தியா - திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 27 Apr, 2018 03:30 pm

’கருவில் இருக்கும் குழந்தையைக் கலைக்கும் உரிமை எவருக்குமே இல்லை!’ என்கிற கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லும் படம்.

நட்சத்திரங்கள்: சாய் பல்லவி, நாக ஷவ்ரியா,பேபிவெரோனிகா, நிழல்கள் ரவி, ரேகா, ஜெயக்குமார். இசை : சாம் சி.எஸ், ஒளிப்பதிவு : நீரவ் ஷா, இயக்கம் : விஜய், தயாரிப்பு : லைகா புரொடக்‌ஷன்ஸ்.

கதை :

கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் இருக்கும் காதலர்களான சாய்பல்லவியும், நாக ஷவுரியாவும் எல்லை மீறுகின்றனர். இதனால், சாய் பல்லவி வயிற்றில் கரு உண்டாகிறது. காதலர்களை சேர்த்து வைக்க முன்வரும் பெற்றோர்கள், இருவரின் எதிர்காலத்தை நினைத்து கருவைக் கலைத்து விட முடிவெடுக்கின்றனர். திருமணத்துக்கு சம்மதம் சொல்வதால், இதற்கு நாக ஷவுரியா உடன்படுகிறார். ஆனால், அந்தக் கருவை சுமக்கும் சாய்பல்லவி இதற்கு சம்மதிக்காததால், கட்டாய கருக்கலைப்பு நடக்கிறது.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு காதலர்களை சேர்த்துவைக்கிறனர் பெற்றோர். குதூகலமாக குடும்ப வாழ்க்கையைத் துவங்க வேண்டிய நேரத்தில், கருவிலேயே கரைந்து போன அந்தக் குழந்தையை நினைத்திக் கலங்கும் சாய் பல்லவி, அந்தக் குழந்தைக்கு தியா என பெயர் வைத்து, அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் ஓவியாமாக தீட்டி வைத்து, அவளின் நினைவுகளிலேயே மூழ்கி கிடக்கிறார்.

அப்போது, திடீரென என்ட்ரி கொடுக்கிறாள் தியா! அவளின் வருகைக்குப் பிறகு, அவள் கருவிலேயே கரைந்து போக காரணமாக இருந்த ஒவ்வொருவரும் துள்ளத் துடிக்க சாகின்றனர். இது, விபத்துப் போல மற்றவர்களுக்கு தெரிந்தாலும், அமானுஷ்ய சக்தியாக வந்திருக்கும் தியா தான் பழி தீர்க்கிறாள் என்பதை உணருகிறார் சாய் பல்லவி! தியாவின் அடுத்த டார்க்கெட் மிச்சமிருக்கும் நாக ஷவுரியா தான் என்பதை அறிந்து பதறுகிறார் சாய் பல்லவி. இதில், ஜெயித்தது தியாவா? சாய் பல்லவியா? என்பது இன்ட்ரஸ்டிங்கான க்ளைமாக்ஸ்.

இந்தப் படத்துக்கு, முதலில் ’கரு’என்கிற மிகப்பொருத்தமான டைட்டிலை தான் வைத்திருந்தனர். ஆனால், இந்த டைட்டிலுக்கு வேறொருவர் சொந்தம் கொண்டாடி கோர்ட்டுக்குப் போனதால், கடைசி நேரத்தில் ’தியா’ என பெயர் மாற்றவேண்டியதகப் போக, அது இன்னும் பொருத்தமான டைட்டிலாக மாறியிருக்கிறது.

அலறல் சத்தம் இல்லாமல், காது சவ்வும் கிழியும் இசையால் மிரட்டாமல், ரத்தம் தெறிக்காமல், கிராபிக்ஸ் பம்மாத்து எதுவும் பண்ணாமல், இந்த உணர்வுகள் மொத்தத்தையும் எந்த ஆர்பாட்டமும் இல்லமல், அமைதியான வழியில் கூட அமானுஷ்ய கதையை சொல்லி மிரள வைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியதற்காகவும், ’கருவில் இருக்கும் குழந்தையைக் கலைக்கும் உரிமை யாருக்கும் இல்லை!’என்கிற கருத்தை அழுத்தம் திருத்தமாக சொன்னதற்காகவும் இயக்குநர் விஜய்க்கு கொடுக்கலாம் ஒரு பூங்கொத்து! ஆனால், கருவிலேயே கரைந்து போன குழந்தைக்கும் கொலைப் பழி உணர்ச்சி இருப்பதாக சொல்வது தான் அபத்தமாக இருக்கிறது.

'பிரேமம்’ மலையாளப் படத்தின் வாயிலாக தென்னிந்திய ரசிகர்களின் பிரேமத்திற்குரிய நடிகையாக மாறியிருக்கும் சாய் பல்லவி, இந்தப் படத்தின் மூலமாக, தமிழில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஆர்பாட்டமில்லாத அழகில், இயல்பான நடிப்பில், சலனத்தை ஏற்படுத்துகிறார் சாய் பல்லவி.சராசரிக்கும் சற்று அதிகமான குடும்பப் பின்னணியைக் கொண்ட பெண்ணின் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தும் சாய் பல்லவி, கருவிலேயே கரைந்து போன குழந்தையை நினைத்துக் கலங்கி; ஏங்கும்போதும், கணவனை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளின் போதும் காட்சிகளின் கனத்தை, கண்கள் வழியாக மிக அழகாக கடத்திச் செல்கிறார்.

தெலுங்கிலிருந்து இறக்குமதியாகியிருக்கும் நாயகன் நாக ஷவ்ரியாவுக்கு கதையில் அதிகம் வேலை இல்லை, தனக்கு ஒதுக்கப்பட்ட களத்தில் நின்று விளையாடுகிறார்.

கதையின் கருவை தாங்கிப் பிடிக்கும் கதாபாத்திரத்தில் பேபி வெரோனிகா நடித்திருக்கிறார். அமானுஷ்ய உருவமாக வந்து பார்வையாலேயே பதற வைக்கும் வெரோனிகா, ’அம்மா...’என உருக்கமாக கூப்பிடும் அந்த ஒற்றை வார்த்தைக்குள் புதைந்து கிடக்கிறது அத்தனை உணர்வுகளும்!

நாயகனின் தந்தை நிழல்கள் ரவி, நாயகியின் தாய் ரேகா, தாய்மாமா ஜெயக்குமார் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்கள் வழியாக,அனுபவ முத்திரையைப் பதித்துவிடுகின்றனர்.அடுக்கடுக்காக நிகழும் கொலையை கண்டுபிடிக்க வரும் காமெடிப் போலீஸ் ஆர்.ஜே.பாலாஜி சில இடங்களில் கலகலக்க வைத்தாலும், பல இடங்களில் கடுப்பேத்துகிறார்.

காட்சிகளை மிக நேர்த்தியாகப் படம் பித்திருக்கும் நீரவ் ஷா, வழக்கமான பேய் படங்களுக்குப் போடுவது மாதிரி இல்லமல், கதையின் தன்மையை உள்வாங்கி அதற்கேற்ற பின்னணி இசையைக் கொடுத்திருக்கும் சாம் சி.எஸ்,இருவரும் படத்தின் தரத்தை உயர்த்த உதவுகின்றனர். ’தியா’வுக்கு நம்ம ரேட்டிங் - 3/5

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.