கதாநாயகனாக மாறிய இயக்குநர்களின் ஏற்றமும் இறக்கமும்!

  பால கணேசன்   | Last Modified : 14 Jun, 2018 06:05 pm
tamil-directors-turned-actors-ups-and-down

எல்லா இயக்குநருக்குள்ளும் ஒரு நடிகன் ஒளிந்திருக்கிறான். ஏனெனில், ஒரு கதாபாத்திரத்தை இயக்குநர் தன் மனதில் வடிக்கும்போதே அந்தக் கதாபாத்திரம் எப்படி நடக்கும், எப்படி ஒரு விஷயத்திற்கு எதிர்வினை அளிக்கும் போன்ற விஷயங்களை எல்லாம் தன் மனதிற்குள்ளேயே படமாக ஓட்டிப் பார்த்துவிட்டே பின்னர் படப்பிடிப்புக்கு செல்வார்கள். அப்படி உருவாகும் படங்களே மிகப்பெரிய வெற்றியையும் அடையும். அப்படி தான் இயக்கிய படத்தில் தானே நாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த சில இயக்குநர்களை பற்றிய ஒரு பார்வையே இந்தக் கட்டுரை.

விசு

எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்தில் முதன்முதலில் முக்கிய கதாபாத்திரத்தில் விசு நடிக்கும் முன்னரே பல படங்களில் கதை, வசனம் எழுதி பிரபலமாகி இருந்தார். 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்தின் திரைக்கதையும் விசுவுடையதே. இந்தப் படத்தில் இவர் நடித்த ஸ்ரீனிவாச ராகவன் என்னும் கதாபாத்திரம் மிகவும் புகழ்பெற்றது. எந்த வேலைக்கும் செல்லாமல் வீணாக வெட்டி நியாயம் பேசித் திரியும் ஒரு மனிதராக அதகளப்படுத்தி இருப்பார் விசு. பைத்தியக்கார வைத்தியர் வசனமும் மிகவும் புகழ்பெற்றது. 

இதன் பின்னர் விசு இயக்கிய 'மணல் கயிறு' படம் இவர் திரை வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் இவர் நடித்த உத்திரமேரூர் நாரத நாயுடு என்கிற கதாபாத்திரம் இவர் நடித்த பாத்திரங்களில் மிகவும் கவனம் பெற்று பாராட்டுகளை குவித்த ஒன்று. இதைத் தொடர்ந்து இவர் இயக்காத பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.

பின்னர் இவர் எடுத்த 'சிதம்பர ரகசியம்' படத்தில் அதுவரை ஏற்றிராத - அதன் பின்னும் நடித்திராத சி.ஐ.டி கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் திரையில் சண்டையிடுவற்கு ஏற்ற உடல்வாகோ அல்லது சி.ஐ.டி அதிகாரிக்கு ஏற்ற உடல்மொழியோ இல்லையென்றாலும் கூட சற்று வித்தியாசமாக சிந்திக்கக் கூடியவர் என்கிற பெயர் இவருக்கு இருந்ததாலும், அந்தக் கதாபாத்திரம் துப்பறியும் முறை கொஞ்சம் நகைச்சுவையாகவும் இருந்ததால் ரசிக்கும்படி இருந்தது. 

ஆயினும், விசுவின் 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் வந்த அம்மையப்ப முதலியார் என்னும் கதாபாத்திரத்திற்கு முன்பு அவரது மற்ற எல்லா பாத்திரங்களும் காணாமல் போய்விடும். அந்தளவிற்கு அருமையானதொரு நடிப்பை வழங்கி இருப்பார். ஆரம்ப காலகட்டத்தில் மேடை நாடகங்களில் நடித்த இவரின் அனுபவம் இந்தப் படத்தில் இவருக்கு பெரிதும் உதவியது.

