எவ்வளவு பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்தாலும்..: 'காலா' எதிர்ப்பு சொல்லும் செய்தி

  நாச்சியாள் சுகந்தி   | Last Modified : 07 Jun, 2018 11:16 am

kaala-movie-issue-and-lessons-to-celebrities

தமிழ்நாட்டில் ஒரு திரைப்படத்துக்கு எதிர்ப்பு வருவது  புதிது அல்ல. இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படத்துக்கு பல மகளிர் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. கஸ்தூரி ராஜாவின் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தை குப்பைத் தொட்டியில் வீசுவது போல்விமர்சனம் செய்தது ஒரு வாரப் பத்திரிக்கை. கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்துக்கு எழுந்த எதிர்ப்பு அனைவரும் அறிந்ததே. சண்டியர் என்று திரைப்படத்துக்கு பெயர் வைக்க கூடாது என்று எழுந்த எதிர்ப்பை கமல் ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். 

அண்மையில் வெளியான நடிகர் விஜய்யின் 'மெர்சல்' திரைப்படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி குறித்த விமர்சனம் வருகிறது என்பதால் அதை தடை செய்யவேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் குரல் எழுப்பினர். ஆனால் தற்போது இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்திற்கு கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அது  மட்டுமல்லமல் ஐரோப்பிய வாழ் தமிழர்களிடையே கடும் எதிர்ப்பு உருவாகி, அப்படத்தை நார்வே உள்ளிட்ட பல நாடுகளில் திரையிட மாட்டோம் என அறிவித்தனர். 

கொதிக்கும் சோஷியல் மீடியா

கடந்த மே22ந் தேதி தமிழக நாட்காட்டியில் ஒரு இருண்ட நாள். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி பொதுமக்கள் 13 பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். பலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதைக்கண்டு மொத்த தமிழகமும் கொதித்தெழுந்தது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்த்த ரஜினி, சமூக விரோதிகள் தான் கலவரத்தைத் தூண்டினர் என பேசினார். ஒரு மக்கள் போராட்டத்தை, சமூக விரோதிகள் கலந்து கொண்ட போராட்டம் என ரஜினி எப்படி விமர்சிக்கலாம் என ஒட்டு மொத்த சமூக வலைதளமும் கொதித்தது. மீம்ஸ்கள் பறந்தன. 

முகநூல் பதிவர்கள் மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அரசின் குரலாக பேசிய ரஜினியின் காலா திரைப்படத்தை நிராகரிக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அப்போது ரஜினி, நான் இன்னும் அதிகமான எதிர்ப்பை எதிர்பார்த்தேன் என்று கூறுவது அவரது பக்குவமின்மையையே காட்டுகிறது என்று அவரது ரசிகர்களும் வருத்தப்படுகின்றனர். 

காலாவுக்கு ஆதரவு

காலா திரைப்படத்தின் இயக்குநர் ரஞ்சித், தலித் மக்களுக்காக பல இடங்களில் குரல் கொடுத்து வருகிறார். கலை மற்றும் பண்பாட்டு தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். ஆகையால் காலாவுக்காக ஆதரவு கொடுக்க வேண்டும். ரஜினி படம் என்பதற்காக ரஞ்சித்தை நிராகரிக்கக் கூடாது என்ற குரல்களும் கேட்கின்றன. 

இதற்கெல்லாம் மேல் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் இதுகுறித்து பேச வேண்டும் என்கிறார்கள். ஒரு திரைப்படத்துக்கு ஆதரவு கொடுங்கள் என ஒரு மத்திய அமைச்சர் பகிரங்கமாகக் கேட்பது இந்திய அரசியலில் இல்லாத பிழையான வரலாறு. 

மத்திய அமைச்சரே இறங்கி வந்து ஆதரவு கேட்கும் போது ரஜினியின் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா..? சென்னையின் பெரும்பாலான இடங்களில் ரஜினியின் காலா திரைப்படத்தை அலைகடலென திரண்டு வந்து காணுங்கள் என நோட்டீஸ் ஒட்டியுள்ளார். ரஜினியின் 40 ஆண்டுகால சினிமா வாழ்வின் வெற்றிக்கு இதெல்லாம் கறைதான். 

கர்நாடக காலா அரசியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ரஜினி சொன்னதால் காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திலையிடக் கூடாது என்று அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கூறிவருகின்றன. அதில் ரஜினியின் மருமகன் தனுஷ் தொடர்ந்த வழக்கில் காலா திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் பாதுகாப்பு வாங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆனால், காலா படத்தின் விநியோகஸ்தர் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. ரஜினி கர்நாடக மக்களிடத்தில் கன்னடத்திலேயே வேண்டுகோள் வைத்தும் மக்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை.

கலைஞன் யாருக்காக? 

தமிழக மக்கள் மட்டுமில்லாது ஒட்டுமொத்த இந்தியாவிலும் சினிமாவையும் அரசியலையும் பிரித்துபார்க்காமல் தான் மக்கள் இருக்கின்றனர். அதானல் தான் எம்.ஜி.ஆர், என்டிஆர்,  ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அரசியலில் கோலோச்சினர். ஆனால் ரஜினி மக்களின் குரலாக ஒலிக்காமல் அரசின் குரலாக ஓலிப்பதால் அவருடைய திரைப்படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங் அதிகம் இல்லை என்று செய்திகள் வருகின்றன. ஒரு கலைஞனும் அவனது படைப்பும் மக்களுக்காக என்று இருக்க வேண்டும், அவ்வாறு இல்லை எனில் மக்கள் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தூக்கியெறிய தயங்க மாட்டார்கள் என்பதையே காட்டுகிறது. இது ரஜினியின் அரசியல் ஆசையை தூண்டுமா அல்லது கிள்ளி எறியுமா என்பதை பொறுதுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

- நாச்சியாள் சுகந்தி, தொடர்புக்கு: natchimakal@gmail.com

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close