கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்

  shriram   | Last Modified : 17 Aug, 2018 03:34 pm

kolamavu-kokila-movie-review

நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் 'கோலமாவு கோகிலா'.

வேலைக்காரன் படத்திற்கு பிறகு நயன்தாரா மீண்டும் சோலோவாக கலக்கியுள்ள திரைப்படம் இது. நயன்தாராவை ஒன்சைடாக லவ் பண்ணும் யோகி பாபுவின் 'கல்யாண வயசு' பாடல் செம ஹிட்டடித்தது. எனவே படத்தை காண காலை 6 மணிக்கெல்லாம் தியேட்டர் முன் இளைஞர்கள் குவிந்திருந்தனர். 

முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், 'ஸ்மைல் சேட்டை' அன்புதாசன், மொட்டை ராஜேந்திரன், வி.ஜே ஜாக்குலின், விக்ரம் வேதா வில்லன் ஹரிஷ் பரேடி என படத்தில் பல கதாபாத்திரங்கள்.

கஷ்டப்படும் குடும்பத்தில் மூத்த பெண்ணாக தோன்றுகிறார் நயன்தாரா. தனது தாய்க்கு புற்றுநோய் வந்தவுடன், அவரை காப்பாற்ற வேறு வழி தெரியாமல், போதைப்பொருள் கடத்தும் கும்பலிடம் சிக்குகிறார். பார்க்க அப்பாவி போல இருக்கும் நயன் மேல் யாருக்கும் சந்தேகம் வராது என்பதால் அவரை அந்த கும்பலும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த கும்பலை கண்டுபிடிக்க வலைவீசும் போலீசாக சரவணன், நயன்தாராவை குறிவைக்கும் வில்லன்கள் இவர்களை எல்லாம் எப்படி அப்பாவியான நயன்தாரா சமாளிக்கிறார் என்பது தான் மீதி கதை. இதற்கு நடுவே நயன்தாராவை சுற்றி வட்டமடிக்கும் யோகி பாபுவின் காமெடி.

மிகவும் சாதாரணமான பெண்ணாக நயன்தாரா வந்து போகிறார். நடை, உடை, பாவனைகளில் எதையும் கண்டு ஒதுங்கி போகும் ஒரு மிடில் க்ளாஸ் பெண்ணை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார். ஆஹா - ஓஹோ என  சொல்லும் அளவுக்கு இல்லாவிட்டாலும், சிறப்பான ஒரு பெர்பார்மன்ஸ்.

சரண்யா வழக்கம் போல சோக சீனிலும் சரி, காமெடி சீனிலும் தனது எக்ஸ்பீரியன்ஸை காட்டியிருக்கிறார். படத்தில் எல்லாருமே அப்பப்போ காமெடி செய்திருந்தாலும், யோகி பாபுவும், அன்புதாசனும் சேரும் காட்சிகள் சிரிப்பு மழை. ஆரம்பம் முதல் முடிவு வரை, படம் கலகலப்பாக செல்கிறது. போதைப் பொருள், கேங்ஸ்டர்களை மையப்படுத்திய கதை தான், ஆனால் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் அளவுக்கு சிறப்பாக செய்துள்ளார் இயக்குநர் நெல்சன். 

சிவகுமார் விஜயனின் கேமரா படத்திற்கு மிகப்பெரிய பலம். அனிருத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு மெருகேற்றியுள்ளன. 

படத்தின் மைனஸ் பாயிண்ட்ஸ்:

க்ளைமேக்ஸ் காட்சிகள் கொஞ்சம் இழுத்தடிக்கப்படுகிறது. அதுவரை வேகமாக செல்லும் படம், அந்த இடத்தில் கொஞ்சம் பிரேக் அடிக்கிறது. திரைக்கதையின் பலம் படத்தை  தூக்கி செல்கிறது. வசனங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். 

மொத்தத்தில், 'கோலமாவு கோகிலா' கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு சூப்பர் என்டர்டெய்னர். 

நம்ம வெர்டிக்ட்: 3.5/5

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.