குறிப்பாக, ரகுவரனுக்கும் இவருக்குமான வாக்குவாத காட்சியில் ஒரு பெரிய யுத்தமே நடக்கும். இன்றளவுக்கும் அந்தக் காட்சி பலருக்கும் பிடித்த காட்சியாக இருப்பதற்கான காரணம், அந்தக் காட்சியில் விசு மற்றும் ரகுவரன் இருவரும் கொடுத்திருந்த மிகச்சிறந்த நடிப்பே! ஆனால், 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் மிகப்பெரிய வெற்றி இவரது நடிப்பை கடுமையாக பாதித்தது. இதைத் தொடர்ந்து இவர் இயக்கிய படங்களும், அதில் இவர் கதாபாத்திரங்களும் ஒரே மாதிரி அமைய, இதன் காரணமாக இவர் படங்களை ரசிக்கும் தன்மை குறைந்தது.

கே.பாக்யராஜ்

இயக்குநர் பாரதிராஜா உதவியாளர்களில் மிக முக்கியமானவர் கே.பாக்யராஜ். பாரதிராஜாவின் உதவி இயக்குநர்கள் பலரும் அவரின் படங்களில் ஒரு சிறு வேடத்திலாவது நடித்துவிடுவார்கள். அப்படித்தான் '16 வயதினிலே' படத்திலும், 'கிழக்கே போகும் ரயில்' படத்திலும் சிறு சிறு வேடங்களில் பாக்யராஜ் நடித்தார். பின்னர் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்திலும் அவர் நடித்தார்.

இதைத்தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய 'புதிய வார்ப்புகள்' படத்தில் பாக்யராஜை அவர் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். படமும் வெற்றியடைய, பின்னர் பாக்யராஜ் கதை வசனம் எழுதிய 'கன்னி பருவத்திலே' படத்திலும் நடித்தார். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக பாக்யராஜ் முதன்முதலில் இயக்கிய 'சுவரில்லா சித்திரங்கள்' படத்தில் நடிக்கவில்லை. 1980-ல் வெளிவந்த 'ஒரு கை ஓசை' படத்தில்தான் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் தோன்றினார். அதைத் தொடர்ந்து அவர் நடித்த 'மவுன கீதங்கள்', 'இன்று போய் நாளை வா', 'அந்த ஏழு நாட்கள்', 'தூறல் நின்னு போச்சு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்', 'முந்தானை முடிச்சு' என எலலாமே மிகப்பெரிய வெற்றிப்படங்கள். 

அந்தக் காலகட்டத்தில் கே.பாக்யராஜின் படங்களுக்கென்று தனி சந்தையே உருவானானது. இந்த எல்லா படங்களிலுமே கதைக்கான நாயகன் என்கிற தோற்றம் பாக்யராஜுக்கு கிடைத்தது. அவரது திரைக்கதை அமைக்கும் திறமையின் காரணமாக நடிப்பில் பெரிய முன்னேற்றம் இல்லாவிட்டாலும் கூட அது ஒரு பெரிய குறையாகவே தோன்றவில்லை. மேலும் அந்நேரத்தில் பாக்யராஜுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. இதில் பெண்களே அதிகம்.

இவரது இந்த புகழின் காரணமாக ரஜினி நடித்த 'நான் சிகப்பு மனிதன்', 'விதி' போன்ற படங்களில் கவுரவ வேடத்தில் தோன்றி நடித்துக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து 'எங்க சின்ன ராசா', 'இது நம்ம ஆளு' (இதன் இயக்கம் மட்டும் எழுத்தாளர் பாலகுமாரன்) 'ராசுக்குட்டி' போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தார். 

'ஆராரோ ஆரிரரோ', 'என் ரத்தத்தின் ரத்தமே', 'அவசர போலீஸ் 100' போன்ற படங்கள் சுமாரான வெற்றியை பெற்றன அல்லது தோல்வியடைந்தன. அதன்பின்னர் அரசியல் காரணங்களால் சிறிது காலம் ஒதுங்கி இருந்த பாக்யராஜ் பின்னர் 'வேட்டியை மடிச்சுக்கட்டு' படம் மூலம் மீண்டும் இயக்குநராக வந்தார். ஆயினும் அதன்பின்னர் குறிப்பிடும்படியாக எந்த வெற்றியையும் அவரால் பெற இயலவில்லை. பின்னர் சில படங்களில் தன் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் இடம்பெற்ற இவரது கதாபாத்திரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

