வடசென்னை - திரை விமர்சனம்

  shriram   | Last Modified : 17 Oct, 2018 02:04 pm
vada-chennai-movie-review

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் வடசென்னை.

பொல்லாதவன், மெட்ராஸ் வரிசையில் வடசென்னையை மையமாக கொண்டு உருவாக்கப்படும் மற்றொரு கேங்ஸ்டர் படம் இது. பொல்லாதவன் திரைப்படத்தில், சென்னையின் அண்டர்வேர்ல்டை ரொம்பவே யதார்த்தமான காட்சிகள் மற்றும் வசனங்களுடன் காட்டியிருந்த வெற்றிமாறன், ஒரு முழு நீள கேங்ஸ்டர் திரைப்படத்தை வழங்கியுள்ளார். 

சமுத்திரக்கனி, கிஷோர், அமீர், பவன், 'பாக்ஸர்' சாய் தீனா என படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் தேர்வு சிறப்பாக அமைந்துள்ளதால், ஒவ்வொரு காட்சியையும் நம்மால் ரசிக்க முடிகிறது. 

இயக்குனர் நமக்கு வார்னிங் கொடுத்தது போல, கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை. வடசென்னையின் ஒரு பகுதியை கைப்பற்ற முயற்சி செய்யும் இரண்டு கேங்களுக்கு இடையே நடக்கும் போர். அதற்கு இடையே, கத்துக்குட்டி கேரம்போர்டு வீரராக நுழைந்து கேங்ஸ்டராக மாறுகிறார் தனுஷ். 

படத்தின் ஒன்லைன் ரொம்பவே நமக்கு பரீட்சயமானது தான் என்றாலும், திரைக்கதையை மிகவும் விறுவிறுப்பாக அமைத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். புத்தகத்தில் வரும் பாகங்கள் போல, திரைக்கதையை பிரித்துள்ளதால், கடந்த காலமும் நிகழ்காலமும் மாறி மாறி காட்டப்படுகிறது. இதை பயன்படுத்தி, கதையின் முக்கிய முடிச்சுகள் க்ளைமேக்ஸ் காட்சி வரை நீடிக்குமாறு, திரைக்கதையை தைத்துள்ளார் வெற்றிமாறன். 

முதல் பாதி, இரண்டாவது பாதி என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. படம் முழுக்க முழுக்க விறுவிறுப்பாக செல்கிறது. முதல் பாதி, பெரும்பாலும் சிறையில் நடப்பதால், அங்குள்ள பாலிட்டிக்ஸ், ஊழல், ரவுடியிஸம் என பல விஷயங்களை புகுத்தி சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளனர். ஆக்ஷன் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் என அனைத்துமே மிகவும் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த லெவல் யதார்த்தத்தை கொடுக்க, அங்கங்கே பல கெட்ட வார்த்தைகளையும் சேர்த்துள்ளனர்.

சரி கேங்ஸ்டர் கதைக்கு வருவோம்...

ஹீரோவை மட்டுமே நம்பாமல், நல்ல குணச்சித்திர நடிகர்களான சமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோரை மையமாக கொண்டு பெரும்பாலான படம் நகர்கிறது. அதை பயன்படுத்திக் கொண்டு, தங்களது உச்சகட்ட நடிப்பை இருவரும் வெளிப்படுத்தியுள்ளனர். முதல் பாதியில், இவர்களுக்கு மத்தியில் தனுஷ் சைடு ஆக்டராக மட்டுமே வலம் வருகிறார். அமீர், ஆண்ட்ரியா,டேனியல் பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், பவன் போன்றோரும் ஒவ்வொரு காட்சியிலும் தங்களது முத்திரையை பதித்துள்ளனர். விடலை பையனாக இருந்து, மிரட்டும் ரவுடியாக மாறும் தனுஷின் கேரக்டர் டெவலப்மென்ட் படத்திற்கு மிகப்பெரிய பலம். வழக்கம் போல, சிறப்பான ஆக்டிங்கை தனுஷ் கொடுத்துள்ளார்.

பின்னணி இசையில், சந்தோஷ் நாராயணன் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ற எமோஷன்களை தனது இசை மூலம் கொண்டு வந்துள்ளார். விசில் பறக்கும் காட்சிகளாகட்டும், சோக காட்சிகளாகட்டும், வடசென்னையின் இசை மாஸ்டர் தான் என மீண்டும் நிரூபித்துள்ளார். வேல்ராஜின் கேமரா வேலைகள் டாப் கிளாஸ். மத்திய சிறையின் செட்,  

படம் பார்த்து முடிக்கும்போது, இவர்கள் இன்னும் மோதிக்கொண்டே இருக்க மாட்டார்களா, என்ற பீலிங் நமக்கு தோன்றுகிறது. அதற்கேற்றாற் போல, இரண்டாவது பாகத்திற்கு கொக்கி போட்டு படத்தை முடிக்கிறார் வெற்றிமாறன். 

சிறந்த கேங்ஸ்டர் படமாக மட்டுமல்லாமல்,  தமிழ் சினிமாவின் டாப் படங்களுள் ஒன்றாக வடசென்னை இனி வரும் காலங்களில் பார்க்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நம்ம ரேட்டிங் - 4/5

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close