சண்டக்கோழி 2 - திரை விமர்சனம்

  shriram   | Last Modified : 18 Oct, 2018 05:18 pm

sandakozhi-2-movie-review

விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலக்ஷ்மி உள்ளிட்டோர் நடிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'சண்டக்கோழி 2'.

13 வருடங்களுக்கு முன் விஷாலை ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டிய படம் சண்டக்கோழி. கமர்ஷியல் மாஸ் ஆக்ஷன் படங்களை எடுப்பதில் தான் வல்லவர் என லிங்குசாமி நிரூபித்த படமும் அது தான். தற்போது இத்தனை வருடங்களுக்கு பிறகு, வெற்றி பார்முலாவாக மாறியுள்ள பார்ட் 2 கலாச்சாரத்தை பயன்படுத்தி, சண்டைக்கோழியை தூசுதட்டி எடுத்திருக்கிறார்கள். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா சண்டக்கோழி 2?... பார்க்கலாம்...

இதுவும் முழுநீள ஆக்ஷன் படம்தான். மதுரைக்கு அருகே உள்ள கிராமங்களில் நடக்கும் கலவரங்களை மையமாக கொண்ட படம். தனது கணவரின் மரணத்தை பழிவாங்க, ஒரு வம்சத்தையே அழிக்க துடிக்கிறார் வித்தியாசமான வில்லியான வரலக்ஷ்மி. அவரது தரப்பினர் நடத்தும் அதிரடி தாக்குதல்களில் இருந்து அந்த வம்சத்தின் கடைசி வாரிசை காப்பாற்ற துடிக்கிறது விஷாலின் குடும்பம். இதற்கு இடையே நீண்ட காலத்திற்கு பிறகு நடக்கும் ஊர் திருவிழா வேறு. எல்லா சவால்களையும் தாண்டி, ஊர் திருவிழா நல்லபடியாக முடிந்ததா? வில்லன்களிடம் இருந்து அந்த வாரிசை காப்பாற்றினார்களா என்பது தான் படத்தின் கதை. 

ஊர் சரித்திரம், கலவரம், பஞ்சாயத்து என துவங்கும் முதல் பாதி, விஷாலின் என்ட்ரிக்கு பிறகு சூடுபிடிக்கிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள், பன்ச் டயலாக்குகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. ஊரின் பெரிய தலைவராக ராஜ்கிரண் மீண்டும் ஒரு அட்டகாசமான பெர்பார்மன்ஸை கொடுத்திருக்கிறார். முதல் பாகத்தை போலவே மிரட்டலாகவும், இரக்கமாகவும், பாசமாகவும் பல ஆங்கிள்களில் அசத்தியிருக்கிறார். விஷாலின் பெர்பார்மன்சும் சூப்பர். ஆக்ஷன் கட்சிகளில் சீறும் விஷால், மற்ற காட்சிகளில் முதல் பாதியில் பார்த்த அதே அமைதியான அடக்கமான பாலுவாக தோன்றுகிறார். சண்டகோழியில் படம் முழுக்க வம்பு செய்த மீரா ஜாஸ்மினுக்கு ஈடுகொடுக்க வேண்டிய நிலைமை. அதை சிறப்பாகவே செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சிறப்பாக நடித்திருந்தாலும், சில இடங்களில் அவரது கிராமத்து பாஷை எடுபடவில்லை. உக்கிரமான வில்லியாக வரலக்ஷ்மி தோன்றியிருக்கிறார். பாடி லேங்குவேஜிலும், நடிப்பிலும் மின்னுகிறார். விஷாலுக்கு ஏற்ற வில்லிதான்!

படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகளும் அதிரடி வசனங்களும் இருந்தாலும், திரைக்கதையில் வேகம் கொஞ்சம் கம்மி. சண்டக்கோழி முதல் பாகத்தில் இருந்த வேகம் இந்த படத்தில் மிஸ்ஸிங். ஆனால், முதல் பாகத்தில் இருந்த அதே கதைக்களத்தில், தொய்வில்லாமல் காட்சிகளை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது. வேகம் கம்மி என்றாலும், படம் சுவாரஸ்யமாகவே செல்கிறது. விஷால், கீர்த்தி சுரேஷின் ரொமான்ஸ் காட்சிகளும் ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சண்டை காட்சிகள் படத்தின் பெரிய பலம்.

கொஞ்சம் ஓவர்டோஸாகி போன பஞ்ச் டயலாக்குகள், பில்ட் அப் காட்சிகள் படத்தின் மைனஸ் பாயிண்ட். படம் முழுக்க இரண்டு தரப்பும் "நாங்கள் புலி, நீங்க ஆடு" என மாறி மாறி கத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இது நமக்கு எரிச்சலூட்டுகிறது. மீரா ஜாஸ்மினுக்கு என்ன ஆச்சு என முதல் பாதியில் சொல்வது போல ஒரு சின்ன ஹின்ட் கொடுத்துவிட்டு, அது என்னவென்றே சொல்லாமல் படத்தை முடித்துள்ளார்கள். எடிட்டிங்கில் ஏற்பட்ட கோளாறோ என்னவோ? ஆனால், நல்ல ஒரு கிளைமேக்ஸை கொடுத்து படத்தை முடித்துள்ளதால், மாஸ் ஆடியன்ஸுக்கு படம் ஒர்க் அவுட் ஆகும். 

அஞ்சான் படத்தில் தான் விட்ட குதிரையை இந்த படத்தின் மூலம் மீண்டும் லிங்குசாமி பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். சண்டக்கோழி 2, முதல் பாகத்திற்கு ஏற்ற வாரிசு இல்லையென்றாலும், ஆக்ஷன் ரசிகர்களுக்கான ஒரு கமர்ஷியல் பேக்கேஜ். 

நம்ம ரேட்டிங்: 2.5/5

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.