பாண்டியராஜன் 

இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராக 'முந்தானை முடிச்சு' வரை வேலை பார்த்த பாண்டியராஜன் முதன்முதலில் இயக்கிய படம் 'கன்னிராசி'. பிரபு கதாநாயகனாக நடித்த இந்தப் படம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே 'ஆண் பாவம்' படம் எடுப்பதற்கான வாய்ப்பு பாண்டியராஜனுக்கு கிட்டியது.  'கன்னிராசி'யில் ஒரே ஒரு காட்சியில் வந்தார் என்றாலும் கூட தனது பலம் காமெடி கதைகள்தான் என்பதை அவர் 'கன்னி ராசி'யிலேயே உணர்ந்துவிட்டார்.

சிறுவயதிலேயே நடிக்கும் ஆர்வம் பாண்டியராஜனுக்கு இருந்தாலும் இவரது உயரம் அதற்கு தடையாக இருந்தது. ஒரு பரிசோதனை முயற்சியாகத்தான் 'ஆண் பாவம்' படத்தில் இவர் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். ஆனால் படத்தில் மற்ற எல்லா கதாபாத்திரங்களையும் தூக்கி சாப்பிடும் வண்ணம் இவரது கதாபாத்திரமும், திரைக்கதையும் அமைய, இவருக்கு தொடர்ந்து கதாநாயகன் வாய்ப்புகள் வந்தன.

பின்னர் இவரே 'மனைவி ரெடி', 'நெத்தியடி' போன்ற படங்களை இயக்கி, அதில் கதாநாயகனாக நடிக்கவும் செய்தார். 'நெத்தியடி' படத்தின் இசையமைப்பு பணிகளையும் இவரே செய்தார். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் இவர் நடித்த 'கதாநாயகன்' மற்றும் 'வாய்க்கொழுப்பு' படங்கள் அதன் நகைச்சுவைக் காட்சிகளுக்காகவே 100 நாட்களை கடந்து ஓடியது. ராஜசேகர் இயக்கத்தில் நடித்த 'பாட்டி சொல்லை தட்டாதே' படமும் ஹிட்டானது. அதன்பின்னர் இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் அதில் எந்தப் படமும் குறிப்பிடத்தக்க வெற்றியை அடையவில்லை. 

அதைத் தொடர்ந்து, ஆறு வருடங்கள் கழித்து இவரே இயக்கிய படம்தான் 'சுப்ரமணிய சுவாமி'. ஒரு மலையாள படத்தின் ரீமேக்கான இந்தப் படம் சுமாராக ஓடியது. பின்னர் 'கோபாலா கோபாலா' படம் இவரே இயக்கி நடித்தார். அதன்பின்னர் குறிப்பிடும்படியாக எந்தப் படமும் இவர் இயக்கவில்லை. ஆனால் நிறைய படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க தொடங்கினார். 'அஞ்சாதே' படத்தில் இவரின் கதாபாத்திரம் பரவலாக பலராலும் பேசப்பட்டது. சொல்லப்போனால் இவர் நடிப்பு வாழ்க்கையில் இவருக்கு பக்காவாக பொருந்திய அற்புதமான ஒரு கதாபாத்திரம் அது. 

ஆர்.பார்த்திபன் 

இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தபொழுது 1986-ல் 'தாவணி கனவுகள்' படம் வெளிவந்தது. அதில் ஒரு தபால்காரராக சிறு வேடத்தில் வருவார் பார்த்திபன். அதன்பின்னர் இவர் முதன்முதலாக இயக்கிய படம்தான் 'புதிய பாதை'. இந்தக் கதையை முதலில் பார்த்திபன், கமல்ஹாசனிடம் சொன்னார். ஆனால் அந்தக் கதையில் அப்போதிருந்த முன்னணி நடிகர்கள் யாரும் நடிக்க தயாராய் இல்லை. கதைப்படி பணத்திற்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் கதாநாயகனாக பார்த்திபனே நடித்தார். படமும் வெளியாகி யாருமே எதிர்பாராவண்ணம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றது. 

