காதலும் கடந்து போகும்: நமக்குள்ளே கதிரும் யாழினியும்!

  Saravanan   | Last Modified : 11 Jul, 2018 02:14 pm

'காதலும் கடந்து போகும்' வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டிய பகிர்வு இது.

'சூது கவ்வும்' இயக்குநரின் இரண்டாவது படைப்பு, அதுவும் படத்தின் தலைப்பிலேயே காதல் என்பதால் ரொமான்டிக் ததும்பும் டிஜிட்டல் காவியமாக இருக்க வாய்ப்புண்டு என்றெல்லாம் எண்ணிக்கொண்டு படம் பார்த்த எத்தனை பேருக்கு முழு திருப்தி ஏற்பட்டிருக்கும்?

ஆனால், சமகால தமிழ்ச் சூழலில் காதலுணர்வை அப்பட்டமாக பிரதிபலித்த இப்படி ஒரு படைப்பு அரிதினும் அரிது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

இயல்பான காதல் அனுபவங்களில் 'காதல்' என்ற சொல்லும், 'ஐ லவ் யூ' எனும் வாக்கியமும் மிகவும் அரிதாகவே உதிர்க்கப்படுபவை. நம் அனுபவங்களுக்குள் புதைந்துள்ளதுதான் காதலே தவிர, வார்த்தைகளால் வெளிப்படுத்துவது அல்ல என்பதையே 'காதலும் கடந்து போகும்' படமும் நமக்கு உணர்த்தும்.

நம்மில் பெரும்பாலானோரும் காதல் உணர்வுகளை உள்ளேயே ஆழமாகப் புதைத்து வைத்துவிட்டு, அது இருக்கும் இடம் தெரியாத அளவுக்குதான் அந்த உணர்வை வெளிப்படுத்தி வருகிறோம். உண்மையில், 'காதல் உணர்வை நாம் வெளிப்படுத்துவதே இல்லை' என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அதைத்தான் கதிரும் யாழினியும் செய்கிறார்கள்.

சென்னையில் வேலை பறிபோக, புதிய வேலை தேடும் ஐ.டி. துறையைச் சேர்ந்த வெளியூர் பெண் யாழினி. அலட்சிய அழகும், இயல்பு தைரியமும், லட்சிய வெறியும் நிறைந்தவர். எளியவர்கள் வாழும் குடியிருப்பு அடுக்ககத்தில் தற்காலிகமாக குடியேறுகிறார். அவருக்கு எதிர்வீட்டில் கதிர். நல்லவர்கள் என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு ரவுடியிஸ சிந்தனையுடன் வாழ்பவர்களுக்கு மத்தியில், நல்ல மனித மனம் படைத்த ரவுடி. இயல்பான முரண்பாடுகளுடன் நட்பு தொடங்குகிறது. 

மனிதர்களுக்கே உரிய சிறப்புகளுள் ஒன்றாக, எந்தப் புள்ளியில் நெருக்கம் ஏற்பட்டது என்று தெரியாத அளவுக்கு அந்த உறவு வலுக்கிறது. தங்களுக்கிடையிலான உறவு வலுத்துள்ளது என்பதை இருவருமே எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.

நாம் திரையில் கண்ட இயல்பு மீறிய காதலையும், அதன் அதீத உணர்வு வெளிப்பாடுகளையும் பார்த்துப் பார்த்து, அதுபோன்ற கதைகளுக்கும் காட்சிகளுக்கும் நம் மைண்ட் செட்டாகிவிட்டது. எனவே, காதலும் கடந்து போகும் எனும் இயல்பான காதல் சினிமா சொல்லும் ரொமான்ட்டிக் தன்மையைப் புரிந்துகொள்ளவும், அதை உள்வாங்கி அனுபவிக்கவும் இரண்டாவது முறையாக படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வலுவானது.

