பேட்ட - திரை விமர்சனம்

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 06:29 pm

petta-movie-review

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக்கி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் 'பேட்ட'. சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். '2.0' ரிலீசாகி இரண்டே மாதங்களில் இன்னொரு சூப்பர்ஸ்டார் படம். கடும் எதிர்பார்ப்புக்கு இடையே, பேட்ட படத்தின் டீசர், ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களை அமர்க்களப்படுத்த, காலை 4 மணிக்கெல்லாம் தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர்.

ஹாஸ்டல் வார்டனாகவும், மதுரையில் ஒரு பெரிய ரவுடியாகவும், இரண்டு அவதாரங்களை எடுத்துள்ளார் ரஜனிகாந்த். இரண்டுமே க்ளாஸிக் ரஜினி ஸ்டைலை உருக்கி வடிவமைக்கப்பட்ட கேரக்டர்கள். ஹாஸ்டல் சாப்பாடு முதல் கல்லூரியில் நடக்கும் ரேகிங் வரை பல்வேறு விஷயங்களை நம்ம சூப்பர்ஸ்டார் வார்டன் தட்டிக் கேட்கிறார். மாணவர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுவது, சிம்ரனுடன் தொட்டும் தொடாத ஒரு ரொமான்டிக் போர்ஷன், சிலுசிலுவென பொழியும் மழைக்கு நடுவே சைக்கிளில் வலம் வருவது என இதுவரை பார்க்காத ஒரு ரஜினியை பல இடங்களில் திரைக்கு கொண்டு வந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

திடீரென வடநாட்டிலிருந்து வில்லன்கள் ஹாஸ்டலுக்குள் இறங்கி அசால்ட் செய்ய முயற்சிக்க, ரஜினிகாந்த் யார்? எதற்காக ஹாஸ்டல் வார்டனாக வந்திருக்கிறார்?, என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறது. 

அதன்பின்னர் பட்டையைக் கிளப்பும் ரஜினிகாந்த், த்ரிஷா, சசிகுமாரின் பிளாஷ்பேக் போர்ஷன். 'பாட்ஷா' போல படு பயங்கரமான ஒரு சூப்பர் துப்பாக்கி சண்டையுடன் கிளைமாக்ஸ் என ஆரம்பம் முதல் முடிவு வரை படம் பட்டையை கிளப்புகிறது.

பேட்ட முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் தரிசனம் தான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம். தனக்குள் இருக்கும் ரஜினி ரசிகனுக்கு என்ன வேண்டுமென்று பட்டியலிட்டு அதற்காக ஒரு கதையை உருவாக்கி திரைக்கு கொண்டு வந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். 

ரஜினிகாந்தின் லுக், மேக்கப், காஸ்டியூம், என எல்லாமே ரொம்ப பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளனர். ரஜினியின் இன்ட்ரோ சீன் முதல் பன்ச் டயலாக்  வரை 80கள், 90களின் சூப்பர்ஸ்டார் படங்களில் இருந்து தயக்கமே இல்லாமல் இறக்குமதி செய்துள்ளார் இயக்குனர். தியேட்டரில் விசில் பறப்பதை பார்க்கும் போது, அது சிறப்பாக ஒர்க் அவுட்டும் ஆகியுள்ளது. 

கதை என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக எதுவும் இல்லை. தமிழ் சினிமாவின் வழக்கமான பழிவாங்கும் கதை. அதில், அதிரடியான, ஸ்டைலான, குறும்பான ரஜினியை கொண்டு வந்து அசத்தியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். படத்தின் முதல் பாதி படு வேகமாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது. இரண்டாவது பாதி கொஞ்சம் ஸ்லோ தான் என்றாலும், ரஜினியின் மாஸ் அதை வேற லெவலுக்கு கொண்டு செல்கிறது. 

ரஜினியின் நடிப்பும் ஆக்ஷனும் ஸ்டைலும் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது. விஜய் சேதுபதியும், நவாஸுதீனும் ரஜினிக்கு போட்டியாக வேற லெவல் பெர்பார்மன்ஸை கொடுத்துள்ளனர். படத்தின் ஒரே மைனஸ் பாயின்ட். க்ளைமேக்ஸுக்கு முன் படத்தின் விறுவிறுப்பு கொஞ்சம் குறைகிறது என்பது தான். மற்றபடி தலைவர் ரசிகர்களுக்கு பேட்ட ஒரு ட்ரீட். குடும்பத்துடன் எல்லோரும் ரசிக்கக்கூடிய ஒரு படத்தை கொடுத்துள்ளது பேட்ட படக்குழு.

நம்ம  ரேட்டிங் - 3/5

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.