‘காலா’வுக்கு கர்நாடகத்தில் தடை

  Newstm Desk   | Last Modified : 29 May, 2018 07:21 pm


கர்நாடக மாநிலத்தில் ரஜினியின் ‘காலா’ படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜூன் 7ம் தேதி வெளிவரவுள்ள காலா படம் கர்நாடகாவில் வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளிவரும் காலா அரசியல் படம் இல்லை ஆனால் படத்தில் அரசியல் இருக்கும் என ரஜினிகாந்த் அண்மையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார். மேலும் காலா தலித் மக்களின் நில உரிமைகளை பேசும் எதார்த்தமான கதையில் உருவாக்கப்பட்டதாக இயக்குநர் பா. ரஞ்சித் தன் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் மாநில நலன் கருதி கர்நாடகாவில் காலாவுக்கு தடைவிதிக்கப்படுவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.  காவிரி தொடர்பான ரஜினியின் கருத்துக்கு கன்னட அமைப்புகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், திரையிடுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதால் சூப்பர் ஸ்டார் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக நேற்று வெளியான காலா படத்தின் ட்ரெய்லர் வெளியான 12 மணி நேரத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமானோர் யூடியூபில் காலா டீசரை பார்த்து தனது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

Advertisement:
[X] Close