சர்கார் - திரை விமர்சனம்

  shriram   | Last Modified : 06 Nov, 2018 01:21 pm

sarkar-movie-review

விஜய் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உச்சகட்ட எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரைப்படம் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் படத்தை தயாரித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் பிரவேசத்தின் மையப்புள்ளியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உருவான படம். வெளியாகும் தருவாயில், கதை திருட்டு சர்ச்சை வேற. நீதிமன்றம், வழக்கு என பலகட்ட அலைச்சல்கள், பஞ்சாயத்துக்கு பின் ஒரு வழியாக சர்கார் வெளியாகியுள்ளது.

உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவரான விஜய், தேர்தலில் ஓட்டளிப்பதற்காக இந்தியா வருகிறார். சர்வதேச அளவில் பேரெடுத்த தமிழன், தமிழகத்தின் முகம் என்றெல்லாம் பலகட்ட பில்ட் அப்களுக்கு பின்னர், அனைத்து மீடியாக்களும் பார்க்க, விஜய் வாக்களிக்க வருகிறார். ஆனால், அவரது ஓட்டை வேறு யாரோ போட்டுவிட்டனர். இதை சும்மா விடாமல், நீதிமன்றம் சென்று நியாயம் கேட்கிறார். இதனால் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆளும்கட்சியினருக்கும் விஜய்க்கும் முட்டிக் கொள்கிறது. அதன்பின் அரசியலில் அடியெடுத்து வைக்கிறார் விஜய். தனது புத்திசாலித்தனத்தால் விஜய் எப்படி அரசியல்வாதிகளை சமாளிக்கிறார் என்பது தான் கதை.

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையை போல விஜய்யின் கேரக்டர் 'சுந்தர்' எழுதப்பட்டுள்ளது. தற்போதய அரசியல் சூழலை படத்தில் லாவகமாக இயக்குனர் முருகதாஸ் புகுத்தியுள்ளார். ஒரு ஓட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக படத்தில் பல வசனங்கள் இடம்பெறுகின்றன. மக்கள் பிரச்னை, தேர்தல் முறைகேடு, கள்ள ஒட்டு, ஓட்டுக்கு பணம், என ஜனநாயகத்திற்கு எதிரான எல்லா விஷயங்களையும் படம் தொடுகின்றது.

படத்தின் முதல் பாதி, வேகத்துடனும், மிகவும் சுவாரஸ்யமாகவும், செல்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற  எதிர்பார்ப்பு உள்ளது. அரசியல்வாதிகளுக்கு எதிராக விஜய் பயன்படுத்தும் பல யுக்திகள், ரசிக்க வைக்கின்றன. ஆனால், முதல் பாதியில் இருந்து விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் மிஸ்ஸிங். விஜய்யின் அதிரடி நடவடிக்கைகள், பெரிய அளவு ஒர்க் அவுட்டாக வில்லை. க்ளைமேக்ஸ் காட்சியை நெருங்கும்போது, படம் இழுத்துக் கொண்டே செல்கிறது.

வில்லி கேரக்டரில் தோன்றியுள்ள வரலக்ஷ்மி, க்ளைமேக்சின் போது தான் கதைக்குளேயே நுழைகிறார். அதுவரை புத்திசாலியாக அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் விஜய், அதன்பின் தொடர்ந்து சொதப்புகிறார். கிளைமேக்சை இழுப்பதற்காக, விஜய்க்கு இல்லாத ஒரு சவாலை கொடுத்தது போல இருந்தது. 

படத்தின் மிகபெரிய பலம் விஜய். சோலோவாக படத்தை நகர்த்திச் செல்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் நடை, உடை, பாவனையில் ஸ்டைலும், அதிரடியும் காட்டுகிறார். பல எமோஷனலான காட்சிகளில், இதுவரை கண்டிராத விஜய்யை பார்க்க முடிகிறது. எல்லா சீன்களிலும் அசால்ட் செய்து ரசிகர்களுக்கு நல்ல தீனி போட்டுள்ளார். ஒன்றிரண்டு இடங்களில், கொஞ்சம் ஓவர்ஆக்ட் செய்த பீலிங் ஏற்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் வரலக்ஷ்மியின் நடிப்பும் சிறப்பு. ஆனால், கீர்த்தி சுரேஷ், விஜய் இடையிலான உறவு, புரியாத புதிராகவே உள்ளது. அவர்களுக்குள் ஆரம்பத்தில் இருக்கும் தொடர்பு, எங்கு காதலில் விழுகிறார்கள் என்பதெல்லாம் அரைகுறையாக காட்டப்பட்டுள்ளன. ஒரு வகையில் அவர்களது காதல் போர்ஷன் மையக் கதையை தொந்தரவு செய்யாமல் இருந்தது பாராட்டுக்குரியது. ஆனாலும், அதை கொஞ்சம் தெளிவாக காட்டியிருக்கலாம். 

ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும் அட்டகாசம். படத்திற்கு ஒரு இன்ச் பிரம்மாண்டம் அவரது இசையால் கூடியுள்ளது. கேமரா வேலைகளும் சிறப்பு. முக்கியமாக ஆக்ஷன் காட்சிகள் ரோம்பாவே புதிதாக உள்ளன. பொது ஆடியன்சை ஆக்ஷன் காட்சிகள் பெரிய அளவில் ஈர்க்காவிட்டாலும், விஜய் ரசிகர்களுக்கு அதிரடி திருவிழாவாக தான் இருக்கும்.

ஒட்டுமொத்தத்தில், விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சும் ஒரு படமாக அமைந்துள்ளது சர்கார். அதிரடி ஆக்ஷன் மட்டுமல்லாமல், ரசிக்கும்படி அரசியலும், அரசியல் கலந்து பன்ச் டயலாக்குகளும் அமைந்துள்ளது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். மற்றபடி, படம் ஒரு முழு நீள மாஸ் என்டர்டேய்னர். க்ளைம்கேஸ் காட்சிகளை கொஞ்சம் மெருகேற்றியிருந்தால், சர்கார் ஒரு கம்ளீட் பேக்கேஜாக இருந்திருக்கும். 

நம்ம ரேட்டிங் 3/5

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.