'தி நன்' - ஹாலிவுட் திரை விமர்சனம்

  shriram   | Last Modified : 07 Sep, 2018 03:52 pm

the-nun-movie-review-in-tamil

'தி கான்ஜுரிங்', 'ஆனபெல்' படங்களின் வரிசையில் லேட்டஸ்டாக நம்மை அதிர வைக்க வந்திருக்கும் படம் தான் 'தி நன்'. 

கான்ஜுரிங் படங்களை எழுதி, இயக்கிய ஜேம்ஸ் வான், இந்த படத்திற்கு கதை எழுதி, தயாரித்துள்ளார். வார்னர் பிரதர்ஸ் வெளியிட்டிருக்கும் இந்த படத்தை, கோரின் ஹார்டி இயக்கியுள்ளார். ஆபெல் கோர்சினியோஸ்கி பின்னணி இசை அமைத்துள்ளார்.

ரொம்ப சிரமப்படுத்தாமல், மூன்றே மூன்று கேரக்டர்களை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. டெமின் பிஷிர், டைஸா ஃபார்மிகா மற்றும் ஜோனாஸ் ப்ளொக்கே முக்கியமான மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிரட்டலான 'நன்' பேயாக, பானி ஆரன்ஸ் நடித்துள்ளார். 

கான்ஜுரிங் வரிசையில் வந்த ஒவ்வொரு படமும் வசூலில் மெகா சாதனைகளை புரிந்து பிரபலமானதை தொடர்ந்து, அதே பார்முலாவை இந்த படத்திலும் பின்பற்றியுள்ளார்கள். மர்மமான முடிச்சுகள் நிறைந்த கதை, நடுங்க வைக்கும் திகில் காட்சிகள், நல்ல நடிப்பு என படம் எல்லா இடங்களிலும் ஜொலிக்கிறது. 

1952ம் ஆண்டில், ரொமேனியாவில் நடக்கும் கதைக்களம். அங்குள்ள ஒரு பெரிய சர்ச்சில் தங்கியுள்ள கன்னியாஸ்திரி மர்மமான முறையில் தற்கொலை செய்துகொள்கிறார். அது குறித்து விசாரிக்க, வாட்டிக்கன் சிட்டியில் இருந்து ஒரு பாதிரியார் அனுப்பப்படுகிறார். அவருடன் இளம் கன்னியாஸ்திரி ஒருவரும், அந்த ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவரும் செல்கின்றனர். கன்னியாஸ்திரிகள் மட்டுமே வாழும் அந்த சர்ச்சில், பல மர்மங்கள் உள்ளதால், ஊர் மக்கள் அங்கு செல்ல பயப்படுகிறார்கள். சர்ச்சுக்குள் செல்லும் இவர்களுக்கு என்ன ஆகிறது? அங்குள்ள மர்மம் என்ன? வலாக் பேய் உருவானது எப்படி? ஆகியவற்றை மிகவும் ஸ்வாரஸ்யமாக படமாக்கியுள்ளனர். 

ஆரம்பம் முதல் படம் மிகவும் மர்மமாகவும், சுவாரஸ்யமாகவும் செல்கிறது. படம் முழுக்க ஆங்கங்கே ஜம்ப்ஸ்கேர் எனப்படும் திடுக் காட்சிகளும் தூவப்பட்டுள்ளன. அதனால், தொய்வில்லாமல் கதை நகர்கிறது. முதல் பாதியை போலவே இரண்டாவது பாதியிலும், மர்மம் தொடர்கிறது. அனைத்து முடிச்சுகளையும் கனெக்ட் செய்யும் விதமாக, க்ளைமேக்ஸும் அமைந்துள்ளது. காட்சிகளுக்கு ஏற்றவாறு பின்னணி இசை தெறிக்க விடுகிறது. 

ஹாரர் படங்களுக்கு உண்டான எல்லா தகுதிகளையும் படம் டிக் செய்தாலும், கான்ஜுரிங் படங்களில் இருந்து சத்து இதில் இல்லை. நடுங்கவைக்கும் அந்த பேயின் பின்னணி கதையையும் எப்படி அது உருவானது என்பதை எதிர்பார்த்து தான் படம் பார்க்க சென்றோம். ஆனால், அதற்கு உண்டான விளக்கம் இந்த படத்தில் கிடைக்கவில்லை. நாம் பலமுறை பார்த்துவிட்ட திகில் டெக்னிக்களை சில காட்சிகளில் பயன்படுத்தியுள்ளது கொஞ்சம் டல்லடிக்கிறது. பேயின் கதைக்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் படம் வேற லெவலாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

ஆனால், நிச்சயம் எல்லோரும் பார்த்து ரசிக்கும்படியான ஒரு ஹாரர் படம். ஹாரர் ரசிகர்கள் நிச்சயம் மிஸ் செய்யக் கூடாது.

நம்ம ரேட்டிங் 3/5

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.