சர்காரை தொடர்ந்து எழுந்துள்ள 96 கதை விவகாரம்: அதிர்ச்சி பின்னணி

  திஷா   | Last Modified : 01 Nov, 2018 02:00 pm

story-theft-issue-after-sarkar-now-96-movie

ஒருவழியாக சர்கார் கதை திருட்டு சம்பவம் சமரச முடிவுக்கு வந்துவிட்டது. கதை தன்னுடையது என்றபோதிலும், அதன் மையக்கரு வருண் ராஜேந்திரனின் கதையோடு ஒத்துப்போவதற்காக கிரெடிட் தருவதாக ஒத்துக்கொண்டு விட்டார் சர்கார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். 

இந்நிலையில் தற்போது 96 படத்தின் மீதும் கதை திருட்டு புகார் பாய்ந்துள்ளது. ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கத்தில், விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளியான 96 படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்தக் கதை இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குநர் சுரேஷ் என்பவருடையது என தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது.  இது பற்றி பாரதிராஜாவும், சுரேஷும் முன்னணி ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில். "இந்தக் கதையை 2012-ல் சுரேஷ் என்னிடம் சொன்னார். தஞ்சாவூர் பின்னணியில் வித்தியாச காதல் கதையாக அது இருந்தது. சுரேஷின் அந்தக் கதையை நானே தயாரித்து இயக்குவதாக முடிவு செய்தோம். பிறகு ஓம் படத்தின் வேலைகளில் நான் பரபரப்பாகிவிட்டதால், பிறகு அந்த காதல் கதையை இயக்குவோம் என நினைத்தோம். 

96 பட போஸ்டரைப் பார்த்துவிட்டு கூட  என்னடா போஸ்டர் வித்தியாசம இருக்கு என சுரேஷிடம் கூறினேன். இதற்கிடையில் படத்தைப் பார்த்த என்னுடைய எழுத்தாளர் ஒருவர் எனக்கு ஃபோன் செய்து, என்ன சார் நம்ம சுரேஷ் கதையை படமா எடுத்துட்டாங்க என்றார். தொடர்ந்து இந்தக் கதையை தெரிந்த ஏழெட்டு பேர் எங்களுக்கு ஃபோன் செய்தார்கள். 

சரி என படத்தைப் பார்த்தால், சுரேஷ் என்னிடம் என்ன சொன்னாரோ அவைகள் காட்சிகளாகவே 90 சதவீதம் 96 படத்தில் இருக்கிறது. மூலக்கதை ஒரே மாதிரியாக இருப்பது என்பது வேறு. காரணம் ஒரே மாதிரியாக எத்தனை பேர் வேண்டுமானாலும் யோசிக்கலாம். ஆனால், 90 சதவீத காட்சிகளை ஒரே மாதிரி யோசித்து படமாக்குவது சாத்தியமில்லாதது. அதுவும் இது சுரேஷின் வாழ்க்கையில் நடந்த உண்மை கதை. சுரேஷ் பள்ளி பருவத்தில் காதலித்த அந்த பெண்ணைப் பற்றிய கதை. 

`சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்தின் இயக்குநரான மருதுபாண்டியிடம் இந்தக் கதையை கூறியிருக்கிறான் சுரேஷ். பிறகு ஒரு நாள் பிரேம் குமார் மூலம் விஜய் சேதுபதியிடம் பேசலாம் என அவர் கூறியிருக்கிறார், ஆனால் அந்த சந்திப்பு நடக்கவேயில்லை. 

இதற்கிடையே 96 படத்தின் டைட்டிலில் "நன்றி மருது பாண்டியண்" எனக் குறிப்பிட்டிருப்பது எங்களின் சந்தேகத்தை ஊர்ஜிதமாக்குகிறது. படத்தின் 3 சீனிலும் மருது நடித்துள்ளார். 

நான் ஃபோன் செய்து அவரிடம் கேட்டபோது, அந்த கதையை நான் மறந்துட்டேன் சார் என்கிறார். 96 படத்தில் நடித்திருக்கிறார், அவருக்கு நன்றி என கிரெடிட் கொடுக்கிறார்கள், அப்படியிருக்கும் போது, எப்படி மறக்க முடியும் என திட்டினேன்" என அந்த நேர்க்காணலில் பாரதிராஜாவே கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய சுரேஷ், "இந்த கதைக்கு 92 என முதலில் பெயர் வைத்தேன். காரணம் அப்போது நான் 12-ம் வகுப்பு படிக்கும் போது நடந்து தான் அந்த கதை. பிறகு எனது இயக்குநரின் பெயரிலேயே டைட்டில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு, பாரதி என்கிற பால்பாண்டி என டைட்டில் வைத்தோம். ஜானகி என்று தான் ஹீரோயினுக்கு பெயர் வைத்தோம். காரணம் என்னுடைய பெண் தோழியின் பெயர் நிஜமாவே ஜானகி தான். பாடகி ஜானகியின் பாடல்களைத்தான் அவர் பாடுவார். யமுனை ஆற்றிலே பாடலை பாட சொல்லி தவம் கிடந்தது நான் தான்" என மனமுடைந்து பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரும் கதை திருட்டு சம்பவம், பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. 

இந்நிலையில் இயக்குநர் பிரேம்குமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் சுரேஷ் குற்றச்சாட்டு தவறானது என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பிரேம்குமார் அளித்திருக்கும் பேட்டியை படிக்க: இங்கே க்ளிக் செய்யவும்...


newstm.in 
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.