனெனில் இணையப்போராளிகள் பெருத்துவிட்ட இக்காலகட்டத்தில் இது அவசியமாகிறது.

நானா படேகர் ஒரு அற்புதமான நடிகர். அவரின் முழுத் திறமையை வெளிக்கொணர்ந்த படங்கள் மிகவும் குறைவு. அக்குறையை காலா தீர்த்துவைத்துள்ளது. ரஜினி போன்ற மிகப்பெரிய மாஸ் நடிகரின் படத்தின் வெற்றி பெரும்பாலும் அப்படங்களின் வில்லன்கள் மூலமே தீர்மானிக்கப்படுகின்றன. பாட்ஷாவில் ரகுவரன், படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் போன்றோர் அதற்கு மிகச்சரியான உதாரணங்கள். இதில் தற்போது நானா படேகரும் அதை நிரூபித்துள்ளார். முதல் காட்சியில் நானா படேகரின் கட்சியை சேர்ந்த சம்பத் ஒரு பிரச்னையை உருவாக்கி பேசிக்கொண்டிருக்கையில் காலா அங்கே வந்து பிரச்னையை சேரி மக்களுக்கு ஆதரவாக மாற்றி வைத்து முடிந்ததும் நேராக கேமரா அந்த  குடிசைப்பகுதியின் மேலே வைக்கப்பட்டிருக்கும் ஒரு கட்-அவுட்டை காட்டும். அதில் நானா படேகர் சிரித்துக்கொண்டிருப்பார். மொத்தக் காட்சியின் தீவிரத்தையும் ஒரே ஒரு ஷாட்டில் பதிந்திருப்பார் இயக்குனர். சபாஷ் போட வைக்கும் காட்சி அமைப்பு அது.

ரஜினி படங்களில் கருப்பு நிறம் பற்றி பேசப்படுவது ஒன்றும் புதிது இல்லை. அவரின் புதுக்கவிதை படத்தில் இருந்தே இது தொடர்கிறது. சிவாஜி படத்தில் அதற்கென்றே பல காட்சிகள் உண்டு. ஆனால் அவையெல்லாம் பெரும்பாலும் காமெடி காட்சிகளாக இருக்கும். ஆனால் உண்மையில் வண்ணங்களின் பின்னால் மிகப்பெரிய அரசியலே ஒளிந்திருக்கிறது. ரஞ்சித்தின் மெட்ராஸ் படத்திலேயே இதை ஓரளவுக்கு மறைமுகமாக காண்பித்திருப்பார். அந்த வண்ணங்களை இந்தப்படத்தில் மிகவும் வெளிப்படையாகவே இயக்குனர் காட்சிப்படுத்தி இருக்கிறார். கருப்பு என்பது உழைக்கும் மக்களின் வண்ணம் என்று ரஜினியே ஒரு வசனம் மூலமாக கூறுகிறார். இது ரஜினி பேசிய வசனங்களில் மிகப்பெரிய பாய்ச்சல். உண்மையில் இங்கே வெண்மை நிறம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களை  அடிமைப்படுத்த துடிப்பது கண்கூடு. அந்த வெண்மை நிறத்திற்கு எதிரான போர் இந்த படத்தின் இறுதிக்காட்சியில் நிகழ்கிறது. முதலில் கருப்பும், பின்னர் சிவப்பும் இறுதியாக ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளமான நீலமும் மொத்த திரையையும் ஆக்கிரமிக்க அதன் பின்னணியில் வெள்ளை நிறத்தை வேட்டையாடும் காட்சி ஒரு மாஸ் ஹீரோ படத்தில் நிகழ்வதென்பது குறிஞ்சிப்பூ. அது இங்கே நிகழ்ந்திருக்கிறது.

கபாலியில் நிகழ்ந்ததாக சொல்லப்படும் எல்லா தவறுகளும் களையப்பட்டு, ரஜினி என்கிற மிகத்திறமையான நடிகரின் முழுத்திறனையும் வெளிப்படுத்தி அதேநேரத்தில் தான் பேசும் அரசியலிலும் தெளிவாக இருந்ததற்காக ரஞ்சித்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ரஜினியின் கண்கள் இந்தப்படம் முழுக்க பல பாடுகின்றன. மனைவியை கொஞ்சும்போதும், முன்னால் காதலியோடு அமர்ந்திருக்கையில் அவளையறியாமல் அவளின் அசைவுகளை மெல்ல ரசிக்கும்போதும், காவல்துறை அலுவலக காட்சியில் "ஆமா இவர் யாரு?" என்கிற கேள்வியை நக்கலாக, சிரிப்பாக, உற்சாகமாக, கோபமாக என மாறி மாறி உணர்ச்சிகளை கொட்டி கேட்கையில், ஒரு பெரும் துயர சம்பவத்திற்கு பிறகு நானா படேகரை  சந்திக்க போகையில் அந்த சோகத்தையும் அதேநேரத்தில் வேட்கையையும்  சுமந்து நிற்கையில் என ஒவ்வொரு முக்கிய காட்சியிலும் ரஜினி தான் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார். 

ராமனுக்கும் ராவணனுக்கும் இடையிலான ராமாயண யுத்தம் இங்கே திசை மாறி நிற்பதை ரஞ்சித் ஒரு குறியீடாகவே படம் முழுக்க உபயோகப்படுத்தி இருக்கிறார். இந்த போர் இறுதிக்காட்சியில் உச்சக்கட்டத்தை நெருங்குகையில் ராமனின் முழக்கமும், ராவணனின் செய்கையும் ஒன்றோடொன்று முட்டிமோதி இறுதியில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான வலிகளுக்கான விடையை, அவர்களின் வாழ்வுரிமையை மீட்கும் வழியை இயக்குநர் திரையில் கடத்தியுள்ளார். நிலமே எங்கள் உரிமை என்கிற குரல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கான குரல் அல்ல. அது உலகம் முழுக்க ஒடுக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் கொடுமை. நிலம் பறிகொடுத்தல் என்பது வெறும் காலி நிலப்பரப்பை விட்டுக்கொடுப்பதல்ல. அடுத்த தலைமுறைக்கான உரிமையை, அந்த மண்ணில் வாழ்வதற்க்கான அறுகதையை விட்டுக்கொடுத்தல். வெறும் அடுக்குமாடி கட்டிடங்கள் மூலம் தீர்வதல்ல இந்த பிரச்சினை. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காதவண்ணம் நடத்திக்கொடுக்கப்படவேண்டிய விஷயம் இது. இந்த தெளிவு மக்களுக்கு பிறக்க வேண்டும். அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு இரையாக கூடாது.  இவையனைத்தையும் உரக்க சொல்லியிருக்கும் பா.ரஞ்சித்தின் காலா கண்டிப்பாக கொண்டாடப்பட வேண்டிய படமே!

- பால கணேசன்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close