இதன்பின்னர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் இவர் இயக்கிய 'பொண்டாட்டி தேவை' சுமாராகவே ஓடியது. இடையில் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் 'தாலாட்டு பாடவா' படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின்னர் இவர் இயக்கிய சுகமான சுமைகளும் பெரிய வெற்றி அடையவில்லை. 1993-ல் இவர் இயக்கி, நடித்து வெளிவந்த 'உள்ளே வெளியே' படம் வெற்றிபெற்றாலும் கூட பலத்த எதிர் விமர்சனங்களை பெற்றது. 'சரிகமபத நீ' மற்றும் 'புள்ளகுட்டிக்காரன்' இரண்டும் சுமாராக ஓடியது. அதன்பின்னர் பிறர் இயக்கும் படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். அதில் சேரனின் இயக்கத்தில் நடித்த 'பாரதி கண்ணம்மா', கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் நடித்த 'சுவர்ணமுகி' ஆகியவை நல்ல வெற்றியை பெற்றன. 

பின்னர் 1999-ல் பார்த்திபன் மீண்டும் ஒரு படம் இயக்கி அவரே கதாநாயகனாக நடித்து தேசிய விருதும் பெற்றார். அந்த படம்தான் 'ஹவுஸ்புல்'. பார்த்திபனின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக இதை சொல்லலாம். ஏனெனில் அறிமுகமான படத்தில் தேசியவிருது பெற்று பின்னர் அவருக்குள் இருந்த நல்ல இயக்குநர் காணாமல் போய் மீண்டும் பத்து வருடம் கழித்து சிறந்த படத்திற்கான தேசிய விருது வாங்குவது இங்கே பலருக்கும் சாத்தியமே இல்லை. ஆனால் அதை பார்த்திபன் சாதித்தார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் வயதான ஒருவரின் வேடம் ஏற்று அதற்கு நியாயம் செய்யும் வகையில் நடிப்பையும் தந்திருந்தார்.

அதன் பின்னர் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' குறிப்பிடத்தகுந்த படமாக அமைந்தது. இவர் இயக்கி நடித்த 'இவன்', தங்கர்பச்சான் இயக்கத்தில் நடித்த 'அழகி' மற்றும் 'தென்றல்', பத்மாமகன் இயக்கத்தில் நடித்த 'அம்முவாகிய நான்' ஆகிய படங்களிலும் சிறந்த நடிப்பை வழங்கினார்.

சேரன்

'பாரதி கண்ணம்மா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சேரன் பின்னர் 'பொற்காலம்', 'தேசிய கீதம்', 'வெற்றிக்கொடி கட்டு', 'பாண்டவர் பூமி' என வரிசையாக பல நல்ல படங்களை இயக்கினார். பின்னர் 2001-ல் 'ஆட்டோகிராப்' படத்தை எடுக்க நினைத்து முதலில் நடிகர் விக்ரமை அணுகினார். சில பல காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக பின்னர் பிரபுதேவா நடிப்பதாக இருந்தது. அதுவும் முடியாமல் போக இறுதியில் அவரே கதாநாயகனாக நடிக்க முடிவெடுத்தார்.

சொந்த தயாரிப்பு என்பதால் படத்திற்கு தொடர்ந்து பொருளாதார ரீதியாக பிரச்சினை ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இதற்கு நடுவில் 2002-ல் தங்கர்பச்சான் இயக்கத்தில் 'சொல்ல மறந்த கதை'யில் நாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் நடித்த பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமான ஆளாக சேரன் இருந்தார். 

பின்னர் மீண்டும் 'ஆட்டோகிராப்' எடுக்க ஆரம்பித்து ஒருவழியாக 2004-ல் படம் வெளியானது. ஆரம்பத்தில் மெதுவாக இருந்த வசூல் படம் பெற்ற நல்ல விமர்சனத்தின் காரணமாக அதிரி புதிரி வெற்றியை பெற்றது. பலரும் தங்கள் பால்ய மற்றும் இளமை காலத்தை அடையாளம் கண்டுகொள்ளும் படமாக இதை பார்த்தனர். செந்தில் என்கிற கதாபாத்திரத்தில் சேரன் நன்றாக நடித்திருந்தார். இதன் பின்னர் தான் இயக்கிய எல்லா படங்களிலும் இவரே கதாநாயகனாக தோன்ற ஆரம்பித்தார். 'தவமாய் தவமிருந்து', 'மாயக்கண்ணாடி' ஆகிய இரண்டு படங்களுமே வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும் கூட பெரிய வெற்றியை பெறவில்லை. மேலும் இவரது நடிப்பில் ஒரு க்ளிஷே தன்மையும் இருந்தது. 

