இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும் 2.0 திரைப்படம் வரும் 29-ம் தேதி வெளியாகிறது. மாபெரும் வெற்றியடைந்த எந்திரன் திரைப்படத்தின் அடுத்த பாகமாக உருவாகியிருக்கும் இதில் நடிகர் ரஜினிகாந்தே ஹீரோவாக நடித்திருக்கிறார்.‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் அதிக பொருட்செலவில் இதனை பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
நுணுக்கமான 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் செல்ஃபோன் பயன்பாட்டை களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எமி ஜாக்ஸன் ஹீரோயினாக நடிக்க, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்திர லோகத்து சுந்தரியே என்ற பாடல் வெளியிடப்பட்டது. தற்போது யூ - ட்யூப் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தில் இந்தப் பாடல் உள்ளது. இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், அக்ஷய்குமார் ஆகியோர் 2.0 படத்தின் புரொமோஷனுக்காக இன்று ஹைதராபாத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவுள்ளனர். தெலுங்கு திரையுலகிலும் நல்ல லாபம் ஈட்ட வேண்டும் என இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.