தியேட்டர்கள் கிடைக்காமல் திண்டாடும் திரைப்படங்கள்

  பா.பாரதி   | Last Modified : 12 Sep, 2018 03:42 pm

theater-issues-in-tamil-cinema

முன்பெல்லாம் ஒரு படம் வெளியானால் சாதாரணமாகவே 100 நாட்கள் ஓடும். குறைந்தது 50 மற்றும் 75 நாட்கள் அதற்கு கியாரண்டி உண்டு. ஆனால் இப்போதோ ரிலீஸுக்கு அடுத்த நாள் 'சக்ஸஸ் பார்ட்டி' வைக்கும் கலாச்சாரம் மேலோங்கி இருக்கிறது. 

இதற்கு படத்தின் தரம் ஒரு காரணம் என்றாலும் தியேட்டர் பற்றாக்குறையும் மிக முக்கியக் காரணம். 40 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் 2,500 தியேட்டர்கள் இருந்தன. அப்போது மக்கள் தொகை 5 கோடி. இப்போது இது 8 கோடியாக அதிகரித்துள்ள நிலையில் தியேட்டர்கள் எண்ணிக்கை 1,200 ஆக சுருங்கி விட்டது.

செப்.13: சீமராஜா, யு-டர்ன், செப்.20: சாமி-2, செப்.27: செக்க சிவந்த வானம், அக்.5: 96, ராட்சசன் இப்படி அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி, தேதியையும் அறிவித்து விட்டார்கள். ஆனால் தியேட்டர்களுக்குத் தான் பஞ்சம். 

டீ-மானிடைஷேஷன், ஜி.எஸ்.டி, தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் என அடுத்தடுத்து சினிமா உலகிற்கு பலத்த அடி. அதனால் திட்டமிட்ட நேரத்தில் படங்களை ரிலீஸ் செய்ய முடியாத நிலை உருவானது. இன்னும் கூட பல படங்கள் கிடப்பில் இருக்கின்றன. 

பொதுவாக, ரிலீஸ் ஆகும் படங்களுக்கு ஓபனிங் இல்லாவிட்டால், அடுத்த வாரமே தூக்கிவிட்டு புதுப்படங்களை திரையிட தயாராகி விடுவாரகள் தியேட்டர்  உரிமையாளரகள். ஆனால் ஓபனிங் இருக்கும்  படங்களை தூக்க முடியாது. 

ஒரே நேரத்தில் பல படங்கள் ரிலீஸ் ஆவது தியேட்டர் அதிபர்களுக்குத்தான் லாபம். சென்னையில் உள்ள பிரபல தியேட்டர், சிவ கார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படத்தை 16-ல் 10  ஸ்கிரீன்களில் வெளியிடுகிறது. நாளொன்றுக்கு 50 காட்சிகள். படம் நன்றாக இருக்கிறதோ, இல்லையோ இவர்கள் ஒரே வாரத்தில் பணத்தை அள்ளி விடுவார்கள்.

இதற்கிடையில் ரஜினியின் 2.0 படத்தின் 3-டி- டீசரும் நாளை முதல் சில தியேட்டர்களில் வெளியாகிறது.  இதற்கு நிச்சயம் கூட்டம் அலை மோதும். இதனால் ரிலீஸ் ஆகும் புதுப்படங்களின் வசூல் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக வருத்தப்படுகிறார்கள் தயாரிப்பாளர்கள். 

- பா.பாரதி.

newstm.in  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close