ஜீனியஸ் - திரை விமர்சனம்

  shriram   | Last Modified : 26 Oct, 2018 07:53 pm
genius-movie-review

சுசீந்திரன் இயக்கத்தில் ரோஷன், ப்ரியா லால் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜீனியஸ். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல படங்களின் வெற்றியை திருப்பி கொண்டு வர துடிக்கும் இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த முயற்சி. படத்தை தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்துள்ளார் புதுமுகம் ரோஷன். கேரள நடிகை ப்ரியா லால் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, ஜெயபாலன் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். 

படிப்பு, படிப்பு என தனது புத்திசாலி மகன் ரோஷனை பிழிந்தெடுக்கும் தந்தை நரேன். அதை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு நோயாளியாகிறார் ரோஷன். அவரை திருப்பி பழைய நிலைக்கு கொண்டு வர அவரது குடும்பம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றதா இல்லையா என்பதே கதை. 

மதிப்பெண்களை நோக்கி மட்டுமே செல்லும் தற்போதய கல்வி உலகம்; ஊழியர்களை மூச்சுமுட்ட வேலைவாங்கும் ஐடி நிறுவனங்கள்; மனநோயாளிகள் மீதான சமூக பார்வை; மாடர்ன் தமிழ் கலாச்சாரம் என பல விஷயங்களை படம் தொடுகிறது. படிப்பு வேலை மட்டுமே வாழ்க்கை அல்ல...கலை, விளையாட்டு என வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும், என்ற நல்ல மெசேஜை கொண்டுள்ளது. ஆனால், அதை சரியாக எடுத்து முடித்துள்ளார்களா என்பதில் இருக்கிறது ட்விஸ்ட்.

படம் துவங்கும் முதல் காட்சியே, ஈர்ப்பில்லாத வசனங்கள், ஒர்க்அவுட் ஆகாத காமெடி என டல்லடிக்கிறது. முதல் 20 நிமிடங்களுக்கு படம் இப்படியே செல்கிறது. அதன்பின், பிளேஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக கதையை நகர்த்துகின்றன. முதல் பாதி முடியும் போது,  படம் எங்கு செல்கிறது என்று நம்மால் கணிக்க முடிவதனால், பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. இரண்டாவது பாதி, கொஞ்சம் வேகமாக நகர்கிறது. ப்ரியா லால் கேரக்டர் படத்திற்கு பலம் சேர்க்கிறது. க்ளைமேக்ஸும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சிறப்பில்லை. 

நல்ல கதைதானே.. பின்னென்ன இவ்வளவு சுமாரான அனுபவம் என்று கேட்டீர்களென்றால், அதற்கு காரணம் திரைக்கதையும் வசனங்களும் தான். துவக்கம் முதல் முடிவு வரை, படத்தில் துடிப்பு இல்லை. மிக சாதாரணமான சம்பவங்களும், காட்சிகளும், அதை எடுத்துச் செல்லும், சுமாரான வசனங்களும், நம்மை ஈர்க்க மாறுகின்றன. அதற்கு மேல் படத்தில் சொல்வதற்கு விஷயம் எதுவுமில்லை. சில காட்சிகள் தேவேயில்லாமல் இழுத்தடிக்கப்படுவது போல தோன்றுகிறது. வெறும் 1.38 மணி நேரத்தில் படம் முடிந்தது தான் மிகப்பெரிய ப்ளஸ்.

படத்தின் ஹீரோ ரோஷன். பரீட்சையமில்லாத முகம் என்றாலும், இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார். ஆனால், நடிப்பில் அவரது அனுபவமின்மை பல காட்சிகளில் பளிச்சென தெரிகிறது. எமோஷனலாகவும், சீரியஸாகவும் நடிக்கும் காட்சிகளில் ரோஷன் கஷ்டப்படுகிறார். ப்ரியா லாலின் நடிப்பு சிறப்பு. ஆனால், படத்தில் மீண்டும் ஸ்கோர் செய்வது ரோஷனின் தந்தை, தாயாக நடித்திருக்கும் நரேன் மற்றும் மீரா கிருஷ்ணன், ரொம்பவே சூப்பரான பெர்பார்மன்ஸை இருவரும் கொடுத்துள்ளார்கள். படத்திற்கு மிகப்பெரிய பலம். 

படத்தின் தூணாக நிற்பது யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை. குருதேவின் கேமராவும் சிறப்பு.

நல்ல கருத்தை சொல்ல வந்த படம், ரொம்பவும் பார்த்து பழகிப்போன காட்சிகள், வசனங்கள், துடிப்பில்லாத திரைக்கதை ஆகியவற்றால் தொய்வடைந்துள்ளது. ரொம்பவே ஆவெரேஜான ஒரு அனுபவத்தை தருகிறான் இந்த ஜீனியஸ்.

நம்ம ரேட்டிங்: 2/5

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close