Newstm திரை விமர்சனம் - பரியேறும் பெருமாள்

  shriram   | Last Modified : 28 Sep, 2018 10:11 am

pariyerum-perumal-movie-review

பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் தான் 'பரியேறும் பெருமாள்'. கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, லிங்கேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்; ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் துவங்கிய இந்த படம், சமீபத்தில் நடந்த ட்ரெய்லர், பாடல் ரிலீஸ் போன்றவற்றை தொடர்ந்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க துவங்கியது. படத்தின் பிரிவ்யூ ஷோவை பார்த்துவிட்டு, பல இயக்குனர்களும் நட்சத்திரங்களும் இயக்குனரை பாராட்டு மழையில் நனைய வைத்து விட்டனர். 

ராமின் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் முதல் படம் இது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சட்டக் கல்லூரியையும், கிராமங்களையும் மையமாக கொண்ட கதைக்களம். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு மாணவன், சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். அங்கு உள்ள ஒரு உயர் சமூக மாணவியுடன் ஏற்படும் நட்பால், இவர் சந்திக்கும் பிரச்னைகளும், சவால்களும் என்னவென்பது தான் படத்தின் கதை. 

கிராமங்களில் இன்று கூட உள்ள ஏற்றத்தாழ்வுகள், அதனால், பள்ளி, கல்லூரி என மாணவ மாணவிகள் தினம் சந்திக்கும் கஷ்டங்களையும் அவமானங்களையும் நம் கண் முன் நிறுத்தியுள்ளார் இயக்குனர். கல்லூரி கலாட்டா, காமெடி என துவங்கும் படம், கொஞ்சம் கொஞ்சமாக சீரியஸாக மாறுகிறது.

படத்தின் கதாநாயகன் கதிரின் சினிமா வாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. 'மதயானைக் கூட்டம்' படத்தில் நடிக்கும் போது, "படத்திற்கு முன் எனக்கு நடிப்பு பற்றி ஒன்றுமே தெரியாது" என சொன்னவரா இன்று இப்படி நடித்துள்ளார் என நம்மால் நம்பவே முடியவில்லை. ஒவ்வொரு காட்சிக்கும் தேவைப்படும் எமோஷன்களை மிக சரியாக திரைக்கு கொண்டு வந்துள்ளார். வெள்ளந்தியான மாணவராக தோன்றுவதாகட்டும், தனக்கு நடக்கும் அநியாயத்தை கண்டு ஒதுங்கிப் போக முயற்சிக்கும் காட்சிகளாகட்டும், வெகுண்டெழும் காட்சிகளாகட்டும், 100 மதிப்பெண்களை பெற்றுள்ளார் கதிர். 

ரொம்பவே அப்பாவியான சாந்தமான கேரக்டரில் தோன்றியுள்ளார் ஆனந்தி. தனக்கு கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்துள்ளார். ஆனால், படத்தில் மற்ற கதாபாத்திரங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது,  ஆனந்தியின் கதாபாத்திரத்திற்கு போதிய பலம் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.  கதிரின் நண்பராக தோன்றும் யோகிபாபு, வேற லெவல் பெர்பார்மன்ஸ் கொடுத்துள்ளார். கோலமாவு கோகிலா படத்தில் அடுத்த கட்டத்திற்கு சென்ற இவர், இந்த படத்தில் ஒரு நல்ல குணச்சித்திர நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். வில்லனாக நடித்துள்ள லிங்கேஷ், படம் பார்ப்பவர்கள் அனைவரும் தன்னை வெறுக்கும் அளவுக்கு ஒரு மோசமான வில்லனாக தோன்றியிருக்கிறார். ஆனந்தியின் தந்தையாக தோன்றும் மாரிமுத்து, வழக்கம் போல சிறப்பான பெர்பார்மென்ஸை கொடுத்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், படத்தில் சில சிறிய கதாபாத்திரங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. கதிரின் தந்தையாக தோன்றுபவர், வில்லங்கமான முதியவர் வேடத்தில் தோன்றுபவர், என எல்லோரின் நடிப்பிலும் அவ்வளவு யதார்த்தம். இவர்கள் தோன்றும் காட்சியில் படத்திற்கு வேறு ஒரு கோணம் கிடைக்கிறது. 

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை தூள். படத்தின் பாடல்களும், அதன் வரிகளும் நம்மை ஈர்க்கின்றன. முக்கியமாக நான் யார் என்ற பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் மாஸ்டர்கிளாஸ். நேரடியாகவும், பல இடங்களில் குறியீடுகள் மூலமும் சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை ரொம்பவே உணர்வுப் பூர்வமாக சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ். 

கிம்பல் தொழில்நுட்ப கேமரா மூலம் முதல்முறையாக எடுக்கப்பட்ட படம் இதுதானாம். ஒளிப்பதிவாளர் கையாண்டுள்ள தொழில்நுட்பங்களும், அது வெளியே வந்திருக்கும் விதமும் பார்க்கும்போது, நிச்சயம் பல விருதுகளை பெறுவார் என சொல்ல முடியும். கிராம பகுதிகளை இவ்வளவு அழகாகவும், நேர்த்தியாகவும் காட்ட முடியுமா என ஆச்சர்யமாக இருக்கிறது. 

படம் முழுக்க சோகமாகவும், சமூக கருத்துக்களாகவும் இருக்குமோ என நினைத்து தான் நாமும் சென்றோம். ஆனால், கருத்துக்களை வசனங்கள் மூலம் சொல்லாமல், காட்சிகள் மூலம் சொன்னதிலும், வன்முறையை மட்டும் போதிக்கலாமல் நம்பிக்கை தருமாறு ஒரு சூப்பர் க்ளைமேக்ஸ் வைத்ததற்கும், இயக்குனருக்கு ஹேட்ஸ் ஆஃப்.

படத்திற்கு நம்ம ரேட்டிங்: 3.5/5

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.