தமிழ்ப்படம் 2 அலசல்: நிறைகளும் குறைகளும்

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 02:28 pm

tamil-padam-2-analysis

வழக்கமான காதல், காமெடி ஆக்‌ஷன் படங்களை உருவாக்குவதை விட ஏற்கனவே வெளிவந்த் படங்களை கலாய்க்கும் ஸ்பூஃப் வகையான படங்களை எடுப்பது கடினமான ஒன்று. அவ்வாறு தமிழ் சினிமாவுக்கு இந்த ஜானரை முதல் முதலில் அறிமுகப்படுத்திய சி.எஸ். அமுதன் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு ஸ்பூஃப் கதையுடன் வந்துள்ளார். 'தமிழ்ப்படம் 2' படத்திற்கான பிரோமோஷன்கள் கொஞ்சம் அதிகம் தான். ஆனால் அந்த பில்டப்களுக்கெல்லாம் அவர் நியாயம் செய்திருக்கிறாரா? முதலில் நிறைகளைப் பார்ப்போம்...

* தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கலவரங்கள் நடக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் காவல்துறை சிவாவின் உதவியை நாடுகிறது.

அந்த பிரச்னைகளுக்கு காரணமானவர்களை சிவா அழித்தாரா? என்பதை இரண்டு பிளேஷ்பேக்குகள், பல பாடல்களோடு சொல்லியிருக்கிறார்கள். வெறும் ஸ்பூஃப் காட்சிகளின் கோர்வையாக இல்லாமல், ஒரு கதையை இழையோட விட்டு அதற்கு கலாய்ப்புச் சம்பவங்கள் நிகழ்த்தியது சிறப்பு.

* ஹீரோவாக நடித்திருக்கும் சிவாவை தவிர வேறு யாருமே அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என உறுதியாக கூறலாம். அவர் என்ன செய்தாலும் பார்வையாளர்கள் ரசிக்கிறார்கள். குறிப்பாக முதல் பாகத்தை போலவே இந்தப் பாகத்திலும் சிவாவின் நடன விருந்து இருக்கிறது. நாயகி ஐஸ்வர்யா மேனன், நடனம், நடிப்பு என அனைத்திலும் கச்சிதம். குறிப்பாக வேதாளம், விண்ணைத்தாண்டி வருவாயா காட்சிகளில் சிவாவுக்கு ஈடுக்கொடுத்து சீரியசாக நடித்துள்ளார். 

* படம் முழுக்க மங்காத்தா அஜித், 16 வயதினிலே ரஜினி என பல கெட்அப்களில் வரும் சதீஷ் படத்தின் வில்லன். கடந்த பாகத்தில் தான் ஏற்று நடித்த அதே கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கும் சிவாவுக்கும் இருக்கும் கெமிஸ்டிரி அமோகம். மேலும் சிவாவுடன் வரும் சேத்தன், பாட்டியாக நடித்திருப்பவர், நிழல்கள் ரவி, சிவாவின் நண்பர்களாக வருபவர்கள் என அனைவரும் கச்சிதமான ஸ்பூஃப் மெட்டீரியல்கள்.

* முதல் காட்சியில் இருந்து என்ட் கார்ட் வரை சிரித்துக்கொண்டே இருப்பதற்கு என்னவெல்லாம செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்திருக்கிறார்கள். முதல் படத்தில் தமிழ் சினிமாவோடு நிறுத்துக் கொண்டவர்கள் தற்போது அரசியல், ஹாலிவுட் சினிமா, ஆங்கில சீரியல்கள் என எதையும் விட்டுவைக்கவில்லை. வெளிவந்த படங்களோடு மட்டும் நிறுத்திவிடாமல் திரைக்கே வராத 2.0 முதல்கொண்டு கலாய்க்கப்பட்டு இருக்கிறது. சில காட்சிகளில் எந்த மாற்றமும் செய்யாமல் மீண்டும் அப்படியே எடுத்திருக்கிறார்கள். ஆனால் அதில் சிவாவை பார்க்கும் போது தியேட்டர் அதிருகிறது. 

* இந்தப் படத்தில் பின்னணி இசையும் பாடல்களும் மிக பெரிய பலம். குறிப்பாக சதீஷ் கொலை செய்யப்பட்ட பிறகு மீண்டும் உயிர்த்தெழும் காட்சியில் பின்னணி இசை தரம். அதைப்போல படம் முழுக்க பாடல்கள் வருகின்றன. அவை அனைத்துமே படத்திற்கு இடையூறு இல்லாமல் இருக்கின்றன. 

* படத்தில் வரும் சின்ன சின்ன வசனங்களிலும் யாரோ ஒருவரை கலாய்த்திருக்கிறார்கள். எதிர்பார்க்காத இடத்தில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, கூவத்தூர் சம்பவம், தர்மயுத்தம் என பல சர்பரைஸ்கள் இருக்கின்றன. படத்தின் சில காட்சிகளில் கலாய்க்கப்படுபவர்களே கெஸ்ட் ரோலில் நடித்திருப்பது செம!

சரி, இனி குறைகள்...

* தமிழ்படம் பார்ட் 1-ல் இடைவேளைக்கு பிறகு திரைகதை திக்கு தெரியாமல் செல்லும். ஆனால், இந்தப் படத்தில் அந்தக் குறையை சரி செய்திருக்கிறார்கள். இருந்தும் சில இடங்களில் 'எப்போ முடிப்பாங்க' என்ற உணர்வை வர வைக்கிறது. 

* படங்களையும் காட்சிகளையும் கலாய்த்தவர்கள் மிஷ்கினின் கருப்பு கண்ணாடியையும் கௌதம் வாசுதேவ் மேனனின் வாய்ஸ் ஓவர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. இப்படி கிடைத்த இடத்தில் எல்லாம் எதையாவது இணைக்கலாம் என நினைத்ததே படத்திற்கு பல வீனமாகவும் மாறி உள்ளது. 

* சில காட்சிகள் நம் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆகாத ஹாலிவுட் படங்களின் ஸ்ஃபூப் என்பதால் சிலருக்கு புரியாமல் போகவும் வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக, படத்தின் நிறைகளுக்கு முன் குறைகள் பெரிதாக தெரியவில்லை. குறிப்பிட்ட இடைவேளையில் தமிழ்ப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவருது தமிழ் சினிமாவும் ரசிகர்களுக்கும் நல்லது. அதற்கேற்றார் போல் இன்னும் இருக்கு.. என்று லீட் கொடுத்தப்படி படத்தை முடித்திருக்கின்றனர். பாகுபலியை கட்டப்பா போட்டுத் தள்ளியதற்கு இணையான சஸ்பென்ஸை வைத்திருப்பது நிறைவு.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.