2010-ல் வெளியான ‘மை டியர் டெஸ்பிராடோ’ எனும் கொரிய திரைப்படத்தின் உரிமை விலைகொடுத்து வாங்கப்பட்டு, அதை அதிகாரபூர்வமாக தமிழில் கச்சிதமாக ரீமேக் செய்திருக்கிறார் நலன் குமாரசாமி. இந்த நேர்மையான அணுகுமுறையை பாராட்டியே ஆகவேண்டும். 

'திரைக்கதையில் திருப்பங்களே பெரிய அளவில் இல்லை. ரொம்ப ரொம்ப மெதுவாக நகர்கிறது கதை' என்கிற ரீதியிலான கருத்தை அதிகம் பார்க்க முடிந்தது.

- இதுவும் தமிழ் சினிமாவில் போலியாகக் கையாளப்படும் திரைமொழியைப் பார்த்துப் பார்த்து நம் மூளையை வளர்த்துக்கொண்டதன் விளைவுதான். நம்மில் பலருக்கும் ஸ்லோ மூவிக்கும், போரிங் ஃபிலிமுக்குமான வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது. 

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். நம் வாழ்க்கை எப்படி நகர்கிறது? மெதுவாகத்தானே செல்கிறது. ஆனால், போர் அடிக்கிறதா? இல்லைதானே. நம் அன்றாட வாழ்க்கையே மெதுவாகச் செல்லும்போது, அதை சினிமா எனும் கலை வடிவில் பார்க்கும்போது பெரும் பரபரப்பாக இருப்பதுபோல் காட்டுவதும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்று கருதுவதும் எவ்வளவு பெரிய அபத்தம்?

அப்படிப் பார்க்கும்போது, காதலும் கடந்து போகும் திரைக்கதையும் இயல்பான வேகத்தில் மெதுவாகவே நகர்கிறது. ஆனால், எந்த இடத்திலும் அலுப்பு ஏற்படாத வகையில் நகர்த்தியதுதான் அதன் சிறப்பு.

யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தான் நினைத்ததை அப்படியே செய்து முடிக்க களமிறங்கும் 'காதலும் கடந்து போகும்' கதிர் கதாபாத்திரமும் அரிதான ஒன்று. அதை விஜய் சேதுபதி கச்சிதாமாகச் செய்திருப்பார்.

நம்மால் கதிர் மாதிரி நடந்துகொள்வது என்பது கனவிலும் சாத்தியம் இல்லாதது. தன்னுடைய யாழினி ஒரு முக்கியமான வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக, தன்னை பைத்தியமாக பலரும் நினைத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்று தனக்குத் தெரிந்த யுக்திகளைக் கையாள்கிறாரே... அந்த இன்டர்வியூ காட்சிகள் நம்மை வெடித்துச் சிரிக்க வைக்கலாம்; கைதட்டி ரசிக்க வைக்கலாம்... ஆனால், அந்த கதிரின் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்க்க முடியுமா?

நிச்சயம் முடியவே முடியாது. அதுதான் கதிர்.

தன் சாதி மேட்ரிமோனியலில் வாழ்க்கைத் துணையைத் தேடும் தேசத்தில், பொருளாதார - சமூகப் பின்னணிகளை கண்டுகொள்ளாமல் நல்ல மனம் மீது நம்மில் எத்தனை பேர் காதல் வயப்படுகிறோம்?

யாழினியின் காதலும் காத்திருப்பும் தேடலும் 'ப்யூர் லவ்' என்பதற்கான விளக்கத்தை மறைமுகமாகச் சொல்லிச் செல்கின்றது.

நாம் அன்பு செலுத்துவோரின் நலனுக்காக, நம்மில் எத்தனை பேர் நமது வெற்று இமேஜை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறோம்... கதிர் போல.

இப்படியாக காதல் உணர்வின் இயல்பு மீறாத வெளிப்பாடுகளைக் கச்சிதமாக சொல்லும் 'காதலும் கடந்து போகும்' கொண்டாடத்தக்க காதல் சினிமா என்றால் அது மிகை ஆகாது ஒருபோதும்.

- கீட்சவன்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.