சாதாரணமானவர்களுக்கும் எட்டும் கனியான பத்ம விருதுகள்!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 10:26 am
padma-awards-2019-prabhu-deva-shankar-mahadevan-mohanlal-and-more-conferred-with-honours

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண்,  பத்ம விபூஷண் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி 25ம் தேதி அறிவிக்கப்ட்டது. விருது பெறும் 112 பேர் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டது. 

அதில், இந்தியாவில் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு அடுத்தபடியாக கருதப்படும் பத்ம விபூஷண் விருது 4 பேருக்கும், பத்ம பூஷண் விருது 14 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருதுகள் 94 பேருக்கும் அறிவிக்கப்பட்டது. 

தமிழகத்தைச் சேர்ந்த நடனப்புயல் பிரபுதேவா, பிரபல பாடகர் சங்கர் மகாதேவன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார், பிரபல டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் சரத் கமல், மதுரையைச் சேர்ந்த திருநங்கை நர்த்தகி நடராஜ் மற்றும் மூதாட்டி சின்னப்பிள்ளை, சங்கரா கண் மருத்துவமனை  கண் மருத்துவரான ஆர்.வி.ரமணி, தமிழகத்தைச் சேர்ந்த ட்ரம்ஸ் இசைக்கலைஞரான சிவமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இன்று டெல்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதற்கட்டமாக 56 பேருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் பிரதமர் மோடி, துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில், நடிகர் பிரபுதேவா, பங்காரு அடிகளார், ட்ரம்ஸ் சிவமணி, டென்னிஸ் வீரர் சரத்கமல், பாடகர் சங்கர் மகாதேவன், இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாயி, இந்திய கபடி அணி கேப்டன் அஜய் தாகூர், மறைந்த கன்னட நடிகர் காதர் கான், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஹரிகா, இந்திய வெளியுறவுத்துறையின் முன்னாள் செயலர் ஜெய்ஷங்கர் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

மலையாள நடிகர் மோகன்லால்,  மறைந்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் சார்பில் அவரது மனைவி பாரதி நய்யார், அரசியல் தலைவர்கள் சுக்தேவ் சிங் திண்ட்ஸா மற்றும் ஹுகும்தேவ் நாராயண் யாதவ் ஆகியோர் பத்ம பூஷண் விருது பெற்றனர். 

மீதியிருக்கும் 56 பேருக்கு வருகிற மார்ச் 16ம் தேதி பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. 

அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என்று மட்டுமில்லாமல் இந்த ஆண்டு சமூக சேவை புரியும் பலருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், சாதாரணமாணவர்களும் இந்தாண்டு பத்ம விருதுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது சிறப்பு. மதுரையைச் சேர்ந்த மூதாட்டி சின்னப்பிள்ளை, இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ராமசாமி ஆகியோரும் இதில் அடங்குவர். 

சமூக சேவைக்கு 15 பேர், சிறப்பான மற்றும் குறைந்த செலவில் சிகிச்சை அளித்தமைக்கு மருத்துவர்கள் 15 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரபலங்களை மட்டும் கருத்தில்கொள்ளாமல் உண்மையாக நாட்டுக்கு நலன் புரிந்த சாதாரண நபர்களுக்கும் பத்ம விருது வழங்கப்படுவது அந்த 'பத்ம விருது'க்கு தான் சிறப்பு என்றே கூறலாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close