96 - திரை விமர்சனம்

  shriram   | Last Modified : 04 Oct, 2018 09:00 pm

96-movie-review

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில், ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் 96.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார், இந்த முறை விஜய் சேதுபதியுடன் சேர்ந்து இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். மகேந்திர ஜெயராஜு மற்றும் சண்முகசுந்தரம் கேமரா. கோவிந்த் மேனன் இசை. மெட்ராஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில், நந்தகோபால் இந்த படத்தை தயாரித்துள்ளார். 

பள்ளிப்பருவத்து காதலை மையமாக கொண்ட படங்களுக்கு கோலிவுட்டில் வழக்கமாகவே மெகா வரவேற்பு கிடைக்கும். விஜய் சேதுபதி, த்ரிஷா என பெரிய ஸ்டார்கள் நடிப்பில், பள்ளி காதல், ரீயூனியன் போன்ற சுவையான விஷயங்களை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரேம் குமார்.

பள்ளியில் முறிந்த காதலை, 20 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் சந்திக்கும் போது, என்ன நடக்கும்? என்னென்ன நடக்க போகிறது? என பல கேள்விகளுடன் நகர்கிறது கதை. முதல் பாதியில் பள்ளி காதல், நண்பர்களுடன் ரீயூனியன் என கொஞ்சம் கலகலப்பாக செல்கிறது கதை. இரண்டாவது பாதியில், வெறும் விஜய் சேதுபதி, த்ரிஷாவை மட்டுமே வைத்து கதை நகர்கிறது. ஆனால், அதை ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படாதவாறு காட்டியிருப்பது, திரைக்கதையின் சிறப்பு. சமூக கட்டமைப்புகள் பிரித்து வைத்திருக்கும் தங்களது காதலை, இருவரும் எவ்வளவு மென்மையாக, உணர்வுபூர்வமாக காட்டுகிறார்கள் என்பது படத்தின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா, டாப் கிளாஸ் பெர்பார்மன்ஸை கொடுத்துள்ளார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் காட்சிகளில், காதல் நிறைந்த கண்கள், முக பாவனைகள் கொடுத்து, காட்சிகளை அழகுபடுத்தியுள்ளார்கள். சின்ன வயது விஜய் சேதுபதி, த்ரிஷாவாக நடித்துள்ளவர்களும் அசத்தாலாக நடித்து, காட்சிகளை அலங்கரித்துள்ளார்கள். 

படத்தின் மற்றொரு பெரிய பலம் கேமரா. மகேந்திர ஜெயராஜு மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோரது கேமரா, படம் முழுக்க கண்களுக்கு குளிர்ச்சியான ஒரு அனுபவத்தை தருகிறது. 

கோவிந்த் மேனனின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது. கதையுடன் நகரும் பாடல்களும், மென்மையான இசைக்கும் தனி அப்ளாஸ்.

2.40 மணி நேரம் செல்லும் படம், ஒரு சில இடங்களில் கொஞ்சம் நீளமாக தோன்றுகிறது. ஆனால், எந்த இடத்திலும் தொய்வடையாமல் சுவாரஸ்யமான காட்சிகளுடன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால், பெரிய குறையாக தெரியவில்லை. 

மிக மிக யதார்த்தமான காட்சிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதால், படம் பார்க்கும் அனைவர்க்கும் தங்கள் கடந்த கால நினைவுகளை இந்த படம் நிச்சயம் கொண்டு வரும். குடும்பத்துடன் கண்டுகளிக்க தகுதியான ஒரு கண்ணியமான ரொமான்ஸ் திரைப்படம் 96.

நம்ம ரேட்டிங் - 3/5

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.