பின்னர் கரு.பழனியப்பன் இயக்கத்தில் 'பிரிவோம் சந்திப்போம்', ஜெகன்நாத் இயக்கத்தில் 'ராமன் தேடிய சீதை' ஆகிய படங்களில் நடித்தபின்னர், மீண்டும் தனது இயக்கத்தில் 'பொக்கிஷம்' படம் எடுத்தார். இதன்பின்னர் மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடித்த 'யுத்தம் செய்' இவரது நடிப்பு அனுபவத்தில் சிறந்த படமாக அமைந்தது. குறிப்பாக காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் ஒரு வழக்கை விசாரிக்கையில் ஒரு காவல்துறை அதிகாரி எதிர்கொள்ளும் கடினங்களை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல் 'முரண்' மற்றும் 'சென்னையில் ஒருநாள்' ஆகிய இரண்டு படங்களும் வித்தியாசமான ஒரு நடிப்பை வழங்க உதவி செய்தது. 

எஸ்.ஜெ.சூர்யா

எஸ்.ஜெ.சூர்யா இயக்கத்தில் 1999-ல் வெளிவந்த 'வாலி' அஜித் வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம். பின்னர் அடுத்த படமாக விஜய்யை வைத்து 'குஷி' எடுத்து மாபெரும் வெற்றிப்படம் கொடுத்தார். இதற்குப் பின் அஜித்-ஜோதிகா நடிப்பில் 'நியூ' என்றொரு படம் எடுப்பதாக அறிவிப்பு வந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்னை காரணமாக படம் நின்றுவிட, மீண்டும் 'குஷி' படத்தையே தெலுங்கு மற்றும் இந்தியில் எடுத்தார். இந்த மூன்று மொழிகளிலுமே ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்தார். ஏற்கெனவே இவர் 'கிழக்கு சீமையிலே', 'ஆசை' போன்ற படங்களில் இதே போன்று ஒரு காட்சியில் தோன்றும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

2004-ல் தானே கதாநாயகனாக நடித்து 'நியூ' படத்தை இயக்கினார். படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்களும், காட்சிகளும் நிரம்பி வழிந்தது. மாதர் சங்கங்கள் படத்தை எதிர்த்து போராட்டங்கள் கூட நடத்தின. ஆனாலும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பின்னர் 2005-ல் மீண்டும் தானே நாயகனாக நடிக்க 'அன்பே ஆருயிரே' படத்தை எடுத்தார். 'நியூ' படத்திற்கும் இதற்கும் கதை மட்டுமே வித்தியாசம். மற்றபடி இதிலும் இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்து இருந்தன. அதேபோல் இவரின் நடிப்பிலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ஒரே வசனத்தை மீண்டும் மீண்டும் கூறி குரல் ஏற்ற இறக்கத்தோடு பேசுவதும், சற்று சைக்கோத்தனமாக காட்சிகளில் தோன்றுவதும் தொடர்ந்தது. இதன்பின்னர் படங்களை இயக்காமல் வேறு இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். 

