• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

‘காமெடி கிங்’ கவுண்டமணி பிறந்த நாள் ஸ்பெஷல்...!

  பால பாரதி   | Last Modified : 18 Mar, 2018 11:43 am

1939 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் நாள் ‘சுப்பிரமணி’யாக, கவுண்டமணி பிறந்தது உடுமலைப் பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக் கொண்டபுரம்! நாடக மேடைகளில் அவர், ‘கவுண்டர் டயலாக்’ அடிக்கும் அழகைப்பார்த்த பாரதிராஜா,`கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றி ’16 வயதினிலே’ படத்தில் அறிமுகப்படுத்தினார்.

1964 ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் இருக்கும் கவுண்டமணி இதுவரை 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ‘ராஜா எங்க ராஜா’, ‘பிறந்தேன் வளர்ந்தேன்’, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ உள்ளிட்ட 12 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தியாவின் லாரல்-ஹார்டி என வர்ணிக்கப்படும் காமெடி இரட்டையர்களான கவுண்டமணி – செந்தில் இருவரும் சேர்ந்து 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள்.

சினிமா உலகில் கவுண்டமணிக்கு பெரிய நட்பு வட்டம் கிடையாது. சத்யராஜ், அர்ஜூன், கார்த்திக் ஆகிய மூவரும் மட்டும் தான் நெருக்கமாகப் பழகுவார்! வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது, அவர் ஒரு தனிமை விரும்பி!

கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகன் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசி சிலாகிப்பார். அதேபோல, சார்லி சாப்ளின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பார். ‘பெயருக்கு முன்னால் ஏதாச்சும் பட்டம் சேத்துக்கலாமே?’ என யாராவது சொன்னால், `ஏப்பா..., சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டேன்! அவரே எந்தப் பட்டமும் போட்டுக்கலப்பா!’ என்பார்.

அம்மாவை ‘ஆத்தா’ என்று தான் ஆசையாக அழைப்பார். வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் ஆத்தாவின் காலடியை தொட்டுக் கும்பிட்டு விட்டுத்தான் செல்வார். சென்னை தியாகராயநகரில் உள்ள கவுண்டமணி ஆபீஸீக்குப் போனால் வயதில் சிறியவராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வரவேற்பார். வந்த விருந்தினர் அமர்ந்து பிறகுதான் அவர் இருக்கையில் அமருவார்.

மனைவி பெயர் சாந்தி. செல்வி - சுமித்ரா என இரு மகள்கள். முதல் பெண்ணின் திருமணத்தின் போது தான் கவுண்டமணிக்கு கல்யாண வயதில் பெண் இருக்கும் விவரமே வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. அந்தளவுக்கு மீடியாவை விட்டு விலகியே இருப்பார். அவர், இதுவரை எந்த பத்திரிகைக்கும், டிவிக்கும் பேட்டி கொடுத்ததில்லை!

காமெடி நடிப்பால் பல படங்களை கரையேற்றியிருக்கும் கவுண்டமணிக்கு குணசித்திர நடிப்புதான் மிகவும் பிடிக்கும்.`ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ `வரவு எட்டணா செலவு பத்தணா’ போன்ற படங்களில் குணசித்திர நடிப்பிலும் முத்திரை பதித்தார்.

பெட்றமாஸ் லைட்டே தான் வேணுமா?, இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது! (வைதேகி காத்திருந்தாள்), அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா! (சூரியன்), டேய் தகப்பா..! (நாட்டாமை, நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடிலப்பா! (மன்னன்), என்னெயப் பாத்து எண்டா அந்தக் கேள்விய கேட்ட? (கரகாட்டக்காரன்), அடங்கொப்பா இது உலகமகா நடிப்புடா சாமி! (மாமன் மகள்), ஐயோ ராமா, என்னெய ஏன் இந்த மாதிரி கழிசட பசங்களோடலாம் கூட்டு சேர வக்கிற?! (ஜென்டில்மேன்), அல்லக்கைங்க ரூல்ஸ் என்னடா? வாழ்க.., ஒழிக.. அதோட நிப்பாட்டிக்கிங்கடா! (தாய் மாமன்) .... இவை கவுண்டமணியின் பிரபலமான ‘பன்ச்’!

சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருந்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டமணி. அப்போது, அவரின் உடல் நலம் பற்றி விசாரித்து உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. நலமாகி வீடுதிரும்பிய பிறகு, ஊடங்களில் திடீர் திடீரென மரண செய்தி வரும் போது, ‘என்டா... ஒரு மனுஷன எத்தன வாட்டிடா சகடிப்பீங்க?’ என அதையும் காமெடியாகவே எடுத்துக் கொள்வார் ‘காமெடி கிங்’! அவருக்கும், அவரின் நகைச்சுவைக்கும் எப்போதும் அழிவில்லை! 'காமெடி கிங்' கவுண்டமணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! கட்டுரை ஆக்கம் : பால பாரதி..!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close