சீமராஜா - திரை விமர்சனம்

  shriram   | Last Modified : 13 Sep, 2018 04:33 pm

seema-raja-movie-review

சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி, லால் உள்ளிட்ட பலர் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் சீமராஜா. அதிகாலை 5 மணி முதல் ரசிகர்கள் பட்டாளம் சூழ திருவிழா காட்சியளித்தன திரையரங்குகள் . ஆனால், கே.டி.எம் பெறும் பிரச்னையின் காரணமாக காலை 5 மணி முதல் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். பிரச்னை சரி செய்யப்பட்டு 8 மணிக்கு மேல் படம் திரையிடப்பட்டது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களை வழங்கிய சிவகார்த்திகேயன், இயக்குனர் பொன்ராம், சூரி காம்போ மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இரண்டு கிராமங்களுக்கு இடையில் நடக்கும் நில தகராறுகளையும், விவசாய பிரச்சனைகளையும் வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. சிங்கம்பட்டி என்ற ஊரின் ஜமீன் வாரிசாக தோன்றுகிறார் சிவகார்த்திகேயன். சீமராஜாவாக வலம் வரும் அவர், பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுகிறார். எதிரி ஊரான புளியம்பட்டியை சேர்ந்த சமந்தாவை காதலிக்கிறார். அதே ஊரை சேர்ந்த லால், சிம்ரன் ஜோடி ஊர் மக்கள் மத்தியில் பிரச்சனையை கிளப்பி விட்டு குளிர் காய்கிறாரர்கள். சிவகார்த்திகேயன், தனது ஜமீன் வரலாற்றை தெரிந்துகொண்டு, பொறுப்பு வந்து, ஊர் பிரச்னையை எப்படிபோக்குகிறார், சமந்தாவை கரம் பிடிக்கிறாரா?, என்பது தான் மீதி கதை. இதற்கு இடையே, 14ம் நூறாண்டில் நடப்பது போன்ற ஒரு 'குட்டி' ராஜா காலத்து பிளாஷ்பேக்.

படத்தில் சிவகார்த்திகேயன் ஆக்டிங் சூப்பர். ஆரம்பம் முதல் தனது தோள்களில் படத்தை சுமந்து செல்கிறார். சீமராஜாவாக சூரியுடன் சேர்ந்து அவர் செய்யும் கலாட்டாவில் தியேட்டர் அதிருகிறது. பி.டி டீச்சராக வரும் சமந்தா, சிலம்பம் கற்றுக்கொண்டு அசத்துகிறார். தனது ரோலை கச்சிதமாக முடித்துக் கொடுத்திருக்கிறார். வில்லி ரோலில் சிம்ரன் மாஸ். ஒரு சில காட்சிகள் மட்டும் கொடுக்கப்பட்டாலும், அதில் தனது முத்திரையை பதித்திருக்கிறார். இதுபோன்ற சில வேடங்களில் இனிமேல் அவரை அடிக்கடி பார்க்கலாம். நெப்போலியன் மற்றும் லால், கச்சிதமாக பாத்திரத்துடன் பொருந்தி நடித்துள்ளார்கள்.

கலகலவென பல போர்ஷன்கள் இருந்தாலும், படம் ரொம்ப நீளமாக தெரிகிறது. முதல் பாதியில் பல காமெடிகள் 'அரைச்ச மாவையே அரைச்சது' போன்ற பீலிங்கை தருகிறது. சிவகார்த்திகேயன், சமந்தாவின் ரொமான்ஸ் சிறப்பாக அமைந்துள்ளது. இமானின் இசை இதம். பழங்காலம் முதல் இந்த காலம் வரை, பாலசுப்ரமணியமின் கேமரா டாப். 

பல விஷயங்களில் டிக் செய்தாலும், படம் ரொம்ப நீளமாக இழுத்தடிக்கப்பட்டுள்ளது பெரிய மைனஸ். முதல் பாதி கலகலவென சென்றாலும், பல காமெடி சீன்கள் தேவையில்லாமல் நீளமாக இழுக்கப்பட்ட ஒரு ஃபீலிங். இரண்டாவது பாதியில் கொஞ்சம் சென்டிமென்ட் எல்லாம் கலந்து போவதால், இன்னும் மெதுவாக செல்கிறது. க்ளைமேக்ஸ் வரை பொறுமையாக நகரும் கதைக்கு, வெறும் ஐந்தே நிமிட கிளைமேக்ஸை வைத்து முடிச்சு போட்டுள்ளார் இயக்குனர். ரொம்ப அவசரப்பட்டு க்ளைமேக்ஸ் போர்ஷனை அரைகுறையாக முடித்துள்ளது, பெரிய தொய்வு. 'பாகுபலி' போன்ற ராஜா காலத்து கெட்டப்பில் வரும் சிவகார்த்திகேயனின் நடிப்பு சூப்பர். ஆனால், படத்தின் கடைசி கட்டத்திற்கு செல்லும்போது, அவ்வளவு பெரிய பிளாஷ்பேக் வைத்தது, வேகத்தை மேலும் குறைத்து நமது பொறுமையை சோதிக்கிறது. படத்தில் சிவா சொல்வது போல, புது கெட்டப்புக்காகவே அந்த பிளாஷ்பேக் வைத்தது போல் உள்ளது. 

மொத்தத்தில், சிவகார்த்திகேயனின் சேஷ்டைகள் ரசிக்கும் படி இருந்தாலும், இதற்கு முன் அவர் ஏற்படுத்திய தாக்கம் மிஸ்ஸிங். திரைக்கதை கொஞ்சம் தொய்வடையாமல் இருந்தால், இந்த படம் நிச்சயம் வேற லெவலாக இருந்திருக்கும். இருந்தாலும், ராஜா காலத்து பிளேஷ்பேக்கிற்காக சிவாவும் படக்குழுவும் மெனக்கெட்டிருப்பதை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

படத்திற்கு நம்ம ரேட்டிங் - 2.5

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.