'திருமகன்', 'வியாபாரி', 'நியூட்டனின் மூன்றாவது விதி' ஆகிய படங்கள் குறிப்பிடும்படி வெற்றியை பெறவில்லை. இடையில் தெலுங்கில் பவன் கல்யானை வைத்து 'புலி' என்றொரு படம் எடுத்து சூடுபோட்டுக் கொண்டார். பின்னர் 2015-ல் தமிழில் 'இசை' என்றொரு படத்தை எடுத்து அதில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்தப் படத்தின் இசையமைப்பாளரும் இவர்தான். (இந்த வகையில் பாக்யராஜ், பாண்டியராஜ் மற்றும் எஸ்.ஜெ.சூர்யா ஆகிய மூவருமே தலா ஒரு படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளனர். இதில் பாக்யராஜ் மட்டும் 'பவுனு பவுனுதான்', 'ஞானப்பழம்' ஆகிய படங்களுக்கும் இசையமைத்தார். 'இது நம்ம ஆளு' சேர்த்து மொத்தம் மூன்று). பின்னர் அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த 'இறைவி' படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதேபோல் 'ஸ்பைடர்' மற்றும் 'மெர்சல்' படத்தில் வில்லனாகவும் தோன்றினார்.

சசிக்குமார்

இந்த மேற்கண்ட பட்டியலில் மிகக் குறைந்த படங்களை இயக்கிய இயக்குநர் இவர் ஒருவரே! இரண்டே படங்கள்தான் இயக்கியுள்ளார். ஆனால் மற்ற இயக்குநர்களை போல் அல்லாமல் தான் பங்குகொண்ட முதல் படத்திலேயே நடித்த ஒரே இயக்குநர் இவர்தான். 'சுப்ரமணியபுரம்' தமிழில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த படங்களில் ஒன்று. எந்தவித பெரிய அனுபவமும் இல்லாமல் இருந்தாலும் கூட மிகச் சிறப்பான திரைக்கதை மற்றும் மிகச் சிறந்த நடிப்பின் காரணமாக இந்தப் படம் யாருமே எதிர்பாராவண்ணம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழின் க்ளாஸிக் படங்களில் ஒன்றாகவும் இடம்பெற்றது. 

'சுப்ரமணியபுரம்' வெளிவந்த அடுத்த வருடமே சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த 'நாடோடிகள்' படத்தில் நடிக்க, இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் தொடர்ந்து இவருக்கு கதாநாயகனாக வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தன. அந்த நேரத்தில் இவர் தனது இரண்டாவது படமான 'ஈசன்'ஐ எடுக்க ஆரம்பித்தார். ஆனால் ஆச்சர்யப்படும் விதமாக அதில் இவர் நடிக்கவில்லை. இந்தப் படத்திற்கு சில நாட்கள் முன்னர்தான் 'யுத்தம் செய்' வெளிவந்திருந்தது. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே கதைதான் என்பதால் 'ஈசன்' பெரிய அளவில் எடுபடாமல் போனது. 

பின்னர் மீண்டும் சமுத்திரக்கனியோடு சேர்ந்து இவர் நடித்த 'போராளி' திரைப்படம் 'நாடோடிகள்' அளவுக்கு வெற்றியை பெறவில்லை. ஆனால் 2012-ல் வெளிவந்த 'சுந்தரபாண்டியன்' பெரிய வெற்றியை பெற தொடர்ந்து இவர் தென் தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த நாயகனாக வேறு இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். 'குட்டிப்புலி', 'வெற்றிவேல்', 'கிடாரி', 'கொடிவீரன்' போன்றவை இதற்கு உதாரணங்கள். இதில் 'கிடாரி' மட்டும் நல்ல திரைக்கதை அமைந்ததால் படம் சற்று கவனிக்கப்பட்டது. ஆனால் இதில் சசிகுமாரின் கதாபாத்திரத்தில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.

இடையில் இவர் பாலாவின் இயக்கத்தில் நடித்த 'தாரை தப்பட்டை' படமும் தோல்வியையே தழுவியது. இதில் இவர் நடித்த 'பிரம்மன்' மற்றும் 'பலே வெள்ளையத்தேவா' இரண்டு படங்களும் வந்த இடமும் தெரியாது; போன தடமும் தெரியாது. உண்மையில் தன் முதல் படத்திலேயே மறக்க இயலா வெற்றியைக் கொடுத்த ஒரு இயக்குநர் இப்படி நடிக்கிறேன் பேர்வழி என்று வந்து அதையும் சரியாக செய்யாது, சாதியை தூக்கிப் பிடிக்கும் படங்களை செய்வார் என்று திரைப்பட ரசிகர்கள் யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close