வந்தா ராஜாவாதான் வருவேன் - திரை விமர்சனம்

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 06:09 pm
vantha-rajavathaan-varuven-movie-review

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, கேத்ரீன் த்ரெசா, மேகா ஆகாஷ், ரம்யா கிருஷ்ணன், நாசர், யோகி பாபு, சுமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று வெளியாகியுள்ளது.

'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' திரைப்படத்தின் பிரச்னைகளுக்கு பிறகு, மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்' மூலம், சிம்பு மீண்டும் ஃபார்முக்கு வந்தார். வழக்கமான ரூட்டை பின்பற்றாமல், ஒரு குடும்ப சப்ஜெக்ட்டை கையிலெடுத்துள்ளார் சிம்பு. பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் மெகாஹிட்டான 'ஆத்தரிங்கிடி தாரெடி' திரைப்படத்தின் ரீமேக்கான இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில், 'அண்டா', 'பால்' என பல சர்ச்சைகள் எழுந்தாலும், திரளான ரசிகர்கள் காலை 5 மணிக்கெல்லாம் தியேட்டர்களில் குவிந்தனர். முழுக்க முழுக்க தனது ரசிகர்களுக்காக ஒரு மாஸ் படத்தை வழங்கவேண்டும் என சிம்பு முயற்சித்திருக்கிறார். அதிரடி ஆக்ஷன்,
காமெடி, சென்டிமெண்ட் என படத்தில் பல விஷயங்களை கலந்து வழங்கியுள்ளார் சுந்தர் சி.

ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை கொண்டுள்ள தொழிலதிபரின் ஒரே வாரிசான சிம்பு, சிறுவயதிலேயே குடும்ப தகராறில் பிரிந்து சென்ற தனது அத்தையை மீண்டும் குடும்பத்தில் சேர்க்க, டிரைவராக நடித்து போராடுகிறார். 

முதல் பாதியில் படத்தின் விறுவிறுப்பு கொஞ்சம் கம்மி தான். பணக்காரரான சிம்பு, ஏழையாக நடிப்பது, நாயகிகளுடன் செய்யும் லூட்டி, விடிவி கணேஷ், ரோபோ ஷங்கர் ஆகியோரை போட்டு பிரித்து எடுப்பது என பல்வேறு இடங்களில் காமெடிக்கு இடம் இருந்தாலும், அது பெரிய அளவுக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. ஆனால், இரண்டாவது பாதியில் யோகிபாபு அறிமுகமானவுடன், படம் காமெடி டிராக்கில் அடுத்த கியரில் செல்கிறது. தனது டைமிங் மூலமும், வசனம் மூலமும் பல இடங்களில் அரங்கத்தை கலகலக்க வைக்கிறார் யோகி பாபு.

படத்தில் சிம்புவின் நடிப்பு பெரிய பிளஸ். எமோஷனல் காட்சிகளில் கலங்கவைக்கும் சிம்பு, ஆக்ஷன் காட்சிகளில் சீறுகிறார். ஒரு சில இடங்களில் தன்னுடைய நிஜ வாழ்க்கை விஷயங்களை பற்றி, சிம்பு தானே காமெடி செய்து கொள்வது க்ளாஸ். பொதுமக்களும், ரசிகர்களும் அதை ரசித்ததை பார்க்க முடிந்தது.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. "ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள்". "குடும்பம் பிரிய இதெல்லாம் ஒரு காரணமா?" என்று நமக்கு தோன்றும் அளவிற்கு வலுவில்லாத பிளேஷ்பேக். பல்வேறு காட்சிகளில் காமெடி இழுத்தடிக்கப்படுவதால் எடுபடவில்லை. ஓவராகவே பஞ்ச் டயலாக் பேசுவது, வல்லவன், மன்மதன் படங்களை பற்றியும், தன்னை பற்றியும் பெருமைபட்டுக் கொள்வது, என அனைத்து சிம்பு சேஷ்டைகளும் இதிலும் உள்ளது.

கிளைமேக்ஸை நோக்கி நகரும் போது, ஆக்ஷன் காட்சிகள் ஓவர் டோஸாக மாறுகிறது. எமோஷனலான கிளைமேக்ஸில், அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் சிம்புவை, ஏன் படம் முழுக்க இப்படி பார்க்க முடியவில்லை, என தோன்றுகிறது. குடும்பக் கதை என்று இதை சொல்ல முடியாது. ஏனென்றால், பல ஆக்ஷன் காட்சிகள். ரவுடிகள் வானுக்கும் பூமிக்கும் பறக்கிறார்கள். ஆனால் சிம்புவின் மேல் கடைசிவரை ஒரு அடி கூட விடவில்லை. அவரது சட்டை கூட கலையாமல் ஃபைட் செய்கிறார். அவருக்கு இணையாக பெரிய வில்லன் என்று யாருமே இல்லாமல், சென்டிமென்ட்டால் மட்டுமே படத்தின் கிளைமாக்சை முடித்திருக்கிறார்கள்.

கொஞ்சம் வசனங்களிலும் கூர்மையும், திரைக்கதையை மேலும் விறுவிறுப்பாக்கவும் முயற்சி செய்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். சுந்தர் சி-யின் படத்தில் சிம்புவின் தாளங்களே அதிகம் உள்ளன. ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தாலும், பாடல்கள் மனதில் நிற்கவில்லை.

சிம்பு ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் கொண்டாட்டமாக இருக்கும். ஆனால், குடும்ப ஆடியன்ஸை பொறுத்தவரை, சிம்புவின் பில்ட் அப்-களை பொறுத்துக்க கொண்டால், 'வந்தா ராஜாவாதான் வருவேன்' ஒரு ஒன் டைம் வாட்ச் என்று சொல்லலாம்.

நம்ம ரேட்டிங் - 2.5 / 5

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close