மலையாளம் மற்றும் கன்னடம் மொழிப்படங்களில் பிரபலமாகியிருக்கும் நடிகை அனிஷா, ’வஞ்சகர் உலகம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.
வெள்ளிக்கிழமை தோறும் ஏதாவதொரு புதுமுகம் அறிமுகமாகவே செய்கின்றனர். ஆனால், ரசிகர்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அந்த புதுமுகத்தால் நிலைத்து நிற்க முடியும்! கடும் போட்டிக்கிடையே ’வஞ்சகர் உலகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்குகிறார் நடிகை அனிஷா. இவர், தமிழுக்குத் தான் புதுமுகமே தவிர, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிப் படங்களைப் பொறுத்தவரை புகழ் முகம்! 'கர்வ்வா' என்கிற கன்னடப் படத்திலும், மோகன்லால், கௌதமி நடிப்பில் வந்த 'மனமந்தா' என்கிற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார் அனிஷா.
’வஞ்சகர் உலகம்’படத்தில் அனிஷாவுக்கு, செய்தி சேகரிக்கும் போது ஒரு கொடூரமான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் சம்யுக்தா என்ற பத்திரிகையாளர் கதாப்பாத்திரம்! மேலும் இந்தப் படத்தில் சிபி புவன சந்திரன், ஹரேஷ் பெரடி, குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய், வாசு விக்ரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
லாபிரிந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். அறிமுக இயக்குநர் மனோஜ் பீதா இயக்குகிறார்.