'டிராஃபிக் ராமசாமி' - திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 22 Jun, 2018 01:39 pm

trafficramasamy-movie-review

சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாராகியிருக்கும் படம். போக்குவரத்தை ஒழுங்கு செய்பவர், பேனர் கிழிப்பவர், பொது நலன் வழக்குப் போடுபவர் என்கிற அளவில் மட்டுமே அறியப்பட்ட சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியை, சமூகப் விரோதிகளை எதிர்த்துப் போராடும் ஒரு ’ஒன்மேன் ஆர்மி’யாக சித்தரிக்கிறது இந்த திரைப்படம்!

’ஒன் மேன் ஆர்மி’ என்கிற, டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று நூலை, நடிகர் விஜய் சேதுபதி படிப்பதில் இருந்து தொடங்குகிறது கதை. பொதுநலன் வழக்குப் போடுவதில் தூண்டுதலாக இருந்த சிறுவயது சம்பவம், பிறகு அரசியல்வாதிகள், காவல் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் ஆகியோரை  எதிர்த்துப் போராடும் போராட்ட குணம், அவர்களின் தூண்டுதலால் சமூக விரோதிகளிடம் படும் அடி -உதை, குடும்பத்தினருக்கு வரும் அச்சுறுத்தல், மீன் பாடி வண்டியை ஒழிக்க போராடும் டிராஃபிக் ராமசாமியின் உயிருக்கு வைக்கப்படும் குறி, உடல் வலிமையை மிஞ்சிய மன வலிமை... என ஒவ்வொரு சம்பவங்களும் டிராஃபிக் ராமசாமியை ஒரு நிஜ ஹீரோவாகக் காட்டுகிறது.

சமூகப் பிரச்னைகளை முக்கிய கருவாகக் கொண்டு ஆக்ரோஷமான படங்களைக் கொடுத்த, சமூகக் கோபக்காரர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி கதாப்பாத்திரத்துக்கு மிக சரியாக பொருந்திப் போகிறார். அரசியல்வாதிகள், காவல் அதிகாரிகள், அரசு அலுவலர்கள், சமூக விரோதிகள்.. என பகை சூழந்து நிற்க, தள்ளாத வயதில் இருக்கும் இந்த பொல்லாத கிழவன் போலீஸ் லத்தியடி, ரெளடிகளின் நெத்தியடியை தாங்கி, தனியொரு மனிதராக நின்று போராடி, நிஜ ஹீரோவாக நிமிர்ந்து நிற்கிறார். டிராஃபிக் ராமசாமியின் மனைவியாக வரும் ரோகிணி,  மகள் அம்மு, மருமகன் சேத்தன் ஆகியோர் சாராசரிக் குடும்பத்து அங்கத்தினர் களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

கெட்டவனாக இருக்கும் நல்லவன் ரெளடி ஆர்.கே.சுரேஷ், நல்லவனாக இருக்கும் கெட்டவன் வக்கீல் லிவிங்ஸ்டன், மேயர் இமான் அண்ணாச்சி, நீதிபதிகள் மனோபாலா - அம்பிகா ஆகியோர் கதையை நகரத்தி செல்ல உதவுகின்றனர். சிறப்புத் தோற்றத்தில் வரும் நடிகர்களாகவே வரும் விஜய் சேதுபதி - விஜய் ஆண்டனி, அரசியல்வாதிகலாகவே வரும் சீமான் - குஷ்பு ஆகியோர் படத்துக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.   

வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகப் போராளியை கெளரவப்படுத்தும் விதமாக அவரது பெயரிலேயே அவரின் வாழ்க்கைக் கதையை எடுத்திருக்கும் இயக்குநர் விக்கியைப் பாரட்டலாம்! ஆனால், அதை ஒரு வாழ்வியல் கதையாக எடுக்காமல், ஒரு சராசரியான மசாலாப் படம் போல எடுத்திருப்பது பெரும் குறையாக இருக்கிறது. முதல் பாதியில் டிராஃபிக்  ராமசாமி, பல சமூகப் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பதைப்போல சொல்லிவிட்டு, பின் பாதியில் மீன்பாடி வண்டியை ஒழிப்பதை மட்டுமே முக்கிய வேலையாக எடுத்துக் கொண்டதைப் போல காட்டியிருப்பது கதையில் ’ஸ்பீடு பிரேக்’ விழுந்ததைப் போல ஆகிவிடுகிறது!

பாலமுரளி பாலுவின் இசையும், குகனின் கேமராவும் கதையோட்டத்துக்கு கை கொடுக்கின்றனர். ’டிராஃபிக் ராமசாமி’க்கு நம்ம ரேட்டிங் 2/5

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.