சீதக்காதி - திரை விமர்சனம்

  Newstm Desk   | Last Modified : 20 Dec, 2018 06:23 pm

seethakkaathi-movie-review

விஜய் சேதுபதி, மௌலி, அர்ச்சனா, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் சீதக்காதி. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'பேஷன் ஸ்டூடியோஸ்' நிறுவனத்தின் சார்பில் அருண் வைத்தியநாதன் படத்தை தயாரித்துள்ளார்.

'அய்யா ஆதிமூலம்' என்ற பழம்பெரும் மேடை நாடகக் கலைஞர் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். 50 வருடங்களுக்கும் மேலாக மேடை நாடகங்களில் நடித்து வரும் அய்யா, ஒருநாள் மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இறந்துவிடுகிறார். அதன்பின் அவரது ஆன்மா அவரது நாடகக் குழுவின் உறுப்பினர்கள் மூலமாக நடிக்கத் துவங்குகிறது. பின்னர், அவரது ஆன்மாவை சினிமாவில் நடிக்க வைக்கின்றனர். இப்படி ஒரு வித்தியாசமான புதுவிதமான கதைக்களத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதிமூலம் விஜய் சேதுபதிக்கு, சிறிய ரோல் தான். அரைமணி நேர நேரத்தில் அவரது கதை முடிகிறது. அதற்குப் பின்னர் கமர்ஷியல் சினிமா என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களையும்,  சினிமாவில் இன்று உள்ள நடிப்பின் நிலைமையையும் காமெடியாக சொல்ல முயற்சித்துள்ளனர்.  

முதல் பாதியில் கதை எந்த பாதையில் செல்கிறது என தெரியாமல் இருப்பதால், சுவாரஸ்யமாக செல்கிறது. ஆனால், இடைவெளைக்குப் பின்னர், காட்சிகளில் விறுவிறுப்பு குறைந்து ஆங்காங்கே டல்லடிகிறது. விஜய் சேதுபதியின் ஆன்மா நடிக்கிறது, சூப்பர்ஸ்டார் ஆகிறது, நீதிமன்றம் வரை செல்கிறது என அடுத்தடுத்த லெவலுக்கு கதையை கொண்டு செல்லும்போது, ஒரு சில இடங்களில் சீரியஸான காட்சிகளும் நமக்கு சிறுபிள்ளைத்தனமாக தெரிகிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் விஜய் சேதுபதியின் நடிப்பு. கடினமான மேக்கப், முதியவர் போன்ற நடிப்பு, இவற்றொரு சேர்த்து மேடை நாடகத்தில் மற்றொரு வேடத்தில் நடிப்பது, என தனக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சுமையை எளிதாக கொண்டு செல்கிறார். விஜய் சேதுபதியின் உதவியாளராக வரும் மௌலியின் நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம். அர்ச்சனா, ராஜ்குமார் என மற்ற நடிகர்களும் அசத்தலான பெர்பார்மன்ஸ் கொடுத்துள்ளனர்.

சிறப்பான நடிப்பு இருந்தாலும், ஒரு சில காட்சிகள் மிக நீளமானதாகவும், தேவையில்லாததாகவும் படுகிறது. அதேபோல ஒரு சில இடங்களில் வரும் காமெடி காட்சிகள், இழுத்துக் கொண்டே செல்வதால், டல்லடிக்கிறது. 

"நல்ல நடிப்பு இருந்தால் படம் ஹிட்டாகும். கமர்ஷியல், மசாலாவின் பின் ஓடத் தேவையில்லை", என்ற கருத்தை தான் சீதக்காதி சொல்ல வருகிறது. ஆனால், அதை எடுத்த விதம் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்க வேண்டும் என நமக்கு தோன்றுகிறது. மொத்தத்தில் சீதக்காதி எதிர்பார்த்த அளவு இல்லையென்றாலும், சிறப்பான நடிப்பும், ஒரு புதுமையான கதைக்களமும் உள்ளதால், ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.

படத்துக்கு நாம் கொடுக்கும் ரேட்டிங் 3/5.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.