இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கும் 2.0 திரைப்படம் நாளை வெளியாகிறது. ரஜினிகாந்த் நடிப்பில், எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகியிருக்கின்றன.
இதைத் தொடர்ந்து தனது அடுத்த படமாக இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறார் ஷங்கர். கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மானும், சிம்புவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஓர் இணையதளத்துக்கு பேட்டியளித்த ஷங்கர், "சமீபத்தில் இந்தியன் 2- திரைப்படத்திற்கான மேக்கப் டெஸ்ட் நடைபெற்றது. மீண்டும் இந்தியன் தாத்தாவைப் பார்த்தது சிலிர்ப்பாக இருந்தது. இன்னமும் கமல் சாரின் எனர்ஜி குறையாமால் இருப்பது, ஆச்சர்யமாக இருந்தது" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், "22 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்தியன் லஞ்சம் வாங்குவதை மையப்படுத்தி இருந்தது. அது அப்போது நான் எதிர்கொண்ட விஷயங்கள், என்னை பாதித்த தருணங்கள், நான் படித்த விஷயங்களை கோர்வையாக்கியிருந்தேன். இந்தியன் 2-வைப் பொறுத்தவரை, இப்போது என்னை தொந்தரவு செய்யும் விஷயங்களையும், நிகழ்வுகளையும் அடிப்படையாக வைத்து இதனை உருவாக்கியிருக்கிறேன்" என்றார்.