’தமிழ்படம் 2’ - திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 12 Jul, 2018 07:16 pm

tamilpadam-2-movie-review

கதைக்காக ரூம் போட்டு யோசிக்காமல், ’சீன்’ பிடிக்க சொல்லி அசிஸ்டெண்ட் டைரக்டர்களை வாட்டி வதைக்காமல், ஏற்கனவே ’ஹிட்’ அடித்த படங்களை ’கலாய்த்து’ முழுப்படத்தையும் எடுப்பது என்பது நோகாமல் நொங்கு சாப்பிடுவதைப் போல தெரிந்தாலும், அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை! தமிழில் தறுமாறாக ஓடிய சில படங்களிலிருந்து சிலாகித்துப் பேசப்பட்ட ரொமான்ஸ், ஆக்‌ஷன், சென்டிமென்ட் போன்ற சீன்களை ஓட்டோ ஓட்டென ஓட்டி, கலாய்த்து கழுவி ஊத்தியதாலேயே ஓடிய ’தமிழ் படம்’ டீம், இந்த முறை சினிமாவோடு சேர்த்து, சில முக்கியமான அரசியல் நிகழ்வுகளையும் வைத்து ’அட்ராசிட்டி’ செய்து ’தமிழ் படம் 2’ திரைப் படத்தை உருவாக்கி யிருக்கிறது.

காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் பிரபல ’டான்’ சதீஷ் கொட்டத்தை அடக்குவதற்காக வருகிறார் துணை கமிஷனரான சிவா! இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் கதையின் ஒன் லைன் ஸ்டோரி! கதையைப் பத்தியெல்லாம் கவலைப்படாமல், மரண கலாயை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு தியேட்டருக்குள் வரும் ரசிகர்களை, கூடிய வரை ஏமாற்றாமல் சிரிக்க வைத்து அனுப்புகிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன்! 

தென் தமிழகத்தின் உள்ள ஒரு கிராமத்தில் ஜாதிக் கலவரம் பத்தி எரிய, அதை கட்டுப்படுத்த வரும் துணை கமிஷனர் சிவா, இரு தரப்பினருக்கும் விடிய விடிய ’கிளாஸ்’ எடுத்து, அவர்களை ’டயர்ட்’ ஆக்கி, சாமாதனமாக போக வைக்கும் அந்த அறிமுக காட்சியில் ஆரம்பித்து, ரஜினியின் ’16 வயதினிலே’, ’2.0’ மற்றும் ’கபாலி’, கமல் ஹாசனின் ’விஸ்வரூபம்’, ’தேவர் மகன்’, விஜய்யின் ’பைரவா’, அஜித்தின் ’விவேகம்’, விக்ரமின் ’சாமி’, விஷாலின் ’துப்பறிவாளன்’, சிம்புவின் ’விண்ணை தாண்டி வருவாயா’, தனுஷின் ’பொல்லதவன்’, ’ஆடுகளம்’, ’விஐபி’ என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரின் லேட்டஸ்ட் படங்களையும் கிழி கிழியென கிழித்து தொங்கப் போட்டு, டாப் கியர் போட்டு எகிறியடித்து; கட்டப்பா, பாகுபலியை முதுகில் குத்தி சாய்க்கு காட்சிக்கு சமமான ’பில்ட் அப்’ கிளைமாக்ஸ் கொடுத்து..., ஒவ்வொரு காட்சியிலும் கலாய், நக்கல், நையாண்டி, கிண்டல், கேலி என படம் முழுக்க மரண கலாய் தொக்கி நிற்கிறது!          

சாமாதி முன் அமர்ந்து சிவா தியானம் செய்வது, அவரின் பாட்டி கலைராணி அதே சமாதியில் ஆவேசமாக கையை ஓங்கி அடித்து சபதம் செய்வது, பண மதிப்பு இழப்பால் ’டான்’ சதீஷ், கை செலவுக்காக ஏ.டி.எம் வாசல் ’கியூ’வில் நிற்பது.. என அரசியல்வாதிகளையும் விட்டு வைக்காமல் வெறுப்பேத்தியிருக்கிறார்கள்!

பல ’கெட் அப்’பில் வந்து, எதற்கும் அசராமல் எகிறி அடித்திருக்கிறார் படத்தின் நாயகன் சிவா. இதுபோன்ற ’ஸ்ஃபூப்’ ஸ்டைல் கதைகளிலேயே வந்து ஒப்பேற்றி வரும் சிவா, ‘கடைசியில என்னையும் நடிக்க வச்சுட்டீங்களேடா..!’ என ’தேவர் மகன்’ ஸ்டைலில்  புலம்புவது, அவரையே கலாய்ப்பது போல இருக்கிறது! அவரின் காதலியாக வரும் ஐஸ்வர்யா மேனன் மட்டும் சளைத்தவரா என்னா? ரம்யா, காயத்ரி, கலாசி என மூன்று  பிறவிகள் எடுத்து வந்து அசத்துகிறார்! 

’விஸ்வரூபம்’ கமல், பழைய ’காக்கி சட்டை’  சத்யராஜ், ’2.0’ பட வில்லன் அக்‌ஷய்குமார் போன்றவர்களின் ’கெட் அப்’பில், ‘டான்’ கேரக்டரில் மிரட்டல் வில்லனாக வரும் சதீஷைப் பார்க்கும் போது பயம் வருவதற்குப் பதிலாக, சிரிப்பு தான் வருகிறது! மனோபாலா, ஆர்.சுந்தரராஜன், சந்தான பாரதி ஆகியோரை கல்லூரி மாணவர்களாக காட்டுவதெல்லாம்  ரொம்ப ஓவர்!

 எல்லாம் சரி தான்! ஆனால், முதல் பாகம் போலவே; இரண்டாவது பாகத்திலும் ’பகடி’ பாடுவதை மட்டுமே குறிக்கோலாக வைத்திருப்பதால், ஒரு கட்டத்தில் ’கலாய்’ கூட கடுப்பாகிறது! இடைவேளை வரை கலகலப்பாகப் போகும் படம்,  ’செகண்ட் ஹாஃப்’பில், இண்டர் போல் அதிகாரி-போதி தருமர் போன்ற கிளைக் கதைகள் வால் போல நீண்டு, ’எப்பதாண்டா முடிபீங்க?’ என நெளிய வைக்கிறது!

 ’தமிழ் படம் 2’ ரேட்டிங் 3/5

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.