'அம்மா'வுக்கே தலைவராகும் மோகன்லால்!

  திஷா   | Last Modified : 12 Jun, 2018 03:15 pm

mohanlal-to-become-president-of-amma

மணிரத்னத்தின் இருவர் படத்தில் ஆனந்தனாக எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். தற்போது, இவர் மலையாள திரைப்படத்தின் அம்மா சங்கத் தலைவராக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

மலையாள நடிகர் மற்றும் நடிகைகளுக்கு 'அம்மா' என்ற பெயரில் சங்கம் இருக்கிறது. இதன்மூலம், நடிகர்களின் தேவைகள் மற்றும் பிரச்னைகளை இந்த சங்கத்தின் மூலம் உடனுக்குடன் தீர்க்கப்படுகிறது. இதன் தலைவராக மலையாள குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் இன்னசென்ட் இருக்கிறார். கடந்த 17 வருடமாக 'அம்மா' சங்கத்தின் தலைவர் பதவியில் இருக்கும் இன்னசென்ட் எல்லா பிரச்னைகளையும் உடனே பேசி தீர்த்து வைப்பவர். நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் கூட, யாருக்கும் எந்த பிரச்னைகளும் ஏற்படா வண்ணம் திறமையாக கையாண்டு சங்கத்தில் பிளவு ஏற்படாமல் பார்த்து கொண்டார். 

இப்படி பல முக்கிய தருணங்களில் மிக சாதுர்யமாக நடந்துக் கொள்ளும் இன்னசென்டுக்கு கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சை முடிந்து பூரண நலம் பெற்ற அவர் தொடர்ந்து  தலைவராக பணியாற்றி வந்தார். சிகிச்சைக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்த அவர், தற்போது அம்மா அமைப்பில் இருந்தும் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். இதனால், விரைவில் நடைபெற உள்ள அம்மா சங்க தலைவர் தேர்தலில் தான் போட்டியிட போவது இல்லை என்று இன்னசென்ட் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட நடிகர் மோகன்லால் மட்டுமே விண்ணப்பித்திருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட இன்னும் யாரும் முன்வரவில்லை. அதனால் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என மலையாள சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன! மோகன்லால் தலைமையின் கீழ் மலையாள சினிமா உலகம் மேன்மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close