தயாரிப்பாளர் சங்கத்தில் அரசியல்: வெடிக்கும் விஷ்ணு விஷால்

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 04:29 pm
vishnu-vishal-slams-tfpc-for-bias

விஷ்ணு விஷால் நடித்து வெளியாகவுள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாக உள்ள நிலையில், எல்லா விதிகளையும் பின்பற்றிய தன்னை போன்றவர்களை திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வஞ்சிப்பதாக காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் தோற்பதை தவிர்க்க, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. இதன்படி பெரிய படங்களுடன் சிறிய பட்ஜெட் படங்கள் மோதுவதை தவிர்க்க, தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வரும் டிசம்பர் 21ம் தேதி, விஜய் சேதுபதியின் சீதக்காதி, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெயம் ரவியின் அடங்காமாறு ஆகிய படங்கள் வெளியாக இருந்தன.

ஆனால், திடீரென, தனுஷின் 'மாரி 2' மற்றும் சிவகார்த்திகேயனின் கனா படங்களும், அதே தேதியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன் முடிவில், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில், தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப படங்களை வெளியிடலாம் என தெரிவிக்கப்பட்டதாம். 

இதனால் கடுப்பான நடிகர் விஷ்ணு விஷால், ட்விட்டரில் காட்டமாக ட்வீட் செய்தார். "விதிமுறைகள் இருக்கு.. ஆனா இல்லை... விதிகளின் படி நடப்பவர்களுக்கு இப்படி தான் நீதி கொடுக்கப்படுகிறதா? இது முதல்முறை அல்ல... இரண்டாவது முறையாக நடக்கிறது. பின்னர் எதற்கு இந்த விதிகள் எல்லாம்?" என எழுதினார். 

மேலும், "கடந்த மாதத்தில் நான் கலந்துகொண்ட அனைத்து சந்திப்புகளிலும் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. இதற்கு சங்கத் தலைவர் விஷால் காரணமல்ல. உள்ளே அரசியல் நடக்கிறது. விதிகளின் படி நடப்பவர்களுக்கு மட்டும் தான் கட்டுப்பாடுகள் விதிக்கபடுகின்றன" என்றும் கூறினார். 

ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், விஷாலின் நெருங்கிய நண்பர் விஷ்ணுவே இவ்வாறு வெடித்துள்ளது, சங்கத் தலைவர் விஷாலுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close